Ani Shiva’s Agalya 7

Ani Shiva’s Agalya 7

7

நான் சும்மா எதுவும் செய்யமாட்டேன்… என்று சொன்ன சூர்யாவை பார்த்து, ‘எப்பா சாமி ஆரம்பிச்சிட்டான்’ என்று நினைத்தபடி, சில நொடிகள் யோசித்தவள்… தான் பற்றியிருந்த அவன் கைகளில் முத்தம் ஒன்றை வைத்தாள்… அவனைப் பார்த்தபடி!

இவ்வளவுதானா என்பது போல் அவளைப் பார்த்தவன் வேறு எதுவும் செய்யவில்லை… நீண்ட நேரம் அவளையே பார்த்தபடியிருந்தவன்,

“ஆபிஸ் கிளம்புறேன், நீயும் வரியா?” எனக் கேட்க,

“ஒரு பத்து நிமிஷம், வெயிட் பண்ணுங்க பிளீஸ்…” தானும் அவனுடனே சென்றுவிடலாம் என்றெண்ணி பக்கத்து அறைக்குச் சென்று உடை மாற்றி விட்டு வந்தவள், தன் நீண்ட பின்னலை கழட்டி வார ஆரம்பித்தாள்.

அவளை நெருங்கிய சூர்யா, அவள் தோள்களில் பற்றித் தன்புறம் திருப்பி,

“நீ கேட்டதை மட்டும் நான் உடனே செஞ்சி தர்றேன்னு சொன்னேன்ல?”என்று மென்மையாகக் கேட்க… அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அகல்யாவுக்கு புரிந்துவிட்டது.

“நான் உன் கிட்ட ஒண்ணு கேட்டேனே… பிள்ளை பெற்று குடுன்னு…”என்று ஏக்கமான குரலில் கேட்டான்.

எந்த மனைவியும் உருகித் தான் போயிருப்பாள், கணவன் அப்படிக் கேட்கும்போது. ஆனால் அகல்யாவோ சற்று தயங்கிவிட்டு,

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே…”என்று முடிக்க, “இல்ல முடியாது…” உடனே வந்தது பதில் அவனிடம்!

“சூர்யா ப்ளீஸ்…”என்றாள் மறுபடியும்… அவளது அந்தப் பதிலால் எரிச்சலடைந்தவன்,

“நான் கீழே இருக்கேன்… வா” என்றபடி துரிதமாகக் கீழே சென்றுவிட்டான்…

அதன்பிறகு வந்த நாட்களில் முகம் திருப்பாவிட்டாலும், பழைய மாதிரி ஒரு நெருக்கம் காட்டவில்லை அவன். அவளிடம் எப்போதும் தானே தான் கீழிறங்கி போக வேண்டுமா என்ற கேள்வி அவனுக்குள் இருந்தாலும், அவன் தான் இறங்கிப் போனான்.

சம்சாரம் அது மின்சாரம் ஆயிற்றே!

ஏற்கனவே ‘ஷாக்’ கொடுத்து இருக்கிறாளே? ஏன் திரும்ப வம்பு என்ற நிலை அவனுக்கு!

அதுவும் இல்லாமல் அறிந்து கொண்ட சில விஷயங்கள் அவனது மனதை அரித்தன. அகல்யாவை நினைத்தபோது பாவமாகத்தான் இருந்தது.

இனியாவது வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று தோன்றியது. மற்றவர்கள் வாயிலாகத் தன் வாழ்க்கையைத் தான் வாழக் கூடாது.

இவ்வளவு நடந்தும், சூர்யா அவன் சொன்னபடியே செய்தான்… முதல் மாடியைத் தனி வீடுபோல் மாற்றியாகிவிட்டது… ஏற்கனவே நிறைய அறைகளும் இருந்ததால், சிறு சிறு திருத்தம் மட்டுமே செய்தால் போதும் என்ற நிலை. தனியாக ஒரு சமையலறை, அகல்யா விரும்பியது போல் நவீன பாணியில் ‘மாடுலார் கிட்சன்’.

வேலைகள் மட மட வென நடந்து முடிந்துவிட்டது.

