Veenaiyadi nee enakku 7

Veenaiyadi nee enakku 7

7

ஷ்யாமுக்குத் தெரிந்திருக்கிறது. அத்தனையும் தெரிந்திருக்கிறது. தெரிந்து கொண்டே தான் இத்தனை நாட்களாகத் தனக்காகப் பொறுமையாக இருப்பது போல இருந்திருக்கிறான். நடித்தானா? இல்லை ஆழம் பார்த்தானா? ஆழம் தான் பார்த்திருக்கிறான். தான் என்ன சொல்கிறோம் என்பதை அவன் பார்த்திருக்கிறான். அதை அறியாமல் கார்த்திக்கு மீண்டும் ஆதரவாகப் பேசவும் சுதாரித்து விட்டான்.

விஜய்க்கு அதை ஜீரணிக்க முடியவில்லை. மஹாவை தானே கஸ்டடியில் எடுத்துக் கெஸ்ட் ஹவுசுக்கு அழைத்துச் செல்வதா?

தலை சுற்றியது…

இதுவரை பெண்களை கஸ்டடியில் எடுத்தது இல்லை. அது போன்ற சந்தர்ப்பங்கள் வந்தாலும் ஷ்யாம் அதைச் செய்ததும் இல்லை. குடும்பப் பெண்கள் பக்கம் அவன் பார்வையைத் திருப்பியதும் கூட இல்லை. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது அவனுக்கு இந்தப் பிரச்சனையில் வேறு ஆப்ஷனும் இல்லையென்பது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் அது மேலோட்டமான கண்ணோட்டம் அல்லவா!

கார்த்தியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை… மீதமிருப்பது தாயும் பாட்டியும்! அதுவும் சரிவராது… கார்த்தி வெளியே இருந்தால் தான் பணம் சுதாரிக்க முடியும். அப்படிப் பார்த்தால் அவனது சாய்ஸ் சரிதான். ஆனால் அது மஹாவாயிற்றே!

அவளது வாழ்க்கை என்னாவது?

எத்தனையோ பெண்களைச் சுலபமாகக் கையாண்டு டீல் பேசிய விஜய், இப்போது ‘மகா’வென்றதும் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தான்.

விஜய்க்கு வேறு சாய்ஸ் இல்லை! அவன் இதைச் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக ஷ்யாம் வேறு யாரையாவது வைத்து முடிக்கத்தான் போகிறான். ஆனால் இவனது எதிர்காலம் தான் இருண்டு விடும். அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு விடும்.

வேறு வழி இல்லாமல் செல்பேசியை எடுத்தான்.

“சந்திரா… நான் ஒரு பொண்ணோட டீட்டைல்ஸ் சொல்றேன்… நோட் பண்ணிக்க… அவளோட ஆக்டிவிட்டி லிஸ்ட் கம்ப்ளீட்டா எனக்கு வேணும்…” என்று கூற,

“சொல்லுங்க சார்…” என்று அந்த சிவசந்திரன் தயாரானான். அவன் தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி போல நடத்தினாலும், இவர்களின் இது போன்ற வேலைகள் தான் அவனது முழு நேர வேலையே! முழுக்க முழுக்க ஷ்யாமின் கட்டுப்பாட்டில் இருப்பவன் அவன்.

“பொண்ணு பேர் மஹாவேங்கடலக்ஷ்மி…” என்று ஆரம்பிக்கும் போதே, சிவச்சந்திரன் குறுக்கிட்டான்.

“கார்த்திக் சாரோட சிஸ்டர் தானே சார்?” என்று ஆளுக்கு முன் அவன் கேட்க, இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“ஆமா சந்திரா…”

“இந்த ப்ராஜக்டை பாஸ் பத்து நாளைக்கு முன்னாலேயே குடுத்துட்டாங்க… நம்ம பாய்ஸ் அவங்களைப் பாலோ பண்ணிட்டு இருக்காங்க விஜய் சர்…” என்று அவன் கூறியபோது, விஜய்க்கு உள்ளுக்குள் நெருடியது.

