UVU – 32

UVU – 32

“பய்யா! எப்படி இருக்கீங்க? எப்ப இந்தியாவுக்கு வறீங்க?”

“பார்க்கலாம்டா. இங்கயே கேலரில எனக்கு வேலை சரியா இருக்கு. டாடி வேற நிறைய ரியல் எஸ்டேட்டுலயும் இன்வெஸ்ட் செஞ்சிருக்காரு. அந்த வேலையும் கழுத்த நெறிக்குது. கொஞ்ச நாள் ஆகட்டும்.”

“நீங்க அமெரிக்கா போய் பல வருஷம் ஆச்சு. மம்மி வெளிய காட்டிக்கலனாலும், உங்கள மிஸ் பண்ணுறாங்க பய்யா”

“ஹ்ம்ம். புரியுதுடா. வரேன், சீக்கிரம் வரேன். சரி சொல்லு உன் லைப் எப்படி போகுது? பெர்டிலிட்டி ட்ரீட்மெண்ட்லாம் எந்தளவுக்கு இருக்கு?”

தேஜல், ஜெபீக்கு இன்னும் குழந்தைச் செல்வம் இல்லை. தேஜல் நார்மலாக இருந்தாலும், ஜெபீக்கு அசூஸ்பெர்மியா(azoospermia) என சொல்லி விட்டார்கள். அதாவது அவனிடம் விந்தணு கொஞ்சமாக பொருக்கி எடுத்து ஏதோ தேற்றலாம் எனும் அளவுக்கு தான் இருந்தது. இதற்கு காரணம் என்ன என்பது டாக்டர்களுக்கே புதிராக இருந்தது. சின்ன வயதில் ஏற்பட்டிருந்த இன்பெக்சனாக இருக்கலாம் என குத்துமதிப்பாக சொல்லி இருந்தார்கள். ஹோமியோபதி, மாடர்ன் மெடிசன் என எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தும் ஒன்றும் வேலைக்காகவில்லை.

“ஹ்ம்ம், மருந்து மாத்திரைன்னு டார்ச்சர் தான் பய்யா. ஆனா ஒன்னும் நடக்கல” குரலில் சலிப்பு. 

“ஹோப் விட்டுறாதடா! கண்டிப்பா பேபி பொறக்கும்”

“எனக்கு நம்பிக்கையே இல்ல பய்யா. தேஜல் புரிஞ்சு நடந்துக்கறா. ஆனா வெளில என்னை ரொம்ப கேவலமா பேசுறாங்க. அன்னிக்குக் கூட, டேண்டர் ஒன்னு நான் வின் பண்ணிட்டேன். பார்ட்டி அரெஞ் பண்ணிருந்தேன் செலிபரேட் பண்ண. அதுல நம்ம ஸ்டாப்ஸ் என் காசுலயே குடிச்சுட்டு என்னைப் பத்தியே கேவலமா பேசிட்டாங்க. டெண்டர் கிடைச்சி என்ன, ஆம்பளைன்னு சொல்ல புள்ள கிடைக்கலியேன்னு! கைகலப்பாகி போலிஸ் ஸ்டேசன் வரை போயிருச்சு. மம்மிக்கு தெரியாம டாடி தான் வந்து பெய்ல் பண்ணி கூட்டி வந்தாரு. ” உடைந்து அழுதான் ஜெபீ.

“ஜெபீ! அழாதடா. இவ்வளவு தூரத்துல இருந்து நான் உன்னை எப்படி சமாதானம் பண்ணுவேன் சொல்லு.”

“பய்யா, நாம வாழற உலகம் ரொம்ப க்ரூவலானது. ஒருத்தன் கிட்ட இருக்கறது யாரு கண்ணுக்கும் தெரியாது. எது இல்லையோ அது மட்டும் பூதகரமா மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். நான் மட்டும் இந்த நிலைமை வேணும்னு கேட்டு வாங்கி வந்தேனா? ஏன் பய்யா என் மனச குத்திக் கிழிக்கிறாங்க? இப்போ பார்ட்டி, ப்ரென்ட்ஸ் கேதரிங் எங்கயுமே போறது இல்லை பய்யா. பார்க்கிறவனுங்க எல்லாம், இன்னும் பிள்ளை இல்லையான்னு தெரிஞ்சிக்கிட்டே கேட்கறானுங்க. வெந்த புண்ணுல வேல பாய்ச்சறதுல அவ்வளவு சந்தோஷம்!” காலில் அடிப்பட்டு வந்து அண்ணனிடம் அழுது முறையிடும் சிறு வயது தம்பியாக தான் தெரிந்தான் ஜெபீ.

