Ani Shiva’s Agalya 9

Ani Shiva’s Agalya 9

9

சூர்யா ஜப்பானிலிருந்து வந்ததும் அகல்யாவை கையில் பிடிக்க முடியவில்லை…

எவ்வளவு நாள் பிரிவு?

‘இனி எங்க போனாலும் என்னைக் கூடக் கூப்பிட்டுப் போங்க…’என்று முதல் வேலையாக ஒரு கோரிக்கையை வைத்து விட்டாள்… கம்பெனி வேலை எல்லாம் மறந்துவிட்டது என்ற நிலை தான் சூர்யாவுக்கும்.

ராஜம் கூட, ‘உத்தியோகத்தைப் பார்க்காமல் என்ன வீட்லயே இருக்க?’ என்று அவனிடம் கேட்டதற்கு அவரது கணவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டாள்… தேன்நிலவு தம்பதிகள் போல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றிக்கொண்டிருந்தனர் இருவரும்.

அகல்யா, சீதா மற்றும் ராஜத்திற்கும் ஜப்பானிலிருந்து நிறைய வாங்கி வந்திருந்தான் சூர்யா.

ஆனாலும் ராஜமுக்கு சீதாவின் சாமான் எல்லாம், அகல்யாவினுடையது போல் இல்லை என்று குறை… ராமானுஜத்தினால் இவளது புலம்பலை இரண்டு நாளுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. ஆதலால் ஒரு முடிவுக்கு வந்தவர்,

“நாங்க ஒரு ஆன்மீக சுற்றுலா போகலாமென்று இருக்கிறோம் சூர்யா, கொஞ்சம் ஏற்பாடு பண்ணி கொடேன்” என்று மகனிடம் கேட்க… அவன் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தான்…

ராஜம் சாமி விஷயம் என்பதால் எந்த எதிர்ப்பும் காட்டாமல், சுற்றுலாவுக்குச் சரி என்று விட்டார்.

அவர்கள் திரும்பி வருவதற்கு ஒரு மாதம் மேல் ஆகும் என்று பயணத்துக்குத் தேவையானதை வாங்க, எடுத்து வைக்க என்று அவளது வேலைகளைச் செய்யவே ராஜமுக்கு நேரம் சரியாக இருந்தது.

வீட்டை மருமகள் கையில் ஒப்படைத்துப் போக யோசனை தான், என்ன செய்ய? ஆனாலும் விடாமல், ‘எந்தப் பொருளையும் இடத்தை மாத்திறாதே’ என்று நேரிடையாகவே அகல்யாவிடம் சொல்லிவிட்டுச் சென்றாள்…

அகல்யா இதைக் கேட்பாளா என்ன? ஒரு வழியாக ராஜம் கிளம்பிவிட்டார், சுற்றுலாவுக்கு.

அகல்யாவுக்கு, ‘ஹைய்யா, என் மாமியார் ஊருக்கு போயிட்டாங்க’ என்று சினிமாவில் வந்த ஜனகராஜன் போல் சுத்தி சுத்தி ஓடவேண்டும் என்று ஆசையாகத்தான் இருந்தது.

சூர்யா தப்பாக எண்ணிக் கொள்வானே என்று விட்டுவிட்டாள்!

தான் நினைத்ததை எல்லாம் முடிக்க ஒரு முழு மாதம் கிடைத்தது அகல்யாவுக்கு…

முதலில் சமையல் செய்ய ஆரம்பிக்கலாம் என்று தோன்ற, சமையலுக்குத் தினமும் வந்த லட்சுமியிடம் நிறையவே கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டாள். இது எப்படிச் செய்யவேண்டும், அது எப்படிச் செய்யவேண்டும் என்று ஒவ்வொன்றையும் ஆவலாகக் கேட்க, லட்சுமியும் தன்னை ஒரு சமையல் நிகழ்ச்சி நடுவர் போல் எண்ணி நல்லவிதமாகவே எல்லாவற்றையும் சொல்லி தந்தாள்.