ஷ்யாம் இந்த விஷயத்தில் தன்னை நம்பத் தயாராக இல்லையென நிரூபித்து விட்டான். அதிலும் பத்து நாட்களுக்கு முன்னே இவனிடம் ப்ராஜக்ட்டை ஒப்படைத்து இருக்கிறான் என்றால், அதற்கும் முன்னமே அவன் முடிவு செய்து விட்டான் என்பதல்லவா உண்மை!

அதிலும் இவன் தன்னிடம் எந்த இடைவெளியுமின்றி இந்தத் தகவலைப் பகிர்கிறான் என்றால் தான் மஹாவை விரும்புவதை இவன் சொல்லியிருக்க முடியாது. சொல்லியிருந்தால் சந்திரன் இவ்வளவு இயல்பாக இந்த விஷயத்தைத் தன்னிடம் பகிர்ந்திருக்க மாட்டான். ஷ்யாம் அவனை எச்சரிக்கை செய்திருப்பான்.

இதனால் அவனுக்குத் தெரிய வருவது என்னவென்றால் சிவசந்திரனை தவிர்த்து, வேறு யாரோ தன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான். எட்டு வருடமாகத் தனக்கு ஏற்படாத இழுக்கு இது!

முன் எப்போதும் இல்லாத அளவு மனம் காயப்பட்டது.

ஷ்யாமை என்றுமே அவன் எதிர்க்க நினைத்ததே இல்லை. அவனது நம்பிக்கையைப் பெற எட்டு வருடமாகியிருக்க, இந்த ஒரு விஷயத்தில் சறுக்கி விட்டதே என்ற ஆற்றாமையில் அவனுக்கு மனம் தாளவில்லை.

ஆனாலும் மஹாவை கஸ்டடி எடுத்து ஷ்யாமிடம் ஒப்படைக்க அவனால் முடியவே முடியாது. இவ்வளவுக்கும் எந்த கஸ்டடியையும் ஷ்யாம் நேரடியாகச் செய்தது கிடையாது எனும்போது, இவளைக் கேட்கிறான் என்றால் அவனது நோக்கத்தை நினைத்து மனம் பதறியது.

வெறும் கஸ்டடி என்றால் ஏதாவது ரகசிய இடத்தில் வைத்திருப்பார்கள், அதுவும் அதுவரை ஆண்களை மட்டும் தான் அதுபோல வைத்திருந்ததும். அதையும் விஜய் மட்டுமே செய்வான். அதையெல்லாம் கண்காணிக்கக் கூட ஷ்யாமுக்கு நேரம் இருந்ததில்லை. பெரும்பாலும் ஹைதராபாத்திலிருந்து இயக்குவது மட்டும் தான் அவனாக இருப்பான்.

அவனுக்கு என்ன தேவை என்றாலும் விஜய் முடிக்காமல் விட்டதில்லை. தயாரிப்பாளருக்கு ப்ரெஷர் கொடுத்து, மற்ற வழிகளை உபயோகித்து என்று அத்தனையையும் இவன் உபயோகித்து இருக்கிறான். ஷ்யாமுக்காக அத்தனையும் செய்திருக்கிறான். ஆனால் அவனையே நம்பாமல்??!

மனதெங்கும் வலி!

‘இப்போது மஹாவின் மேல் அவனது கண் விழுந்து விட்டது’ என்ற உண்மை சற்றுத் தாமதமாகத்தான் விஜய்க்குப் புரிந்தது. எங்குத் தவறியது என்று யோசித்தான்.

அன்று ஷ்யாமை அந்த இசை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கவே கூடாது என்று தோன்றியது.

தலையிலடித்துக் கொண்டான். தனக்குத் தானே குழி பறித்து, அதில் இறங்கி அமர்ந்தது தான் தான் என்பது இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. ஆனால் இதில் பலிகடா அப்பாவி ‘மஹா’ வா?