“அழாதடா ப்ளிஸ். கண்டிப்பா ஏதாச்சும் வழி இருக்கும்டா”

கண்களைத் துடைத்து அழுகையை அடக்கிய ஜெபீ,

“ICSI முறையில மட்டும்தான் பிள்ளை பெத்துக்க முடியுமாம். அதுவும் எனக்கு ஸ்பேர்ம் ஆக குறைவான விகிதத்துல இருக்காம். உள்ளதும் நல்லா ஆரோக்கியமா இல்லையாம். அதனால நீந்தி போய் கரு முட்டைய அடைய முடியாதாம். இவங்களே ஊசி மூலமா முட்டைக்குள்ள செலுத்துவாங்களாம். நீந்தவே முடியலைன்றப்ப அதன் வழியா வர புள்ள ஊனம் இல்லாம பொறக்குமா பய்யா? அதோட சக்சஸ் ரேட்டும் கம்மியாம். எனக்கு வேணாம்னு சொல்லிட்டேன்”

“ஜெபீ! அந்த சிகிச்சை முறையோட நல்லது கெட்டத விசாரிடா. அத விட்டுட்டு ஸ்ட்ரேய்டா வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்?”

“நான் என்ன செய்யட்டும் பய்யா? போக போக இருக்கற அந்த கொஞ்ச ஸ்பெர்ம் கூட குறைஞ்சி அறவே இல்லாம போயிடுமாம். எனக்கு செத்துப் போயிரலாம்னு இருக்கு. தேஜல் இன்னும் சில வருஷம் போனா இதே பாசத்தோட என் கிட்ட இருப்பாளா? நமக்கு பிள்ளை குடுக்க முடியாதவன்னு என்னை வெறுக்கத் தொடங்கிட்டா நான் என்ன செய்வேன் பய்யா?”

“அப்படி ஏதும் ஆகாதுடா! வேற ஏதாச்சும் வழி தேடலாம். கவலைப் படாத ஜெபீ”

“வழி இருக்கு. நீ மனசு வச்சா முடியும் பய்யா” என்றான்.

“என்னடா சொல்லுற?”

“எங்களுக்கு ஸ்பேர்ம் டொனேட் பண்ணுவீங்களா பய்யா?”

“டேய் ஜெபீ! எனக்கு டோனட் குடுப்பீங்களான்ற மாதிரி டோனேட் பண்ணுவீங்களான்னு கேக்கற! புரிஞ்சுதான் பேசறியா? பைத்தியமாடா உனக்கு?”

“இன்னும் கொஞ்ச நாளுல பைத்தியம் புடிச்சிரும் பய்யா. அது நடக்க கூடாதுன்னா நீங்க இந்த ஹெல்ப் எனக்குப் பண்ணனும்”

“நோ ஜெபீ. எதிக்கலி(ethically) இது சரி இல்லடா. புரிஞ்சுக்க.”

“எந்த எதிக்சும் என் பிரச்சனையைத் தீர்க்கப் போறது இல்ல. எனக்கு நான் ஆம்புள தான்னு வெளி உலகத்துக்கு நிரூபிக்க ஒரு புள்ளை வேணும். அது எந்த வகையில நடந்தாலும் எனக்கு ஓகேதான். தேஜல் கரு முட்டையில உங்களோட ஸ்பேர்ம் சேர்க்கிறது தான் உங்களுக்குப் பிரச்சனைன்னா, வீ ஹேவ் சொலுஷன் ஃபார் தட் பய்யா. ஏக் டோனேஷன் வாங்கிக்கலாம். தேஜல் ஒரு செர்ரோகேட் மதர் மாதிரி, பிள்ளைய மட்டும் சுமக்கட்டும். நான் ஏற்கனவே அவ கிட்டப் பேசி சம்மதம் வாங்கிட்டேன். அதே மாதிரி ஸ்பேர்மும் வேற ஆள் கிட்ட வாங்க வேண்டியது தானேனு நீங்க நினைக்கலாம். நீங்களும் கல்யாணம் பண்ணிக்க மாட்டிக்கறீங்க, நம்ம குடும்பத்துக்குன்னு ஒரு வாரிசு வேணாமா பய்யா? அதுக்குத்தான் கெஞ்சறேன். ப்ளிஸ் பய்யா”