அவருக்கு அப்பாவியான அந்தச் சிறு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது. தனக்குச் சம்பளம் தரும் முதலாளி என்பதை மறந்து தனது மகள் போலவே எண்ணிக்கொண்டு ஆவலாகக் கற்றுக்கொடுத்தார்.

ஆனாலும் சூர்யாவிடம் ரகசியமாக வைத்திருந்தாள் அகல்யா, தன் சமையல் திறனை! அவன் “நீயா செஞ்ச?” என்று கேட்டாலும்,

“நான் உப்பு மட்டும் போட்டேன், நல்லா இருக்கா?” என்று முடித்துவிடுவாள்… அவன் ஆவலுடன் சாப்பிடுவதை ரசித்துக்கொண்டிருக்கப் பிடித்துதிருந்தது…

அடுத்து வீட்டை மாற்றி அமைத்தாள்… எந்தப் பொருளையும் இடத்தை மாற்றி விடாதே என்ற ராஜம்மின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டாள்…

வீட்டுக்கு ஏற்றார் போல் அலங்கார சித்திர வேலைப்பாடும், கைவினை பொருட்கள் முதலியவற்றையும் வாங்கி வீடெங்கும் மாட்டிவிட்டிருந்தாள்.

சூர்யா அவளிடம் வீடே அழகாக மாறிவிட்டதாகப் புகழ்ந்தான்.

புகழ்ச்சிக்கு மயங்காத பெண் இந்தப் பூமியில் உண்டோ? மேலும் மேலும் அவனது புகழ்ச்சியைப் பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பது தான் அவள் முழு நேரச் சிந்தனையே!

அடுத்து வேலையாகச் சேலை கட்டத் தொடங்கினாள்…

சூர்யாவிடம் தனக்கு உடை வாங்க வேண்டும் என்று ஒரு பெரிய தொகையை வாங்கியவள், அவன் அலுவலகம் கிளம்பியதும், தன் அன்னையுடன் சேர்ந்து ஆர்எம்கேவி, போத்தீஸ் என்று அலைத்து ஆராய்ந்து தனக்கேற்றார் போலப் புடவைகளை அள்ளிக் கொண்டு வந்தாள்.

மஹா கூடக் கொஞ்சம் தடுத்து பார்த்தார்…

“முதலில் கட்டிப்பாரும்மா, உனக்குக் கட்ட வசதியாயிருந்தா அப்புறம் நிறைய வாங்கிக்கலாமே” என்று கூறினாலும் அகல்யா தான் முடிவெடுத்து விட்டாளே? அதனால் அம்மா பேச்சையும் கேட்கவில்லை…

இரண்டு டஜன் சேலைகளை வாங்கிய பின் தான் அடங்கினாள்…

வீட்டுக்குத் திரும்பும் முன்னரே பிளவுஸ் எல்லாம் தைக்கக் கொடுத்தாகி விட்டது…

‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற மோடில் அகல்யா இருந்ததால் யாராலும் அவளைத் தடுக்க இயலவில்லை…

கார்த்தி வேலை விஷயமாக சூர்யாவிடம் சொல்லியிருந்ததைச் செயலாற்ற ஆரம்பித்தான் அவன்…

அவனிடம் நேர்காணலுக்கு வந்திருந்த கார்த்தியிடம் பேசியதில், கார்த்தி படித்த துறையும் இங்கே வேலையும் வேறு வேறு தான் என்றாலும் அவன் திறமையானவன் என்று தெரிந்ததால், நம்பி வேலைக்கு எடுத்துக்கொண்டான் சூர்யா.

முதல் ஆறு மாதம், நிறுவனத்துக்குத் தேவைப்படுவதைப் போன்ற கோர்ஸ்களைப் படிக்கச் சொல்லிவிட்டான்… அதனால் சம்பளமும் பாதியே!