“சர்…” மௌனமான இடைவெளி நீடிக்கவும் சிவசந்திரன் விஜய்யை அழைக்க,

“ஓகே சந்திரா… டைம் சார்ட் போடணும்… இங்க வர்றியா?” என்று அவன் கேட்க, சந்திரா ஒரு நிமிடம் தாமதித்தான்.

“சர்…”

“என்ன சந்திரா?”

“டைம் சார்ட் போட்டு பாஸ் கிட்ட கொடுத்தாச்சே…”

அவர்களது பாஷையில் கஸ்டடி எடுக்கப் போவதற்கு முன், அந்த நிகழ்வுகளை, எங்கிருந்து, எப்போது, எப்படி என்பதை எல்லாம் மொத்தமாக ப்ளான் செய்து வகுத்துக் கொள்வார்கள். அந்த டைம் சார்ட்டை ஷ்யாமிடம் அனுப்பி அனுமதி பெறுவது விஜய்யாகத்தான் இருக்கும்.

இந்த முறை இங்கும் அவனைத் தவிர்த்து விட்டு, தானே இறங்கியிருக்கிறான் என்றால்?

அவன் கார்த்திக்கின் விஷயத்தில் இறங்குவது வெறும் பணத்திற்காக இல்லை என்பது முழுவதுமாகப் புரிந்து போனது ஷ்யாமின் வலது கைக்கு.

மஹா… மஹா வேங்கடலக்ஷ்மி!

“ஓகே சந்திரா… எனக்கும் ஒரு காப்பி அனுப்பிடு… அப்புறம் இந்த முறை பத்து பேரெல்லாம் வேண்டாம்… ரெண்டு போதும்…” என்று கூற,

“சர்… பிரச்சனை பெருசானா ஆள் பத்தாது…”

“இல்ல… பிரச்சனை பெருசாக வேண்டாம் சந்திரா… சும்மா பயமுறுத்தனும்… அவ்வளவுதான்… ரெண்டு பேர் போதும்… நான் பார்த்துக்கறேன்…” என்று ஷ்யாமை ஓரம்கட்டத் தொடங்கினான்.

“ஆனா பாஸ் வேற மாதிரி சொன்னாரே…” அவன் சந்தேகமாய்க் கேட்க,

“இல்ல… இப்பதான் முடிவு பண்ணோம்… நான் பார்த்துக்கறேன் சந்திரா…” சற்று உறுதியான குரலில் அவன் முடிக்க, அதற்கு மேலும் சந்திரனால் பேச முடியவில்லை.

“ஓகே சர்… உங்க மெயில் செக் பண்ணுங்க…” என்றவன், அடுத்ததாக ஷ்யாமுக்கு அழைத்திருந்தான். சந்தேகமாக சிவசந்திரன் ஷ்யாமை அழைக்கவில்லை. பாஸ் ஒரு விஷயம் முதலிலேயே கூறியிருக்க, அதை மாற்ற வேண்டுமென்றால் ஒருமுறை அவரிடம் சொல்ல வேண்டாமா என்ற எண்ணம் தான்!

மெளனமாக சிவசந்திரன் கூறியதை கேட்ட ஷ்யாம், “விஜய் சர் என்ன சொல்றாரோ அதைச் செய் சந்திரா…” என்று முடித்துவிட்டான். அவனிடம் விஜய்யை விட்டுக் கொடுக்க முடியாது. எப்படி இருந்தாலும் விஜய் தன்னைத் தாண்டி போகமாட்டான் என்பதில் உறுதியாக இருந்தான் ஷ்யாம்.

ஷ்யாம் இப்படி வந்தால், தான் எப்படி அவனை வீழ்த்தி மஹாவை காப்பாற்றுவது என்பதை யோசிக்க ஆரம்பித்திருந்தான் விஜய்!