“ஜெபீ, நம்ம குடும்பம் என்ன டாடா பிர்லா குடும்பமா? வாரிசு இருந்தே ஆகனும்னு? இதெல்லாம் சரி இல்லடா”

New #3

“டாடா பிர்லா இல்லைனானும் நாம அவங்களுக்கு சளைச்சவங்க இல்ல. தி கிரேட் ஆரா குடும்பம் வாரிசு இல்லாம போய்ட கூடாது”

“இந்த விஷயம் மம்மிக்கு தெரியுமா?”

“தெரியாது. டாடிக்கும் மெலோட்டமா கொஞ்ச நாள் கழிச்சு பிள்ளை பொறக்கும்னு சொல்லிருக்கேன். இப்போ சொல்லுங்க, எப்ப வரீங்க சாம்பிள் குடுக்க?”

“என்னடா முடிவே பண்ணிட்டியா? நான் இன்னும் சரின்னு சொல்லல. நீ எப்படி என் மண்டைய கழுவினாலும், என் பதில் நோ தான்”

“ஹ்ம்ம். சரி, விடுங்க பய்யா. திரும்பவும் பார்க்கற ப்ராப்தம் இருந்தா மீண்டும் சந்திப்போம். ஐ வில் ஆல்வாய்ஸ் லவ் யூ பய்யா” என போனை வைத்துவிட்டான்.

தன் டாடி சொன்ன மாதிரியே ஜெபீ லவ் யூ ஆல்வாய்ஸ் சொன்னதும் பிரகாஷிற்கு மனமே சரியில்லை. ஜெபீ அப்படி பேசிய பேச்சின் அர்த்தம் பகல் பணிரெண்டு மணிக்குத்தான் பிரகாஷிற்குப் புரிந்தது.(இந்திய நேரம் இரவு 9.30). தேஜல் தான் அழைத்திருந்தாள். ஜெபீ தூக்க மாத்திரகளை அள்ளி விழுங்கி கவலைக்கிடமாக இருப்பதாக அழுதபடி தெரிவித்தாள்.

இப்பொழுதுதான் தந்தையின் இழப்பில் இருந்து சற்று மீண்டிருந்த பிரகாஷிற்கு சகலமும் ஆடிப் போய்விட்டது. கிடைத்த அடுத்த ப்ளைட்டைப் பிடித்து தாய் நாட்டிற்கு வந்தான். வாழ்க்கையில் தனக்கு அன்பு காட்டிய இரண்டு ஜீவன்களில் ஒன்றை இழந்து விட்டவனுக்கு, இன்னொரு ஜீவனும் உயிருக்குப் போராடுவது மிகுந்த மன உளைச்சலையும், சோகத்தையும் தந்தது. தான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என தன் காதலியையே தனக்கு விட்டுத் தர முடிவெடுத்த தம்பியின் பாசம் பிரகாஷின் மனதைக் குத்திக் கிழித்தது.

ஜெபீ இருந்த ரூமின் முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த ஆராவைத் தான் முதலில் பார்த்தான் பிரகாஷ். ஏஜ்ட் க்ரெஸ்புல்லி(aged gracefully) என்பார்களே அதைப் போல் வயதானாலும் கம்பீரமாக இருந்தார். கண்களில் மட்டும் கலக்கம் தெரிந்தது. பெரிய மகனைப் பார்த்ததும் முகம் மலர எழுந்தார்.

“பிரகாஷ்!”