அகல்யாவுக்குப் போன் செய்த கார்த்தி,

“அகல்யா இன்றைக்கு சார போய்ப் பார்த்தேன்… வேலையும் கிடைச்சாச்சு… உனக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்…” மனமார சொன்னான்…

“உன் நன்றியை நீயே வச்சிக்கோ… ஒழுங்கா வேலை பார்… எனக்குக் கெட்ட பேர் வாங்கிக் குடுத்திடாதே…” கறாராகச் சொல்லிவிட்ட அகல்யாவிடம்…

“சரிங்க மேடம்…” சரண்டர் ஆனான் கார்த்தி…

“அம்மா அப்பா கிட்ட சொல்லியாச்சா?” என்று அவள் கேட்க

“ஆமா அவங்களுக்கும் திருப்தி தான், ஆனால் இவ்ளோ தள்ளி ஒரு ஊரில் ஏன் பா வேலை பார்க்கவேண்டுமென்று கேட்டார்கள்… அதுக்கு என்னன்னு சொல்லிட்டேன்…” அவன் வேலைக் கிடைக்காமல் எவ்வளவு அலைந்தான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும்…

“ம்ம் சரி சரி… அப்போ வேலையைக் கத்துக்கிட்டு வேற கம்பெனிக்கு போயிடலாம்னு பிளான் பண்றியா மகனே?” மிரட்ட ஆரம்பித்தவளிடம்,

“எம்மா தாயே, ஏதோ பாதிச் சம்பளமாவது தர்றேன்னு சொல்லியிருக்காரு, அதுக்கும் ஆப்பு வச்சிடாதே… வச்சிடுறேன்…” என்று வைத்துவிட்டான்.

அகல்யாவுக்குச் சந்தோஷம், தான் கேட்டதற்காக சூர்யா அவளது நண்பனுக்கு வேலை கொடுத்திருக்கிறானே… மகிழ்ச்சி!

அடுத்த வேலை அகல்யாவுக்கு மிகவும் பிடித்த வேலை… வீட்டுத் தோட்டத்தை மேம்படுத்த ஆரம்பித்தாள். தேக்கு, எலுமிச்சை, வாழை என்று நட்டுவைத்தவள், தினமும் அந்த வேலையில் மூழ்கிபோனாள்…

“இதெல்லாம் உனக்குத் தேவையாடீ?”என்று சூர்யாவே கேட்டான்…

“நீங்களும் வேலைக்குப் போயிடுறீங்க? எனக்கு வீட்டில் போர் அடிக்குது… அதான் இதெல்லாம்” என்று அவள் முடிக்க,

“அம்மா அப்பா அவங்க இஷ்டத்துக்கு ஏதோ வச்சிருக்காங்க, விட்டுடேன்…” என்றவனிடம் சற்று யோசித்து,

“அவங்க கேட்டா, உங்க யோசனை தான் இதுன்னு சொல்லிடுறேன்…’

“அப்படிச் சொல்லிடுவியா? இப்போது செய்யுறதையும் சேர்த்து சொல்லுடீ!” என்று அவளை அதற்கு மேல் அவன் பேச விடவில்லை!

இனிமையாகத் தொடங்கிய ஒரு காலை வேளையில் சுற்றுலா முடிந்து ராஜமும், ராமானுஜமும் வந்துவிட்டனர். அன்று பார்த்து சூர்யாவுக்கு நிறுவனத்தில் மிக முக்கியமான மீட்டிங் என்று சீக்கிரமே கிளம்பிவிட்டிருந்தான்…

வீட்டுக்குள் நுழைந்ததும் ராமானுஜம் முகத்தில் புன்னகை,

“நம்ம வீடா இது? பளிச்சுனு இருக்கே! இது எல்லாம் எங்கே மா வாங்கின?” அவள் புதிதாக அலங்காரமாக வைத்திருந்தவற்றைப் பார்த்துக் கேட்டார்…

“அதுவா, அது வந்து மாமா…” என்று அகல்யா ஆரம்பிக்க…

குறுக்கே புகுந்த ராஜம் “இப்போது தானே வந்தீங்க, அதுக்குள்ள என்ன கதை பேசிட்டு இருக்கீங்க? அப்புறம் பேசிக்கலாம் இதையெல்லாம், போய்க் குளிக்கிற வேலையைப் பாருங்க…” என்று அவரை விரட்டிவிட்டாள்.

