Veenaiyadi nee enakku 8

Veenaiyadi nee enakku 8

8

மெல்லக் கண் விழித்தாள் மஹா. கண்கள் மசமசவென இருந்தது. ஒரே கலங்கலாக… அவளால் ஊன்றி எதையும் பார்க்க முடியவில்லை. சுற்றிலும் இருள் வேறு… தலைமேல் பாறாங்கல்லை வைத்து அழுத்தியதைப் போல இருந்தது.

வலி தாங்க முடியாமல் தலையைப் பிடித்துக் கொண்டாள். வயிற்றை வேறு பிரட்டிக் கொண்டு வந்தது. அவளால் என்றுமே பசி தாங்க முடியாது. பைரவி அதனாலேயே வீட்டில் ஏதாவது தின்பண்டம் எப்போதும் இருப்பதைப் போலப் பார்த்துக் கொள்வார்.

பசி வந்துவிட்டால் ‘பசி…பசி’ என்று அவள் படுத்தியெடுத்து விடுவாள்.

இப்போது எழும் போதே பசி அதிகமாகி விட்டது போல, வாந்தி வந்துவிடும் போல இருந்தது.

நெற்றியை பிடித்துக் கொண்டவள், வாயையும் மூடிக் கொண்டாள்.

இது என்ன இடம் என்று மகாவுக்கு புரியவில்லை. தனக்கு என்னவாயிற்று என்று சிரமப்பட்டு யோசித்தாள். சட்டென நினைவுக்கு வரவில்லை.

என்னவாயிற்று… என்னவாயிற்று… ஞாபகப் படுகையைத் தேடித் பார்த்தாள்!

கண்களைத் திறந்து சற்று நேரம் ஆகிவிட்டபடியால் இருள் கண்களுக்கு மெல்ல பழகிக் கொண்டிருந்தது. மூச்சடைப்பதைப் போல உணர்ந்தாள்.

பசி அதிகமாகி வியர்த்து வழிந்தது. உடல் நடுங்கியது. மெதுவாகப் பயம் அப்பியது.

கடைசியாக என்ன நடந்தது என்பதைச் சிரமப்பட்டு யோசித்து நினைவுக்குக் கொண்டு வர முயன்றாள்.

பிருந்தாவோடு பேசிக்கொண்டிருந்தது நினைவிருந்தது. யாரோ ஒருவர் வந்து பிருந்தாவை, ‘மேடம், உங்களை அனாட்டமி ப்ரொபசர் அவரோட கேபின்க்கு கூப்பிடறார்’ என்று அழைத்ததும் நினைவில் இருந்தது. அவளும், ‘என்னன்னு கேட்டுட்டு வர்றேன் மஹா… நீ பார்க்கிங்ல வெய்ட் பண்ணு…’ என்று போனதும் நினைவிலிருந்தது.

அதன் பின், தான் பார்க்கிங்கை நோக்கிப் போனதும் நினைவிலிருந்தது. பார்க்கிங்கில் இவளது கருப்பு ஐ டென் சற்று தள்ளியிருந்ததால் அதை நோக்கிச் சென்றதும் நினைவிலிருந்தது.

‘அப்போது… அதன் பின்… என்னவாயிற்று?’ என்று மனம் அதிர யோசித்தாள்.

சுற்றியிருந்த இருளும், பழக்கமில்லாத சூழ்நிலையும் அவளைப் பயமுறுத்தியது.

சற்றும் பழக்கமில்லாத சூழ்நிலை!

யாரோ இருவர் அவளை நோக்கி வந்து ‘ஹெமட்டாலாஜி டிப்பார்ட்மெண்ட்டுக்கு எந்த வழியா போகனும் மேடம்?’ என்று கேட்டவரை மட்டுமே அவளது நினைவிலிருந்தது.

அதன் பின்?

தனக்கு என்னவானது?

அவளுக்குப் புரியவில்லை.

அவளது தலைவலியும், உடல்வலியும் தன் மேல் யாரோ ஏதோ மயக்கமருந்தைப் பிரயோகம் செய்திருக்கிறார்கள் என்பதை மட்டும் உணர்த்தியது.