“மம்மி!” இரண்டே எட்டில் நெருங்கியவன், அவரை அணைத்துக் கொண்டான்.

“ஐ மிஸ்ட் யூ மம்மி” என்றவன், மெல்ல அவரை விடுவித்தான்.

ஒன்றும் சொல்லாவிட்டாலும் ஆராவின் முகம் பளிச்சென மலர்ந்தது.

“போய் அவன பாரு பிரகாஷ். நாம் அப்புறம் பேசலாம்.”

தலையாட்டியவன் ரூமின் உள்ளே செல்லும் முன்,

“அவன் கிட்ட சொல்லு! அடுத்த தடவை மருந்து சாப்பிட்டா முழுசா சாகற மாதிரி சாப்பிடனும்னு. இப்படி பொழச்சி வர மாதிரி சாப்பிட வேணாம்னு சொல்லு”

“மம்மி” கண்டனக் குரல் எழுப்பினான் பிரகாஷ்.

“பின்ன என்னடா! அவன் சொல்லலைனா இங்க என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியாதா? மும்பாய் என் கோட்டைடா.எங்க என்ன நடந்தாலும் என் காதுல விஷயம் வந்துரும். இப்ப பிள்ளை இல்லைனா என்ன? பிள்ள வந்துதான் நாம ஆம்பிள்ளையா இல்லையான்னு நிருபிக்கனுமா? அவனுக்கே அது தெரியாதாமா? ஸ்டுப்பிட்! எல்லாரையும் எப்படி தவிக்க வச்சிட்டான்” சின்ன மகன் மேல் இருந்த ஆதங்கம், கோபமாக வெளிப்பட்டது.

“நீங்க டென்ஷன் ஆகாதீங்க மம்மி. ஜெய் டாடி, இவங்களப் பார்த்துக்குங்க” சொல்லியவன், ரூமின் உள்ளே நுழைந்தான். 

நிறைய குழாய்கள் மாட்டப்பட்டு, கட்டிலில் படுத்திருந்த தன் தம்பியைப் பார்க்கவும் கண் கலங்கி விட்டது இவனுக்கு. அவன் பக்கத்திலேயே தேஜல் அழுதவாறு நின்றிருந்தாள்.

தம்பி அருகில் சென்றவன்,

“ஜெபீ! பய்யா வந்துருக்கேன்டா” என்றான்.

லேசாக கண் திறந்துப் பார்த்தவன், பிரகாஷின் கைகளைப் பற்றிக் கொண்டு,

“குடுப்பீங்களா பய்யா?” கண்களில் உயிரைத் தேக்கி கேட்டான். மரண வாயிலைத் தொட்டு மீண்டிருக்கும் தம்பியின் கோரிக்கையை மறுக்க முடியாமல் தன்னை அறியாமலே தலையை சரியென ஆட்டினான் பிரகாஷ்.

அன்று ஆரம்பித்தது இவர்களின் பெர்டிலிட்டி பயணம். ஆராதனாவுக்குத் தெரியாமல் ரகசியமாக இருக்கட்டும் என தம்பி கேட்டுக் கொண்டதுக்கும் சரியென தலை அசைத்தான் பிரகாஷ். 

தப்பு செய்வது போல தோன்றினாலும், தம்பி மனைவியின் முட்டையில் தன் அணுவை இணைக்கவில்லையே என தன்னையே சமாதானப் படுத்திக் கொண்டான். எல்லோரும் சுயநலமாக இருக்கும் போது தான் மட்டும் ஏன் மற்றவர்கள் நலனை முன்னிருத்தி இப்படி அவஸ்த்தைப் படுகிறேன் என தன் மேலேயே கோபம் வேறு.

ஜேபீ கொஞ்சம் தேறியதும் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டான் பிரகாஷ். மும்பையில் நடத்தினால் ஆராதனாவுக்குத் தெரிந்து விடும் என, ஆள் வைத்து சென்னையிலே சகல ஏற்பாட்டையும் செய்தான் ஜெபீ.