அகல்யாவுக்கும் சேர்த்துத் தான் அந்த வாக்கியம். புரிந்துகொண்டவள், சமையலறை பக்கம் ஒதுங்கிக்கொண்டாள்.

லட்சுமி காலையிலேயே வந்து இட்லி, சாம்பார், இடியாப்பம் என்று செய்துவைத்திருந்தாள்… ராமானுஜமும் ராஜமும் அலைச்சலால் மிகவும் களைத்து போயிருந்தனர்…

வெளி உணவு அவர்களுக்கு எப்படியிருந்ததோ?

ராமானுஜம் வழக்கத்தைவிட அதிகம் உண்டார்…

அகல்யாவிடம், “எல்லாம் ரொம்பப் பிரமாதம். நீ செஞ்சியா மா?” எனக் கேட்க,

ராஜம் முந்திக்கொண்டு, “சாம்பார் ஏன் இவ்ளோ தண்ணியா இருக்கு?” என்று குறை கண்டுபிடிக்க, அகல்யாவுக்கு அவள் சொன்னது போல் எல்லாம் ஒன்றும் தோன்றவில்லை.

வேண்டும் என்றே இவர் தன்னிடம் குறை சொல்லுகிறார்… அவர் பேச்சை உதாசினப்படுத்தியவள், தன் மாமனாருக்கு மட்டும் பதிலளித்தாள்,

“நான் செய்யலை மாமா, லட்சுமி அக்கா தான்…” என்று தயங்க, ராஜம் அத்தோடு நிறுத்திக்கொண்டார் தன் பேச்சை…

லட்சுமியின் சமையலை குறை சொல்லி, அதைக் கேட்டுவிட்டு அவள் வேலையை விட்டு நின்றுவிட்டால்? தன் கதி? என்று ராஜத்திற்கு பயம்.

சூர்யா அன்று தன் வேலைகளால் மிகவும் களைத்து போய்விட்டான்… இரவு மிகத் தாமதமாகவே வந்தவன், உறங்க முற்படும்போது அகல்யா,

“இன்றைக்குப் போய் என்னைத் தனியா விட்டுடீங்களே! என்னவெல்லாம் நடந்தது தெரியுமா” என்று ஆரம்பிக்க…

“எனக்கு ரொம்பத் தூக்கம் வருது மா காலையிலே பேசிக்கலாம்” என்று அவன் முடிக்க முயற்சிக்க…

“ஐயோ எனக்குச் சொல்லியே ஆக வேண்டும், தயவுசெய்து கொஞ்சம் கேளுங்களேன்…” என்று அடம்பிடித்தாள்…

சூர்யாவுக்கு அன்று ஏகப்பட்ட பிரச்சனை… அவள் சொல்லியது எதுவும் அவனுக்கு மூளைக்குள் ஏறவுமில்லை… இவன் நிலை எதையுமே அறியாமல், மறுபடி மறுபடி ஏதோ பேச ஆரம்பித்தாள் அகல்யா.

“கொஞ்சம் சும்மா இரும்மா, சொல்றேன்ல, எனக்குத் தூங்கணும்…” என்றுவிட்டுப் படுத்துவிட்டான்…

அகல்யாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது… இவனை நம்பி தானே இருக்கிறோம், என்ன விஷயமென்று கேட்கக் கூட முடியாதா?

இருக்கட்டும்… முதல் சண்டை, இரண்டு நாள் பேசிக்கொள்ளவில்லை சூர்யாவிடம்…

அவனோ அடுத்த நாளே சமாதானமாய் ஏதேதோ சொல்லிப் பார்த்தான்…

“கண்ணு, குட்டி, ஆபிஸ்ல நிறையப் பிரச்சனை மா… அதான் கோபப்பட்டுட்டேன்… சாரி டா…” என்று இறங்கி வந்தான். ஆனாலும் வீம்பு காட்டினாள் அகல்யா, இரவிலும் அவன் நெருங்கினால், எனக்குத் தூங்கணும் என்றுவிடுவாள்…

இப்படியே போக்குக் காட்டி, கோபம் வராத சூர்யாவுக்கே கோபத்தை வரவழைத்த பெருமை நம் அகல்யாவை சேரும்…

வீட்டில் வேறு அவன் இல்லாத சமயம் பார்த்துத் தினமும் புகார் வாசித்தாள் ராஜம்… அது எங்கே? இது எங்கே, இப்படி யாராவது வீட்டை வச்சிருப்பாங்களா? நான் தான் மாத்தாதே என்று சொன்னேனே?