அவசரமாகத் தன்னைத் தொட்டு ஆராய்ந்து பார்த்தாள். நல்லவேளையாக எந்தவித மாறுதலும் தன்னிடம் தெரியவில்லை.

மனதுக்குள் துக்கம் அப்பிக்கொண்டது. தனக்கு என்ன நேர்கிறது என்பதைக் கூட அறிய இயலாத துக்கம்! காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று யோசித்தாள். நூறில் ஒரு பங்காகக் கூட, ஷ்யாம் அவளது நினைவில் இல்லை.

யோசித்து யோசித்துத் தலைவலிதான் மிஞ்சியது. அதோடு பசி அதிகமாகிவிட்டால் எப்போதும் படுத்தும் மைக்ரேன் ஒற்றைத் தலைவலி வேறு மஹாவை படுத்தியெடுத்துவிடும்.

தலைவலி என்றால் சாதாரணமல்ல…

புள்ளியாக ஆரம்பித்துத் தலை முழுவதும் பரவி, பின்னந்தலையில் உளி கொண்டு அடிப்பதைப் போல உணர்த்தி, பின் முதுகில் ஊர்ந்து வலியைப் பரப்பி, வாந்தியில் வந்து நின்று, சில நேரங்களில் வயிற்றில் இருப்பதையெல்லாம் வாய் வழியே தள்ளி, அதிகபட்சமாக மயங்குவதில் வந்து நின்றிருக்கிறது.

ஒரு முறை மைக்ரேன் அட்டாக் ஆகிவிட்டால், அதன் பின் சில நாட்களுக்கு அவளால் எந்த வேலையும் செய்ய முடியாது. அதிகபட்சமாகப் பதற்றமடைந்தாலோ, அவளுக்குப் பிடிக்காத எதையாவது உண்டாலோ, பசி, அதீத வெயில், அதீத குளிர், என்று நிறைய ஒவ்வாமை இருக்கிறது அவளுக்கு. பெரும்பாலும் அது போன்ற நேரங்களில் எல்லாம் இந்தத் தலைவலி அவளைப் பிடித்தாட்கொண்டுவிடும்.

அதுபோலத் தலைவலி ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது என்று பயமாக இருந்தது மஹாவுக்கு. அப்போது வரையில் சாதாரணமாகத்தான் இருந்தது. முயன்று தன்னைச் சமமாக வைத்துக் கொள்ளப் போராடினாள்.

மூச்சை இழுத்துவிட்டு ஒன்றிரண்டு எண்ண ஆரம்பித்தாள்.

மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அமைதியடைந்தது போலிருந்தது.

பார்வை சற்று இருளுக்குப் பழகித் தெளிவானதில் சுற்றி இருப்பதைப் பார்த்தாள்.

அறையிலிருந்த ஜன்னலுக்கு வெளியே இருள் சூழ்ந்திருந்தது. அவசரமாக இடது கையைப் பார்த்தாள். பாஸ்ட் ட்ராக் ட்ராக்கர் இரவு முடிந்து விடியல் ஆரம்பிக்கப் போவதை காட்டியது. மணி அப்போது விடியற்காலை ஐந்தரை.

கழுத்து வரை போர்வை போர்த்திவிடப்பட்டு இருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். அவசரமாக அதைத் தூக்கி எறிந்து விட்டு எழுந்தமர்ந்தாள். தள்ளாட்டம் இன்னமும் இருந்தது. சமநிலையில் அமர முடியாமல் தள்ளியது. உடலைத் தனது கட்டுப்பாட்டில் இழுத்துப் பிடித்தாள். பயமுறுத்திய சூழ்நிலையைக் கண்டு பயம் கொள்ளாதே என்று தனது மனதுக்கு அறிவுறுத்தினாள்.

‘பாதகம் செய்வோரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா…’ பாரதியை நினைவுக்குக் கொண்டு வந்தவள், சற்று தெளிவாக அறையை நோட்டம் விட்டாள்.