எல்லாமே அவன் மனைவிக்குப் பிடித்தமானதை போல்!

சோபா, டீவி, ஊஞ்சல், மரச்சாமான்கள், திரைச்சீலைகள் கூட… அவளுக்குப் பிடித்தது போலவே செய்து தந்தான்.

கீழே முன்பு வேலை செய்யும் லட்சுமியிடம் சொல்லி ஒரு ஆளை வீட்டு வேலைகளுக்கு ஏற்பாடு செய்தாயிற்று… தங்களுக்கெனத் தனியாக…

இப்படி எல்லாம் ஒருபுறம் நடக்க, அங்கே ராஜம் கடுப்பின் உச்சத்தில் இருந்தார்.

“எங்கேயாவது இப்படியொரு கொடுமை நடக்குமா?”

ராமானுஜம் உடனே ராஜமை மனதில் வைத்து, “அதான் நம்ம வீட்டில் நடக்குதே?”

“நீங்கக் கொஞ்சம் சும்மா இருங்க! நம்ம இரண்டு பேரையும் பார்க்க வேண்டிய கடமை அவங்களுக்கு இருக்கும்போது, அதென்ன தனியா இருக்கிறது?”என்ற ராஜத்திடம்,

“நம்ம பொண்ணு சீதாவுக்கு நீ எவ்ளோ நாள் இந்தத் தனிக்குடித்தனம் ஐடியாவ கொடுத்திருப்பே? அதுவுமில்லாமல் நம்ம பையன் நம்ம வீட்டு மாடியில் தான் இருக்கான், நீ இத்தனை செய்தும்…” ராமானுஜம் நினைவுபடுத்தினார்…

“என்னை ஏதாவது சொல்லலைன்னா உங்களுக்குத் தூக்கம் வராதே?” தன் கணவரை முறைத்த ராஜம் அப்போதும் ஒத்துக்கொள்ளவில்லை.

அவர் எப்போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். அவருக்கு அவரது ஈகோ அவரைக் கீழிறங்கிப் போக விடாது.

“நீ பண்ணப் பிரச்சனை எல்லாம், உன் பையன் வேணா மன்னித்து விட்டு இருக்கலாம், ஆனால் நான் உன் கூடவே இருக்கிறவன், எனக்குத் தெரியும் அது எவ்வளவு பெரிய பாவமென்று… இப்போவும் நீ வாயை மூடலை, முதியோர் இல்லத்துக்கு நானே உன்னைப் பார்சல் பண்ணிடுவேன்…” பொறுமை இழந்தவராகக் கூறினார் ராமானுஜம்…

கப் சிப்… இப்படி எல்லாம் நாட்டாமை செய்யாமல் இருக்க முடியுமா ராஜத்தால்?

மாமியார் என்றாலே வில்லி தானா? ஏன் இப்படியொரு நிலை?

காக்கைக் குருவிபோல அவர்களும் தன் பிள்ளைகளைத் தனி கூடு அமைக்கப் பழக்கக் கூடாதா? என் கூட்டிலேயே இரு, உன் குடும்பத்துடன். ஆனால் நான் வைப்பது தான் இங்கே சட்டம் என்ற ஆணவம் எதற்கு?

ஐந்து அறிவு கொண்ட பறவைகள் கூட இப்படியொரு முடிவை ஒத்துக்கொள்ளத் தயங்குமே!

மகனைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும் இருக்கின்ற பயம் ராஜத்திற்கு சற்று அதிகமாகவே இருந்தது. மருமகள் தன்னிடமிருந்து தன் மகனைப் பிரித்து விடுவாளோ என்ற எண்ணம்தான் ராஜத்தின் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படையாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம்.

அகல்யாவுக்கும் அது தான் பிரச்சனையாக அமைந்தது.

ஆனால் அவள் சூர்யாவை விரும்பியது உண்மை என்றால், அவன் பெற்றோரை எவ்வளவு தூரம் அனுசரித்துப் போயிருக்க வேண்டும்? சிறு விஷயங்களை எல்லாம் பெரிதாக்கிக்கொண்டு, எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றால் வாழ முடியுமா?