வேலைக்கு வரும் லட்சுமி கூட அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள் இவர்கள் இருவரையும். ஏன் இந்த அம்மா இப்படிக் கத்துது? எல்லாமே அந்தந்த இடத்தில் தான இருக்கு? என்று மனசுக்குள் லட்சுமிக்கு ஒரே கேள்வி.

சூர்யா காலை அலுவலகம் சென்றதும், அகல்யா தினமும் அவள் அம்மா வீட்டிற்குச் சென்றுவிடுவாள். அப்படிச் செல்லும் போதெல்லாம், இப்போதைக்கு அவளுக்குப் பிடித்த அறை சமையலறை தான்… தன் மாமியார் வீட்டில் இந்த அளவுக்குத் தன்னால் சமைக்க முடியாது என்பதால், தன் ஆர்வத்தை எல்லாம் இங்கே வந்து காட்ட ஆரம்பித்தாள்…

அன்றும் ஒரு நாள் அகல்யா சமைத்தாள் அவள் வீட்டில்! சமையலறை வாசலில் கிரி, மஹா, அகிலன் எல்லாம் ஆவலாய் நின்றிருந்தனர் அவள் செய்வதைப் பார்த்தபடி… அகிலன் அவன் அம்மாவைப் படுத்தியெடுத்தான்.

“ஏன் மா அவளை உள்ளே விட்ட? எனக்குப் பசிக்கிறது மா…” என்றவனை நீண்ட நேரம் காக்க வைக்காமல், தான் சமைத்ததை எல்லாம் கடைப்பரப்பினாள் அகல்யா…

அவள் அண்ணனுக்குப் பரிமாறியவளை பார்க்க, இரண்டு கண் போதவில்லை மஹாவுக்கும் கிரி க்கும். படு ருசியாக இருந்தது உணவு. அனைவருமே சப்பு கொட்டி உண்டு முடித்தனர்.

அகிலன் வாயைத்திறந்தான்… பேசத்தான்!

“அகல்விளக்கு சூப்பர்டீ, உன் மாமியார் நல்லா சொல்லிக் குடுத்திருக்காங்க…” கடைசி வாக்கியத்தைக் கேட்டவள், கோபத்தில் அவன் தட்டில் வைக்கப் போன சப்பாத்தியை அவனுக்கு வைக்காமல் மறுபடி ஹாட்பாக்கிலேயே போட்டு மூடிவிட்டாள்.

சாப்பிடும் மும்முரத்தில் இருந்தவன் தன் தங்கை செய்கையைக் கவனிக்கவுமில்லை.

“அவங்க என்னைக் கிட்சன் பக்கமே வர விடமாட்டார்கள் டா…” என்றவளிடம்

“அதுவும் நல்லதுதானே மா, உனக்கு நிறைய வேலை இல்லல” என்று முடித்துவிட்டான் அவள் தமையன்.

இவனுக்குச் சொன்னால் புரியாது… அவன் இருக்கும் கல்யாண மூடில் அவனுக்கு அவள் நிலையைப் புரிய வைத்து, அவன் மனநிலையைக் கெடுக்கவும் அகல்யாவுக்கு இப்போது இஷ்டமில்லை.