மெல்ல எழுந்து நின்றாள். மயக்கம் இன்னமும் மிச்சமிருந்தாலும், அதை முயன்று விரட்டினாள்.

‘நோ… இப்ப கொஞ்சம் கூட வீக்கா இருக்கக் கூடாது… பசியா இருந்தா என்ன? தூக்கமா இருந்தா என்ன? மயக்கமா இருந்தா என்ன? எதுன்னாலும் என்னை ஒன்னும் பண்ணாது… இந்தச் சிச்சுவேஷன்ல இருந்து வெளிய போறது ஒன்னு மட்டுமே குறிக்கோள். வேறெதுவும் இல்ல…” தனக்குத் தானே ஒவ்வொரு செல்ப் கமான்ட்டாகக் கொடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

மனம் கெட்டிப்பட்டது.

எதுவாக இருந்தாலும் சமாளித்துவிட முடியும் என்ற தைரியம் எப்போதும் இருக்குமென்றாலும், இப்போது அது இன்னமும் உறுதியானது.

இரு நாட்களுக்கு முன்பு கார்த்திக் கடனைப் பற்றிப் குறிப்பிட்டு, சூழ்நிலை தன் கையை விட்டுப் போய்க் கொண்டிருப்பதை வேதனையாக உரைத்த போதும் கூட, அவளால் உறுதியைக் கைவிட்டுவிட முடியவில்லையே!

“கார்த்திண்ணா… இந்தக் கடன் எல்லாம் பெரிய பிரச்சனையா? எவ்வளவோ கஷ்டத்தை எல்லாம் அப்பா பார்க்கலையா? அதை நாமும் பார்த்துத்தானே இருக்கோம்… இதெல்லாம் ஜுஜுபி மேட்டர் ண்ணா…” என்று சொல்லி அப்போது அவள் சிரித்தாள்.

“இல்லம்மா… அப்பாவும் நிறையப் பேஸ் பண்ணிருக்காங்க… ஆனா அப்பவெல்லாம் ஷ்யாம் மாதிரி யாரும் நெருக்கடி கொடுக்கலை… பணத்தைக் கொடுத்தேயாகனும்ன்னு கழுத்துல கத்தியை வைக்கலை… ஷ்யாமோட அப்பா கிட்டதான் நம்ம அப்பா வரவுச் செலவு பண்ணிருக்காங்க… அவ்வளவு நல்ல மனுஷன் அவர். அவருக்குப் போய் இப்படியொரு அரக்க மகன்…” கார்த்தியால் அப்போது கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“அண்ணா… கடன் கொடுத்தவன் அதை வசூலிக்கத் தான் பார்ப்பான்… என்ன இவன் மனுஷத்தன்மைன்னா என்னன்னு கேட்கறான்! அவ்வளவுதான்… இவனைப் பத்தி தெரிஞ்சுதானே வாங்கின… இப்ப குத்துதே குடையுதேன்னா என்ன பண்றது?”

“இவன் இந்தளவுக்கு மோசமானவன்னு தெரியல பாப்பா…” தலையில் கை வைத்துக் கொண்டான் அவன்.

“அண்ணா… அவன் எப்படி வேண்ணாலும் மோசமா இருந்துட்டு போகட்டும்… நாம கடனைத் திருப்பிக் கொடுத்துட்டா, அவன் என்ன செஞ்சுட முடியும்? அப்படியும் இல்லைன்னாலும் நாம எதுக்கும் பயப்பட வேண்டாம் ண்ணா… எல்லாத்துக்கும் சட்டம், கோர்ட்டுன்னு ஒன்னு இருக்கு… அவன் இஷ்டத்துக்கு எதையும் பண்ணிட முடியாது…” தீவிரமாகப் பேசியவளை பரிதாபமாகப் பார்த்தான் கார்த்திக்.