நல்ல புரிதல் இல்லை என்பதை விட, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வாழ்க்கையில் நல்லதும், கெட்டதும் இருக்கத் தான் செய்யும். அத்தகையவற்றை சரியாக நடத்தத் தவறியவர்கள் தான், பிரிவுவரை போக நேரிடும்.

நல்ல வேளையாக அகல்யா, அது போன்ற நிரந்தர விபரீத முடிவுக்குச் செல்லவில்லை.

அகல்யாவை முதலிலிருந்தே அவ்வளவு பிடித்தமில்லை தான் ராஜமுக்கு.

ராஜம் வழக்கத்தில் இருக்கும் சில சம்பிரதாயங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என நினைப்பவர். தன் மகளையும் அப்படித்தான் வளர்த்து இருந்தார். அகல்யாவைப் பெண்பார்க்கச் சென்ற பொழுதே அவளின் நடவடிக்கைகளில் ராஜத்திற்கு உடன்பாடில்லை என்றே சொல்ல வேண்டும்.

என்ன செய்ய… தன் மகன் ஆசைப்பட்டுவிட்டான் என்பதற்காகவும் இதற்கு மேலும் அவன் திருமணத்தைக் காலம் தாழ்த்தவும் முடியாது என்றுதான் ஒத்துக்கொள்ளும்படியானது.

ராஜம் தன் பெண் சீதாவின் மேல் உயிரையே வைத்திருந்தார். எல்லா அம்மாக்களும் அப்படிதானே? ஆனாலும் இவள் ஒரு படிமேல் தான்.

மகன் சம்பாதிக்க ஆரம்பித்ததும் அவன், தன் விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன் தன் மகளின் பொருளாதார நிலையை உயர்த்தி விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்தார்.

அவரும் என்ன செய்வார்? தன் ஆரம்ப நாட்களில் கஷ்டப்பட்ட காலத்தில் எவ்வளவு துன்பம், வேதனை, அவமானங்களைச் சந்தித்திருப்பார்… தன் நிலைமைபோல் தன் பெண்ணுக்கு வந்து விடக் கூடாது என்று ஒரு தாய் நினைப்பதில் தவறில்லையே…

தன் மகளை ஒரு கவுரவமான குடும்பத்தில் தான் திருமணம் செய்து தர வேண்டும் என்று அவள் வேண்டாத தெய்வம் இல்லை.

ஒரு வழியாகத் தான் நினைத்தபடி அவளுக்கு நல்ல இடத்தில் வரனும் அமைந்தது…

ராமானுஜம் தான் இடையில் வந்தார்,

“நமது நிலைமையே இன்னும் சரி ஆகலை, இவ்ளோ நகை, பணம் எல்லாத்துக்கும் நான் எங்கே போறது?”

“அதான் பையன் இருக்கான்ல?”என்று ராஜம் இழுக்க,

“ஏன் டீ, அவன் என்ன காசை அங்க மரத்தில் பறிச்சு அனுப்புறானா? ஒருத்தன் செய்றான்னா அதுக்காக அவனை ரொம்ப படுத்துறதா?”

இவரிடம் பேசக் கூடாது, ‘நேர்படப் பேசு’ என்று தான் அவரது பேச்சு இருக்கும். சூர்யா போன் செய்யும் போதெல்லாம், அவனை மெருகேற்றினாள்…

“சூர்யா, எனக்கு சீதா நல்ல இடத்தில் வாழவேண்டும் பா, அப்பா நகை பணமென்று யோசிச்சிட்டு படிக்காத மாப்பிள்ளையா பார்குறாரு…” என்று கண்கலங்கிக் கொண்டு கூற, தாய் கலங்குவதை பிள்ளை பொறுத்துக்கொள்ளுவானா?

அப்பாவிடம் பேசுவான், “அப்பா பணத்தை பத்தி எல்லாம் கவலைப் படாதீர்கள்… நான் பார்த்துக்குறேன் பா, நீங்க சீதாவை நல்ல மாப்பிள்ளைக்கே குடுங்க…”

சீதாவும் அண்ணன் நிலையை நன்கு அறிந்தவள், அவனிடம் பேசும் போதெல்லாம்… “படிப்பு இருக்கோ, படிக்கவில்லையோ யாரா இருந்தா என்ன? என்னை நல்லா பார்த்துகிட்டா போதும் அண்ணா, நீ கஷ்டப்படாதே…” தனக்கு எந்தவிதமான ஆசையும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறாள்.