ஏக் டோனர் கன்பர்ம் ஆகி, ஏக் ரெட்ரீவல் செய்யும் நாளன்று பிரகாஷ் அமெரிக்காவிலிருந்து வர, தங்கள் சென்னை பிரான்ச்சில் வேலை இருப்பதாக ஜெபீயும் தேஜலும் கிளம்பி வந்தார்கள். 

ஏற்கனவே அரேஞ் செய்து விட்டதால், உள்ளே சென்று விந்தணுவை எடுத்து, இவர்கள் கையில் கொடுத்து விட்டு செல்வது மட்டும்தான் பிரகாஷின் வேலை. அதற்கே என்னமோ மாபாதகம் செய்வது போல கூனிக் குறுகிப் போனான் பிரகாஷ்.

பிள்ளை பேறு இல்லாவிட்டால் அது பெண்களின் குறை மட்டுமே என சிந்திக்கும் சமுதாயத்தில், மனைவியை மட்டும் செக் அப்பிற்கு அனுப்பாமல் தானும் வந்து செக் செய்து கொள்ளும் ஆண்கள் தெய்வமாக தோன்றினர் அவனுக்கு. இந்த மாதிரி செக் அப்பிற்கு செல்லும் பெண்கள் மட்டும் அல்ல, ஆண்களும் மனரீதியாக பாதிக்கப் படுகின்றனர். கிளினுக்குகளுக்கு சென்று சாம்பிள் எடுத்துக் கொடுக்கும் போது கூசிக் குறுகிப் போகிறார்கள்.

பெண்கள் அழுது தங்கள் மனக்குமுறலை வெளியிட்டு விடுகிறார்கள், ஆனால் இவர்கள் மனைவிக்காக தங்கள் கஸ்டத்தை மறைத்து சாதாரணமாக இருக்கிறார்கள். மொத்தத்தில் மனைவியை மட்டும் தவிக்க விடாமல், பெர்டிலிட்டி பயணத்தின் போது தானும் தோள் கொடுக்கும் கணவன் அமையப் பெற்ற பெண்கள் பாக்கியசாலிகளே.

யாருக்கும் தன்னை அடையாளம் தெரியாது எனும் போதும், கூச்சம் பிடிங்கி தின்ன, முகம் மறைத்து கூலர்சையும், தொப்பியையும் அணிந்துக் கொண்டவன், அடித்த சென்னை வெயிலையும் பொருட்படுத்தாது நீள கை வைத்த ஸ்வெட்டருடன் தான் பெர்டிலிட்டி செண்டர் வந்தான். ஏற்கனவே மற்ற இருவரும் அங்கே காத்திருந்தனர்.

வெளியே அடித்த வெயிலுக்கு அந்த வரவேற்பறையின் ஜிலுஜிலுப்பு இதமாக இருந்தது. ஆனாலும் அந்த ஜிலுஜிலுப்பு கூட பிரகாஷின் மன வெக்கையை தணிக்க முடியாமல் தோற்றது. தேஜலும், ஜெபீயும் அங்கிருந்த வரவேற்பு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க, இவன் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டு அவ்விடத்தை நோட்டமிடலானான்.

சுவற்றை நிறைத்து, இவர்களிடம் வந்த சக்சஸ் கேஸ்(குழந்தைகள்) படங்கள். இன்னொரு புறத்தில், என்ன வகையான ட்ரீண்ட்மெண் இங்கே வழங்கப் படுகின்றன என் அறிவிக்கும் வண்ண போஸ்டர்கள். அவன் அமர்ந்திருந்த சோபா கூட மெத்து மெத்தென இருந்தது. மொத்தத்தில் பணத்தை வாரி இறைத்திருந்தார்கள்.

மிஷன்(mission) என அவர்கள் எழுதி இருந்த கூற்றைப் படிக்கும் போதே இவனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

“மலடி எனும் சொல்

இனி இல்லை என்று சொல்”

எப்படி உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு அதில் பணம் சம்பாதிக்கிறார்கள் இவர்கள் என கோபமாக வந்தது. ஒரு ஏழைப் பெண் பணம் இல்லாமல் வந்தால் இந்த மிஷனை இவர்கள் பின்பற்றுவார்களா என ஏளனமாக எண்ணினான்.