சமையலறை என்பது ஒரு குடும்பத் தலைவியின் அரியணை…

இன்று என்ன தான் நான் மாடர்ன், சமைக்கவெல்லாம் மாட்டேன், அதுக்குச் சமையல்காரி வைத்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டாலும், எப்போது நாம் அந்த இடத்தை ஆளுகிறோமோ, அன்று தான் நம் குடும்ப உறுப்பினர்கள் நம் ஆட்சியின் கீழ் உட்படுத்தப்படுகிறார்கள்…

ஏனோ இக்காலத்தில் இதை நாம் புரிந்து கொள்ளத் தயங்குகிறோம்… ஆனால் ராஜம், மஹா போன்றோர் அதை நன்றாகப் புரிந்துவைத்திருந்தனர்.

அகல்யா அவள் வீட்டிலிருந்தபோது தண்ணீர் குடிக்க மட்டுமே சமையலறை பக்கம் செல்பவள்… மஹா எவ்வளவோ சமையல் கத்துக்கோ என்று எடுத்துக் கூறியும் செவி சாய்க மறுத்துவிட்டவள் தான்…

ஆனால் தன் விவாகத்திற்குப் பிறகு, சூர்யாவுக்காக என்று சில முறை கல்லூரியிலிருந்து விடுப்பில் வரும் போதெல்லாம், அந்த வீட்டின் சமையலறை சென்றிருக்கிறாள்…

அப்போதெல்லாம் ராஜம் அவளைப் படுத்தி எடுத்துவிடுவாள்… சீனி டப்பாவை (வாஸ்து சாஸ்திரப்படி!) இந்த ஆங்கிளில் தான் வைக்க வேண்டும், பாலை அவள் சொல்லும் விதத்தில் தான் காய்ச்ச வேண்டும் என்று நிறையச் சட்ட திட்டங்கள் வைத்திருப்பாள்…

ஒருமுறை தன் மாமியாரிடம் பேச்சு வாங்கியவள், அதன் பிறகு ஒரு சில நாள் அந்தச் சமையலறை பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டாள்…

பிறகு வாங்கிய பேச்செல்லாம் மறந்து போய் அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கும்!

‘இதெல்லாம் நமக்கு ஒரு பிழைப்பா!’ அகல்யா மைண்ட் வாய்ஸ் வேறு அவளைக் கடுப்படிக்கும்… ஆனாலும் புருஷன் மேல் உள்ள காதல் அவளைச் சமைக்கச் சொல்லித் தூண்டியது!

அடடடா…

இப்போது அகல்யா சூர்யாவின் முதல் சண்டைக்கு வருவோம், ஒரு வழியாகச் சூர்யாவின் விடாமுயற்சியால்(!) ஒரு நான்கு நாளில் தன் மனைவியை வழிக்குக் கொண்டு வந்தான்… அவன் அப்படிச் செய்தது அகல்யாவுக்குத் தான் நல்லது… இல்லையேல் அவளுக்கு இருந்த பிரச்சனையில், என்ன செய்திருப்பாளோ? பாவம்…

ஆனால் எப்பவும் போலச் சூர்யா அவன் ஆபிஸ் வேலையில் படு பிசி, ராஜமோ அகல்யாவை வாட்டுவதில் படு பிசி, ‘ஆண்டவா என்னை எப்படியாவது காப்பாற்று’ என்று தினமும் வேண்டிக்கொள்ளத் தான் முடிந்தது அகல்யாவால்.

இதற்கிடையில், அவளின் பிறந்தநாள் நெருங்கி வந்தது. சூர்யா அதை ஞாபகம் வைத்திருப்பானா? வேலை பிசியில் மறந்திருப்பானோ என்ற கவலை வேறு அகல்யாவை சூழ்ந்துகொண்டது…

அன்று அதற்காகவே அவனிடம்,

“இது என்ன மாசம்” என்று ஒரு கேள்வி கேட்டாள்.

நல்ல மூடில் இருந்தான் போலும்,

“என்னது, என்ன மாசம்? ஜனவரி, என்ன அதுக்கு?”எனப் பதிலுக்குக் கேட்டவனை

“ஜனவரின்னு சொன்னதும் ஏதாவது ஞாபகம் வருதா உங்களுக்கு?”அவள் ஆவலாய் கேட்க,

“ஜனவரி… ல… பொங்கல், குடியரசு தினம், வேற… என்ன?”சூர்யா இழுக்க…

“நல்லா யோசித்துப் பாருங்க…”சிணுங்கினாள்.