ஒரு பக்கம் விசுவாசம்… இன்னொரு பக்கம் புதியதாக முளைத்த காதல்!

இரண்டுக்கும் நடுவில் அல்லாடினான்!

****

இரண்டு கைகளையும் கோர்த்தவாறு அந்த சோபாவில் இறுக்கமாக அமர்ந்திருந்தான் விஜய். கார்த்திக்கை அழைத்துச் சொல்லியிருந்தான். தான் வீட்டுக்கு வரப் போவதாக!

அப்போதே வீட்டில் இருப்பவர்களை வெளியேற்ற முடிவு செய்து, அதைச் செய்தும் விட்டான் கார்த்திக்.

என்ன விஷயமென்று கேட்டவர்களுக்கு, எதையும் சொல்லாமல் மழுப்பி கொடைக்கானல் கெஸ்ட் ஹவுசுக்கு அனுப்பி வைத்தான். முருகானந்தம் தான் கடைசி வரை அவனை நம்பவே இல்லை. எதோ நடக்கிறது என்று அவரது உள்மனம் சொன்னது. ஆனால் இந்த நேரத்தில் வளர்ந்த பொறுப்பான தனது மகனை நம்புவதைக் காட்டிலும் அவருக்கு வேறு வழி இல்லை.

ஆனால் மஹா மட்டும் அன்றைக்கென்று மருத்துவமனையில் வேலை என்று தேங்கியிருந்தாள். அவளைத் தனியாக அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்கள் அனைவரையும் சமாளித்து அனுப்பியவனுக்கு மஹாவை பெரிதாக நினைக்கவில்லை.

ஏனென்றால் மஹா எப்போதுமே தைரியமானவள். எதுவாக இருந்தாலும் தானே எதிர்கொள்பவள் என்பதால் அவன் அவளைப் பற்றிப் பெரிய கவலை கொள்ளவில்லை. அதுவும் இல்லாமல் இதுவரை யாருமே பெண்களின் மேல் கை வைத்தது இல்லை… அதுவும் இல்லாமல் பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனம் என்ற மதிப்பைக் கொடுப்பான் என்று நம்பினான்.

ஆனால் ஷ்யாம் அத்தனைக்கும் அப்பாற்பட்டவன் என்பதை கார்த்திக் உணரவில்லை!

“கார்த்திக்… இன்னொரு ஒன் அவர் டைம் எடுத்துக்கங்க… எப்படியாவது பணத்துக்கு அரேஞ்ச் பண்ணுங்க…” உணர்வே இல்லாத முகத்தோடு, கற்பாறையைப் போல அமர்ந்து கொண்டு விஜய் கார்த்திக்கை கேட்டான்.

அவனுக்கு இப்போது அதைத் தவிர வேறு வழி இல்லை.

உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். எப்படியாவது மஹாவை இவன் அப்புறப்படுத்தி விடட்டும் என்கிற எண்ணத்தில் தான் கார்த்திக்கு அழைத்ததே.

ஆனால் இந்த மடையன் என்னவென்றால் மற்ற அத்தனை பேரையும் அகற்றிவிட்டு அவளைக் கல்லூரியில் விட்டு வைத்திருக்கிறான்.

அவளைத் தொடர்ந்து கொண்டிருந்தவர்கள் ஷ்யாமுக்கு சொல்லிவிட அப்போதே அவன் இவனைப் பார்த்த பார்வையை இப்போது நினைத்தாலும் கோபம் கொப்பளிக்கிறது, விஜய்க்கு!

உன்னால் என்ன செய்ய முடியும் என்று காட்டேன் என்கிற பார்வை!

விஜய் தனக்கு எதிராகப் போகக்கூடும் என்பதை அறிந்து கொண்டான் என்பதை அறிவிக்கும் பார்வை!

உனக்கு முன் நான் அங்கிருப்பேன் என்பதை அவன் சொல்லாமல் சொன்னான்.