அந்த நேரத்தில் கதவு திறந்து மூன்று பெண்கள் உள்ளே வரவும், அவர்களை நிமிர்ந்துப் பார்த்தான் பிரகாஷ். கொஞ்சம் நடுத்தர வயது பெண்மணி ஒருவரும், இரு இளம்பெண்களும் நுழைந்தார்கள்.

அசுவாரசியமாக மீண்டும் தலையைக் குனிந்துக் கொண்டான். மனமோ எப்போதடா முடியும், கிளம்பி செல்லலாம் என தவித்துக் கொண்டிருந்தது.

இவன் உயரத்திற்கு நன்றாக காலை நீட்டி அமர்ந்திருந்தான். நடந்து வந்தப் பெண் ஒருத்தி ஏதோ சிந்தனையில் இவன் காலை கவனிக்காமல் மிதித்து விட்டாள். வலியில் முகம் சுணங்க லேசாக நிமிர்ந்துப் பார்த்தவனுக்கு முதலில் தோன்றியது,

‘அரே மோட்டி! நீ மிதிச்ச மிதில கால் உடைஞ்சிருச்சுப் போல இருக்கே’ என்பதுதான்.

“சாரி சார்! ஏதோ நினைப்புல கண்ணை பாதையில வைக்கல. ரியலி சாரி” என்றாள் அவள்.

ஏற்கனவே அவள் கண்கள் கலங்கிதான் இருந்தது. இவனிடம் பேசும் போதோ இரு சொட்டு நீர்மணிகள் கண்களில் இருந்து தெறித்து இவன் கை மேல் விழுந்தன. பதறிப் போனான் பிரகாஷ்.

“சாரி சார்!!”

மனம் துடிக்க அவசரமாக பரவாயில்லை என்பது போல தலையை மட்டும் ஆட்டினான். 

‘என்ன இந்தப் பொண்ணு முகத்துல இவ்வளவு சோகம்? பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருக்காளே. அதுக்குள்ள கல்யாணம் முடிச்சு, இங்க ட்ரீட்மெண்டுக்கு வந்துட்டாளா?முகம் பார்க்க குழந்தை மாதிரி இருக்கு. இந்தக் குழந்தைக்கு குழந்தைப் பெத்துக்க என்ன அவசரம்? என்னை மிதிச்சதுனால அழுதாளா இல்லை ஏற்கனவே அழுதுட்டு தான் வந்தாளா தெரியலையே’ மனம் அதன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தாலும், கைகளில் தெறித்திருந்த கண்ணீரை துடைக்காமல் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

இன்னொரு பெண், ரிசப்சனிஸ்டைப் பார்க்க சென்று விட, அந்தப் பொம்மைப் பெண் கலங்கிய கண்களுடன் இவன் அருகில் தான் வந்து அமர்ந்தாள். வியர்வையும், பேபி பவுடரும் கலந்த வாசனை இவன் நாசியைத் தழுவி சென்றது. ஆழ்ந்து சுவாசித்தவன், பின் தன்னையே திட்டிக் கொண்டான்.

‘யாரோட வைப்போ தெரியல! அவளோட முகத்தைப் பார்க்கறது கூட தப்பு, இதுல வாசத்த வேற உள்ளிழுக்கறோமே. ரொம்ப தப்பு.’ இன்னும் கொஞ்சம் தள்ளி அமர்ந்தான்.

அவளைத் திரும்பிப் பார்க்காவிட்டாலும், அவள் தேம்புவது கேட்டது. மனம் கேட்காமல், திரும்பிப் பார்த்தான் பிரகாஷ். அவளுக்கு மறுபுறம் அமர்ந்திருந்தவர் தேற்றுவது இவனுக்குக் கேட்டது.

“ஏன்மா, வயிறு வலிக்குதாடா? இன்னியோட எல்லாம் முடிஞ்சதுடா ராசாத்தி. அழாதம்மா”

“வயிறு வலிக்குதுதான். ஆனா அதனால அழல. சும்மாவே அழுகாச்சி வருது. அந்தப் பேபி போட்டோ பார்த்தா கூட அழுகை வருது. நான் என்ன செய்யட்டும்.” இன்னும் தேம்பினாள்.