சூர்யாவின் தம்பி ஜெயந்தும் அப்பா பக்கமே பேசினான்.

“ஏன் மா, நமக்கு ஏத்த மாதிரி சம்மந்தம் பார்த்தா என்ன? நீங்களா முடிவு பண்றீங்க எல்லா விஷயத்தையும்? அண்ணன் இன்னும் எவ்ளோ நாள் தான் கஷ்டப்படுவான்? என்னாலையும் பெரிசா எல்லாம் செய்ய முடியாது… புரிஞ்சிகோங்க…” கறாராகக் கூறிவிட்டாலும், ராஜம் யார் பேச்சையும் சட்டை செய்ய வில்லை.

சூர்யா தான் ஒத்துக்கொண்டானே?

இவர்களுக்கு என்ன?

மாதவன் ஒரு நல்ல மருமகன் தான், தனியார் துறையில் பணி. சீதாவை மிகவும் பிடித்து இருந்தது அவருக்கு.

ஆனால் இவை மட்டிலும் இருந்தால் போதுமா, நகை எல்லாம் வேண்டாம் என்றா இந்த நாட்டில் சொல்லி விடுவார்கள்?

சொன்னால் மட்டும் சுற்றமும் நட்பும் சும்மா இருந்து விடுமா?

அப்படி தான் நடந்தது…

பெண்ணின் அண்ணன் வெளிநாட்டில் இருக்கிறான், ஆதலால் எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மாதவனின் அம்மாவுக்கு. கல்யாணத்தின்போது நாற்பது பவுன் தங்கம், கல்யாண செலவு, வெள்ளி என்று சிம்பிளாக முடித்துவிட்டனர் !

அதற்கே அவர்கள் குடும்பம் என்ன பாடு பட்டது என்று ராமானுஜத்திற்கும், ஜெயந்த்துக்கும், சூர்யாவுக்கும் மட்டுமே தெரியும்.

திருமணம் மிக விமரிசையாக நடந்தது…

போகப் போக தான் சீதாவின் மாமியார் ஆரம்பித்தார்…

பையனுக்கு வண்டி வேண்டும், வீடு கட்ட வேண்டும், நகை இன்னும் வேண்டும்… என்று எதேதோ!

ராமானுஜம் இதற்கெல்லாம் ஒத்துக்கொள்கிற ஆள் இல்லை…

“கல்யாணம் பண்ணியாயிற்று, இனி மாப்பிள்ளை தான் அவர் தேவையைப் பார்த்துக்கொள்ள வேண்டும்… அது என்ன நம்ம கிட்ட கேட்கிறது?” நியாயமாக அவர் பேசினாலும் பதில் பேசமாட்டாள் ராஜம்.

இங்கே என்ன பேச்சு?

சூர்யாவுக்கு போனில் தகவல் பறந்துவிடும்…

இப்படி நடக்கிற பாதி விஷயங்கள் ராமனுஜமுக்கும், ஜெயந்துக்கும் தெரியாமலேயே முடிந்துவிடும்…

ஒரு பெண் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும் என்பதற்கு ராஜம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டே!

இப்படி தான் ஆட்சி செய்துகொண்டிருக்கும் வீட்டில், இன்னுமொரு ஆள் நுழைவதை யார் தான் விரும்புவார்கள்?

இந்தச் சூழ்நிலையில் தான் மகன் சூர்யாவின் திருமணம் நடந்தது!

முடிந்த வரை, சீதாவுக்கு ஒரு குழந்தை வரும் வரையாவது ஒத்திவைப்போம் என்று எண்ணியிருந்தாலும், அவளின் கைமீறி சில விஷயங்கள் நடந்து விட்டதை ராஜத்தினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ராஜம் தன் ஆட்சியை எப்படியெல்லாம் தக்கவைக்கலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில் தான், கல்லூரி படிப்பும் முடிந்தது அகல்யாவுக்கு.