“என்ன விஜய்? என்ன முடிவு பண்ணிருக்க? எப்ப ப்ராஜக்ட்ட முடிக்கப் போற?”

மஹாவும் அவனுக்கு ப்ராஜக்ட்டா? ரத்தம் சூடானது அவனுக்கு! ஆனால் ஏழைச் சொல் அம்பலம் ஏறாதே! அவனுக்கு வெளியில் அத்தனை அதிகாரம் இருந்தாலும், இவனைக் கொண்டு மட்டுமல்லவா அந்த அதிகாரம்.

“இன்னும் டென் மினிட்ஸ்ல கார்த்திக் வீட்ல இருப்பேன் பாஸ்…” உணர்வுகளை மறைத்துக் கொண்டு அவன் கூற,

“மஹா, காலேஜ்ல இருக்கா… நீ எதுக்கு வீட்டுக்குப் போற?”

“பாஸ்… ஒரு லாஸ்ட் ட்ரை… கார்த்திக்கிட்ட… அதுக்கும் ஒத்து வரலைன்னா நாம மஹாவை தூக்கிடலாம்…” ஒரு முடிவோடுதான் கூறினான்.

“அப்படீங்கற…” அவனது குரலில் சற்று கேலி விரவியிருந்தது போல இருந்தது.

“எஸ் பாஸ்…”

“ஓகே… ஆஸ் யூ விஷ்… ஒன் ஹவர் டைம் தர்றேன் கார்த்திக்கு… ஏதாவது ஒரு சொல்யுஷன் சொல்லச் சொல்லு… இல்லைன்னா…” என்று அவன் முடிக்காமல் அவனது கண்களைப் பார்த்தான், வெகுவாகக் கூர்ந்து!

விஜய்யால் அவனது கண்களைத் தீர்க்கமாகப் பார்க்க முடியவில்லை. உறுத்தியது!

ஷ்யாமிடம் “கண்டிப்பா பாஸ்…” என்று உறுதி கூறியவன், கார்த்திக் முன்பு இறுக்கமாக அமர்ந்துகொண்டிருந்தான், அவன் பணத்துக்காக அலைபாய்வதைப் பார்த்துக் கொண்டு!

கார்த்திக்கும் தன்னால் முடிந்தளவு எத்தனையோ பேரிடம் கேட்டு விட்டான். இதென்ன ஆயிரம் இரண்டாயிரம் சமாச்சாரமா? கிடையாதே! இதற்காக கார்த்திக் கடந்த ஒரு வாரமாகக் கண்மண் தெரியாமல் அலைந்து கொண்டிருந்தான். எப்படியாவது ஷ்யாமிடம் பணத்தைக் கொடுத்து விட்டு அவனைத் தலைமுழுக வேண்டும் என்றுதான் அவனும் நினைத்தான்.

தன்னால் முடிந்த வரை முயற்சித்தான்.

“சர்… எப்படியாவது எனக்கு இந்த அமௌன்ட் இப்ப அரேஞ்ச் பண்ணி தாங்க சர்…” அவனுக்குத் தெரிந்த இன்னொரு தயாரிப்பாளரிடம் கிட்டத்தட்ட கெஞ்சிக் கொண்டிருந்தான்.

“எப்படி கார்த்தி? இப்படி நின்ன நிலைல இருபது கோடி கேட்டா நான் எப்படிச் சுதாரிப்பேன்? எனக்கு ஒரு ஒரு பத்து நாளாவது டைம் வேண்டாமா?” அந்த மனிதர் முருகானந்தத்திற்கு மிகவும் வேண்டியவர். முருகானந்தம் அவரது பல சிக்கல்களின்போது உடனிருந்து காப்பாற்றி விட்டிருந்தார். அந்த நன்றி அவருக்கு இருந்தது.

ஆனால் கார்த்திக் கடைசி நேரத்தில் தான் அவரிடம் கேட்டான்.