பிரகாஷிற்கு தாளவில்லை. அழும் அவளையே பார்த்திருந்தான். அழாதே நான் இருக்கிறேன் உனக்கு என சொல்லி அவளை ஆறுதல் படுத்த கைகள் பரபரத்தன. சிறு வயதில் தந்தை சொல்லி இன்னும் நெஞ்சில் பசுமரத்தாணி போல இருக்கும் வரிகள் மீண்டும் மனசுக்குள் வலம் வந்தன.

“அவ கண்ணுல தண்ணிய பார்த்தா உனக்கு மனசு துடிக்கும். உடனே ஓடி போய் கண்ணைத் துடைச்சி அணைச்சிக்கனும்னு தோணும். அது ட்ரூ லவ்”

‘டாட், நீங்க சொன்ன தேவதை என் வாழ்க்கையில வந்துட்டா. தேஜல் அழுதப்ப கூட ஒன்னும் தோணாத எனக்கு, இவ அழறப்ப ரொம்ப கஸ்டமா இருக்கு. எனக்கு மட்டும் சக்தி இருந்தா இந்த ஜென்மத்துக்கு இவள அழ விட மாட்டேன் டாட். ஆனா விதிய பாருங்க, அவளுக்கு கல்யாணம் முடிஞ்ச பிறகு என் கண்ணுல காட்டியிருக்கு’ மனம் கணத்தது.

தன்னை அறியாமல், பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து அவள் புறம் நீட்டினான். பட்டென அழுகை நிற்க, தொப்பி மறைத்திருந்த அவன் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் அந்த பொம்மைப் பெண். தொப்பியை இன்னும் முகம் மறைக்கும் மாதிரி இழுத்து விட்டுக் கொண்டான் பிரகாஷ்.

“நோ தேங்க்ஸ் சார்! என் கிட்ட கைக்குட்டை இருக்கு” என்றவள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே எழுந்து வேறு நாற்காலிக்குப் போய்விட்டாள்.

‘அறியாத பெண்ணுக்கு கைக்குட்டை கொடுத்த தன்னை என்ன நினைத்திருப்பாளோ! கண்டிப்பா ரோட் சைட் ரோமியோன்னு நினைச்சிருப்பா. கழுதை வயசு ஆகுது, ஒரு பொண்ணு கிட்ட எப்படி நடந்துக்கறதுன்னு தெரியலை’ தன்னையே திட்டிக் கொண்டான்.

மீண்டும் கதவு திறந்தது. இந்த தடவை ஒரு ஆண் உள்ளே நுழைந்தான். சிறு வயது போல தான் இருந்தான். நுழைந்ததிலிருந்து அவன் பார்வை முழுக்க அந்தப் பொம்மை பெண்ணிடமே இருந்தது.

‘இவன் தான் புருஷன் போல. எப்படி பார்க்கறான் பாரு! உன் பொண்டாட்டிய வீட்டுல வச்சு எப்படி வேணும்னாலும் சைட்டடிடா! இப்படி பப்ளிக்ல ஏன்டா என் வயித்தெரிச்சல கொட்டிக்கற’ உள்ளுக்குள்ளேயே கொந்தளித்தான் பிரகாஷ்.

உள்ளே வந்தவனைப் பார்த்ததும் தன் அம்மாவின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

‘சண்டை போல இருக்கு. நம்மளையாச்சும் கைக்குட்டை கொடுக்கறப்ப பார்க்க ட்ரை பண்ணா, இவன் முகத்தக் கூட திரும்பி பார்க்கலையே! இப்பத்தான் எனக்கு சந்தோசமா இருக்கு’ அல்பதனமாக தன் எண்ணம் போகும் போக்கைப் பார்த்து இவனுக்கே சிரிப்பாக இருந்தது. தந்தை போனதிலிருந்து சிரிக்கவே மறந்திருந்தவனை, தன் சிறு செய்கையால் மலர வைத்திருந்தாள் அந்த அழகு தேவதை. 

(தொடர்ந்து உன்னோடுதான்)

Comments Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!