“ஆ… ஞாபகம் வந்திருச்சு… எனக்கு ஞாபகம் வந்திருச்சு… தை அமாவாசை… எப்படி?”

‘அய்யோ தை அமாவாசை எல்லாம் ஞாபகம் வச்சிருக்கானே… ரொம்ப முக்கியம்!’ நொந்து கொண்டாள்…

உடனே அவனிடம், “ரொம்பச் சந்தோஷம், இப்போது தூங்கலாமா?” பேச்சை இத்துடன் முடித்துவிடுவது தான் உத்தமமாகத் தோன்றியது…

அவள் பிறந்தநாளின் முன்தின இரவில் நல்ல உறக்கத்தில் இருந்த அகல்யாவை யாரோ தட்டி எழுப்பினர்…

தூக்கம் கெட்டதால் எரிச்சலாக எழுந்த அகல்யாவுக்கோ இன்ப அதிர்ச்சி, அறை முழுவதும் பலூன், அவளின் முன் இதய வடிவில் ஒரு கேக், ஏற்றிய மெழுவர்த்திகளுடன்…

“ஹாப்பி பர்த்டே மை டியர் பொண்டாட்டி…”

சூர்யா அவள் பிறந்தநாள் பரிசாக அவளை அழுந்த முத்தமிட்டான்…

அவனின் அன்பில் ஆனந்தமாய்க் கண்ணீர் விட்டாள் அகல்யா…

“என் பிறந்தநாளை மறந்த மாதிரி நடிச்சீங்களா?” என்று அவனை உலுக்கியவள்,

“எனக்கு இப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா சூர்யா” என்று மீண்டும் கொஞ்சினாள் அவனை… அதன் பின் காண்டில் எல்லாம் ஊதி, கேக் வெட்டி மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டு… அந்த இரவு, நீண்ட நாட்களுக்குப் பிறகு அகல்யாவுக்கு, இன்பமானதாய் அமைந்துபோனது…

அந்த இனிமை காலையிலும் தொடர்ந்தது, இரண்டு கைகளையும் அவள் முன் நீட்டியவன், “ரெண்டுல ஒன்றைத் தொடு” என்றான். ஒரு கையைப் பிடித்தவள் மூடியிருந்த அவன் விரல்களைப் பிரித்து ஆவலுடன் பார்க்க, அது கம்மல்.

“சூப்பர், ரொம்ப நல்லாயிருக்கு” என்றவள் துள்ளி குதித்தாள். “நேற்றிலேயிருந்து எவ்ளோ சப்ரைஸ்!” அவனை அணைத்துக்கொண்டபடி கூறினாள்…

கோவிலுக்குப் போகலாம் என்று அழைத்துச் செல்லத் தயாரானவன், சட்டென்று,

“அகல்யா என் லாப்டாப் பாகில் ஒரு கவர் இருக்கும் எடுத்திட்டு வா…” அதை எடுக்கப் போனவள் மயக்கம் போடாத குறை தான்…

அது அவளும் அவனுடன் ஜப்பான் போக ஏற்பாடு செய்திருந்த டிக்கெட்…

“சூர்யா என்னால் இதற்கு மேல் எந்த அதிர்ச்சியும் தாங்க முடியாது…” மகிழ்ச்சியாகக் கூறியவள் அவனோடு கோவிலுக்குச் சென்றாள்…

இதற்கிடையில் அகிலன் பூவிழிக்கு கல்யாண நாளைக் குறித்தார்கள்…

தன் திருமணம் முடிவானதால் பூவிழி தனக்குக் கிடைத்த வேலையில் சேர முற்படவில்லை… கல்யாண வேலைக்கென்று தினமும் மஹாவுக்குக் கூட மாட உதவி செய்ய அங்கே போனால் அகல்யா…

அகிலன் திருமண வேலைகள் ஆரம்பம்!

2 thoughts on “Ani Shiva’s Agalya 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!