அகல்யா, ஜப்பானிலிருந்து தன் கணவன் வந்தவுடன், முழு நேரம் தன் சூர்யாவுடன் இருக்கலாம் என்ற சந்தோஷத்தில் திருநெல்வேலி வந்திருந்தாள்.

கல்லூரி வாழ்க்கை முடிந்தது.

எத்தனைக் கனவுகள், சோதனைகள், திட்டுக்கள் என எல்லா ‘கள்’களையும் மூட்டைக் கட்டி வைக்கவேண்டியது தான்…

இந்த நிமிஷம் தன்னிடம் வந்து ‘வேலைத் தருகிறோம், சேரத் தயாரா?’ என்று கேட்டால், சூர்யாவை விட்டு எங்கும் போகமாட்டேன் என்று தான் சொல்வாள் அகல்யா…

அந்த அளவுக்குச் சூர்யா பைத்தியம் முற்றி விட்டது அவளுக்கு.

பூவிழிக்கு வேலைக் கிடைத்துவிட்டது. ‘கால் லெட்டர்’ வந்ததும் வேலையில் சேர வேண்டியதுதான்… மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கு ஏனோ ஒன்றும் அமையவில்லை, தேடிக் கொண்டிருந்தான்… சூர்யாவிடம் அவனுக்காகக் கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்…

இந்நிலையில் சூர்யா திரும்பி வர நாளானது, மேலும் ஒரு மாசம் ஆகலாம் என்றிருக்கிறான்.

“சூர்யா என்னையும் கூட்டிட்டு போங்க, நான் ஏன் இங்க தனியா இருக்கனும்?” என்று போனில் கேட்டுப் பார்த்தாள்…

அவனோ, “இல்ல மா, இந்தத் தடவை வேண்டாம், உனக்கு விசா ரெடி ஆகிறதுக்குள்ள எனக்கு இங்க வேலை முடிஞ்சிடும்…” என்று கூறிவிட்டான்…

அகல்யா தன் மாமியார் வீட்டில் முழுநேரமும் இருக்கவில்லை.

வாரத்தில் ஒரு நாள் தங்குவதே அதிசயம்.

அவள் அங்கே தான் இருக்க வேண்டும் என்று யாரும் அவளை வற்புறுத்தவும் இல்லை.

‘நல்லதா போச்சு’ என்று நினைத்துக்கொண்டாள்.

சூர்யா மட்டும் போனில் “அடிக்கடி அங்கே போ மா” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான்…

அதற்காக அங்கே போனால், ‘ஏன் உன் அம்மா வீட்டிலேயே இருக்க வேண்டியது தானே’ என்பது போல் அவ்வளவு கேள்விகள் ராஜத்திடம்…

இவள் போகும்போது தான் வெளிவேலை, கோவில், சடங்கு எல்லாம் சொல்வாள் ராஜம்…

ஏன் இவளையும் அழைத்துச் சென்றால் ஆகாதோ?

இவ்வளவு சிக்கலிலும் அகல்யாவுக்கு அங்கே ஒரே ஆதரவு சீதா தான். அகல்யாவும் சீதா இருக்கும் நேரம் மட்டுமே அங்கே செல்ல வேண்டும் என்று முடிவிலிருப்பாள்.

இரண்டு வயதே அகல்யாவை விட மூத்தவள் சீதா… அமைதி என்பது போல் தெரிந்தாலும், வாய்ப்பு கிடைத்தால் தன் தோழிகளைப் போல ஆட்டம் போடும் பெண் தான் என்று அகல்யாவுக்கு தோன்றும்.

இதற்கிடையில் அகிலன், பூவிழி திருமண பேச்சு ஆரம்பித்தது…

அகிலன் அவன் அம்மா அப்பாவுடன் பூவிழியின் வீட்டுக்குக்கே சென்றுவிட்டான்… அவளின் அப்பாவும் கிரிதரனும் நல்ல அறிமுகம் தான் என்றாலும், இந்த விஷயத்தில் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்று ஒரு அச்சம் அகிலன் மனதில்.