“சர்… எப்படியாவது கொஞ்சம் ட்ரை பண்ணுங்க சர்… பைனான்சியர் ரொம்ப நெருக்கறார்…” விட்டால் குரல் உடைந்து விடுவேன் என்றது அவனுக்கு!

‘போதுமடா சாமி, படமாவது தயாரிப்பதாவது’ என்று எண்ணிக் கொண்டான்.

“யாரு பைனான்ஸ் கார்த்தி?”

“பாக்கியவதி சர்…” அவனது குரலில் சற்று உயிரில்லை.

“ஐயோ… அவனா? ஹைதராபாத் ஷ்யாமா? பணத்தைத் திருப்பலைன்னா கடைசி ரத்தத்தைக் கூட உறிஞ்சுடுவான்யா அந்த ராட்சசன்…” அதிர்ந்து போய் அவர் கூற,

“ஆமா சர்… கிட்டத்தட்ட அந்த நிலைமைல தான் இருக்கேன்… முன்னாடி தான் விஜய் இருக்கார்…” இருப்பை அவன் உணர்த்தினான்.

“கஷ்டம் தான்… ஏன்யா அவன் கிட்ட போன?”

“நமக்கு எப்பவுமே அவங்க தானே பண்றாங்க… அந்தத் தைரியத்துல போயிட்டேன் சர்… இப்படியாகும்ன்னு நினைக்கலை…” பதட்டத்தில் அவனது குரல் நடுங்கியது. ஆனால் இது போன்ற சூழ்நிலைகளில் இலவச அறிவுரை தான் தருவார்களே தவிர, யாரும் தீர்வு தந்ததே இல்லை.

“அதெல்லாம் அவங்க அப்பா காலம் கார்த்தி… இவன் மனுஷத்தன்மைன்னா கிலோ என்ன விலைன்னு கேப்பான்… அதோட லேடீஸ் மேட்டர்ல செம வீக்… எவளாவது நடிகை இருந்தா அனுப்பி விட்டுப் பாரு… கொஞ்சம் இறங்கி வருவான்…” எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அவர் கூற, இவனுக்குத்தான் எதோ தன் மேல் தெறித்தது போல இருந்தது. அவ்வளவு அருவருப்பு!

அதுவும் ஒரு பிழைப்பா? என்று எண்ணிக்கொண்டான். அவனுடைய தங்கையை அந்த ஷ்யாம் குறிவைத்ததை அறியாமல்!

“சர்… பணம் இன்னும் ரெண்டு பங்கு கேட்டாக் கூடக் கொடுத்துடுவேன்… இந்த வேலை நமக்கு ஆகாது…” உறுதியாக அவன் கூற, அந்தப் பக்கத்தில் அவர் சிரித்தார்.

“உனக்கு உங்கப்பா மாதிரியே பொழைக்கத் தெரியல கார்த்தி…” என்று கூற,

“வேண்டாம் சர்… இப்படிப் பொழைக்கறதுக்குத் தூக்கு மாட்டிக்கலாம்…” மிகவும் கொடுமையான வார்த்தை தான் ஆனால் அவனுக்கு அந்த நிலையில் எதுவும் தோன்றவில்லை, இதைத் தவிர!

இவ்வளவுக்கும் மிகவும் தைரியமானவன் கார்த்திக்.

“என்னப்பா இப்படிப் பேசற… தைரியமா இருய்யா… யார் என்ன பண்ண முடியும்… ஒரு வாரம் டைம் கேளு… அதுக்குள்ள ஏதாவது பண்ணலாம்…” என்று அவர் சிறு நம்பிக்கை தர, பெருமூச்சோடு பேசியை வைத்தான்.

இதுபோலவே எத்தனையோ பேர் சொல்லிவிட்டனர்.