இனி காலம் தாழ்த்த முடியாது என்று கிரிதரனிடம் விஷயத்தை உடைத்துவிட்டான்… அவர் வானத்துக்கும் பூமிக்கும் இடையே எல்லாம் குதிக்கவில்லை… நிதானமாகவே இருந்தவர்,

“அந்தப் பொண்ணுக்கும் இஷ்டம் தானா டா?”என்று கேட்டார்…

நியாயம் தானே? அகிலனிடம் பதில் இல்லை.

“அப்படி தானென்று நினைக்கிறேன் பா…” என்று மொட்டையாகக் கூற,

“சரி பேசிப் பார்க்கலாம்…” என்று கிரிதரன் புரிதலோடு முடித்து விட்டார்.

இதோ பூவிழி வீட்டுக்கே வந்துவிட்டார்கள்… கிரிதரனை போல் ஏன் சில பெற்றோர் பிள்ளைகளின் காதலை, ஆசையை ஆதரிப்பதில்லை? இவன் தேர்வு சரி இருக்காது, பின்னாளில் பிரச்சனை வந்துவிடும் என்றா?

நான் சொல்வதை தான் என் பிள்ளை கேட்க வேண்டும் என்றா?

எதுவானாலும் சரி, வாழப்போகிறவனின் பாடு… பிள்ளை சொல்லும் நான்கு வழியில் ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டுமே தவிர, நான் வேறொரு வழி காட்டுவேன், நீ அதிலே தான் போக வேண்டும் என்று வற்புறுத்துவது சரியா? தவறு எங்குத் தான் நடக்கவில்லை…

எல்லாமே சரியாகச் செய்வதற்கு நாம் என்ன கடவுளா?

சரி… அறிவுரை தான் எல்லாருக்கும் பிடிக்காதே!

ஆனால் இங்கு கிரிதரன் மிக நல்லவர், தன் மகனின் விருப்பத்திற்கு மதிப்பளித்தார்… பூவிழியின் அப்பா நம்பி, எளிமையான மனிதர். அம்மா சுதா, இல்லத்தரசி.

நம்பி, பாளையங்கோட்டை மார்க்கெட்டில், மொத்த வியாபாரம். நல்ல வருமானம். ஒரே மகள், பூவிழி மட்டுமே.

“வாங்க கிரி சார்… நல்ல இருக்கீங்களா…” ஆர்ப்பாட்டமாய் அவர்களை வரவேற்றார் நம்பி.

“நல்ல சுகம்… வியாபாரம் எல்லாம் எப்படி போகுது?” என்று கிரி கேட்க,

“எல்லாம் நல்லா இருக்கு… பூவிழிக்கு வேலை கிடைச்சாச்சுல… இனி எனக்குக் கவலை இல்ல… அகிலன் நல்லா இருக்கியா பா? விவசாயம் எல்லாம் எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு மா…” என்று மாமா ஆரம்பித்தவன் சட்டென்று மாற்றிக்கொண்டு “அங்கிள்… இப்போது காய்கறி தான் போட்டு இருக்கேன்… நல்ல விளைச்சல்…”

அவர் கேட்காத விஷயங்களையும் அகிலன் சேர்த்து சொன்னான்.

“நானும் பூவிழிக்கு கல்யாணம் பண்ணதும், உங்களை மாதிரி தான் விவசாயம் செய்ய வேண்டும் தம்பி…” என்றார் நம்பி அகிலனிடம்.

கிரிதரன் ஆரம்பித்தார், “நம்பி, அது விஷயமா தான் நாங்களும் வந்திருக்கிறோம்! என் பையனுக்குக் கல்யாணத்துக்கு பார்த்துட்டு இருக்கேன், அவன் பூவிழிய தான் கட்டிப்பேன்னு சொல்றான்… உங்களுக்கும் அவனைப் பிடிச்சிருந்தா நாம் மேற்கொண்டு பேசலாமே?” என்று நேரடியாக விஷயத்தைப் போட்டுடைக்கவும், நம்பி தன் மகள் பூவிழியை பொசுக்கிவிடுவதைப் போல் முறைத்தார்!

6 thoughts on “Ani Shiva’s Agalya 7

Leave a Reply to gomathyganesan

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!