படம் முடிந்து இருந்தாலோ, ரிலீஸ் ஆகியிருந்தாலோ பிரச்சனை இல்லை. பணத்தைத் திருப்பாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று வேறு கோர்ட்டில் ஸ்டே வாங்கியிருந்தான் ஷ்யாம்.

அத்தனை வழிகளும் அடைக்கப்பட, என்ன செய்வதென்று புரியாமல் தலைமேல் கை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

விஜய்க்கு மனம் கனத்தது!

தன்னால் இந்த நிலையில் மஹாவின் அண்ணனுக்கு உதவ முடியவில்லையே என்ற ஆற்றாமை அவனைக் குத்தி கிழித்தது.

ஆனால் உதவினால் அவனது இருத்தலே சந்தேகத்துக்கு உரியதாகி விடக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதால் அவனாலும் எதையும் செய்ய முடியவில்லை.

விஜய்யின் செல்பேசி அழைத்தது!

ஷ்யாம் தான் அழைத்திருந்தான்!

“பாஸ்…”

“என்ன சொல்றாங்க விஜி?”

“இன்னும் ஒன் வீக் இருந்தா முழுசா செட்டில் பண்ணிடறதா சொல்றாங்க பாஸ்…”

“ம்ம்ம்… அப்படியா?” என்று அவன் யோசிக்க,

“ம்ம்ம் ஆமாம் பாஸ்…” என்று அவனும் உறுதியாகக் கூறினான்.

அவனது உறுதியான பதிலை ஆச்சரியமாகப் பார்த்தான் கார்த்திக். அவனுக்குப் புரிந்து இருந்தது. விஜய் எதோ ஒரு வகையில் அவர்களுக்கு உதவிப் புரியத்தான் நினைக்கிறான் என்பது. ஆனாலும் அவனுக்கும் ஷ்யாமிடம் உள்ள கமிட்மென்ட்டை விட்டுக்கொடுக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.

இப்போதைக்கு ஒரு வாரம் மூச்சு விட முடிந்தால் போதுமென்று தான் அவனுக்கு நினைக்கத் தோன்றியிருந்தது.

இந்தக் களேபரத்தில் மஹாவை முழுவதுமாக மறந்து போயிருந்தான்.

“ம்ம்ம் ஓகே விஜய்… ஒரு வாரம் கழிச்சு அவனோட சிஸ்டரை வந்து கூப்பிட்டுக்கச் சொல்லிட்டு நீ கிளம்பு…” என்று ஷ்யாம் அலட்டிக்கொள்ளாமல் இடியை அவனது தலையில் இறக்கினான். அவனால் பதில் கூடப் பேச முடியவில்லை. அவன் மஹாவை கஸ்டடி எடுக்கவில்லை. அவள் எங்கு இருக்கிறாள் என்பதை மட்டும் தான் கூறினான். ஆனால் ஷ்யாமிடமிருந்து இந்த வார்த்தை வருகிறது என்றால்,

ப்ராஜக்ட் முடிந்து விட்டது!

“பாஸ்…”

“மிர்ச்சி உன்னோட இன்னோவால இருக்கா… அன்கான்ஷியஸா… சந்த்ரா இருக்கான்… நீ வர்ற வரைக்கும் அவனை அன்டர்டேக் பண்ணிக்கச் சொல்லிருக்கேன்… நீ சொல்லிட்டு மஹாவை கூட்டிட்டு உத்தண்டி வந்துடு விஜி… ஐ ஆம் வெய்டிங்…” என்றவன், சற்று இடைவெளி விட்டு,

“நம்ம கஸ்டமர்ஸ் கிட்ட இமோஷனலா அட்டாச் ஆகாத விஜி… நீ இதுவரைக்கும் ஆனது இல்லை… அதனால தான் நான் தலையிட்டேன்… அர்ஜுனன் வில் நீ… புரிஞ்சுப்பன்னு நினைக்கறேன்…”

பேச மொழியற்று நின்றிருந்தான் விஜய்!

error: Content is protected !!