“பாப்பா… உனக்குப் புரியல… நாம கொடுத்த பிடிஸியை வெச்சே, பவுன்ஸ் ஆகிடுச்சுன்னு சொல்லி, நம்ம மேல கேஸ் கொடுத்து இருக்கான்… அந்தப் பணத்தைத் திருப்பாம படத்தை ரிலீஸ் பண்ணக் கூடாதுன்னு கோர்ட்டும் சொல்லிடுச்சு…” என்று இருக் கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து அப்போது அமர்ந்து கொண்ட கார்த்திக்கை துடைத்து வைத்த முகத்தோடு பார்த்தாள் மஹா.

“ஏன் ணா அவன் எந்தக் காம்ப்ரமைஸ்கும் வர மாட்டேங்கறான் சரி… அதென்ன படத்தை ரிலீஸ் கூடப் பண்ண கூடாதுன்னு ஸ்டே வாங்கறது? ரிலீஸ் பண்ணாதானே டிஸ்ட்ரிபியுட்டார்ஸ் கிட்ட இருந்து பணம் ரிலீஸாகும்? இப்படிப் பண்ணா என்ன பண்ண முடியும்?”

தொழிலுக்குள் வரவில்லை என்றாலும், நடப்பு என்ன என்பது மஹாவுக்குத் தெரியுமாதலால் அந்த ஷ்யாம் செய்ததை கார்த்திக் கூறியபோது எரிச்சலாக இருந்தது. வழிகளை அடைத்து விட்டு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறானே என்ற கோபம்!

“அதான்டா… ஒன்னும் புரியல… ஒரு பக்கம் இந்த ஹீரோ டார்ச்சர், இன்னொரு பக்கம் டைரக்டர், இன்னொரு பக்கம் இவன்… தொழில் செய்றதா வேண்டாமான்னு இருக்கு… எப்படியோ ஹீரோ ஒரு வழியா முடிச்சு கொடுத்துட்டான்னு பார்த்தா, போஸ்ட் ப்ரொடக்ஷன்ல டைரக்டர் அவன் ஒரு மாதிரியா டார்ச்சர் பண்றான்…

அதையும் முடிச்சு, ஷப்பா ரிலீஸ் பண்ணிடலாம்ன்னு பார்த்தா, இப்ப இவன் முழுசா பணத்தைக் கொடுத்து முடிச்சுட்டுப் படத்தை ரிலீஸ் பண்ணுன்னு கழுத்துல கத்தியை வைக்கறான்… இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிபியூட்டர், இது நொட்டை, அது நொள்ளைன்னு, இதெல்லாம் முடிச்சுட்டு கூட நிம்மதியா உக்கார முடியுதா?

ரிலீசான அன்னைக்கே திருட்டு சிடி, நெட்ல ரிலீஸ் பண்றது… இதெல்லாம் கடந்து வந்து, படத்தை ஓட்டி அதை எல்லாரும் பார்த்து, நல்லாருந்து, ஓடிக் காசு பார்க்கறதுக்குள்ள உயிர் போய் உயிர் வருது பாப்பா… ஆண்டவா… ஏன் தான் இந்த வேலைக்கு வந்தேனோ?! நான் பாட்டுக்கு நிம்மதியா கடைல உக்கார்ந்தேனா, நாலு நகைய வித்தேனான்னு வியாபாரம் பார்த்துட்டு இருந்தேன்… அப்பாவோட ஆசை, ஆட்டுக்குட்டியோட ஆசைன்னு…முடியலடா…”

அப்போது தலையில் கைவைத்துப் புலம்பிய தமையனை பரிதாபமாகப் பார்த்தாள். தந்தைக்காக என்று அகலக் கால் வைத்தது. தந்தை, அவரது காலத்து மனிதர்களைப் போலவே எல்லோரையும் எடை போட்டிருந்தார். ஆனால் அப்படி இல்லையென இப்போது அந்த இருளில், அந்த அறையில் அடைபட்டிருந்த மஹாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

இதற்குக் காரணம் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும் என்று தீர்க்கமாக நம்பினாள். அவனைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாதே!

ஒன்றிரண்டு சம்பவங்கள் இதுபோல் நடந்ததை கார்த்திக் கூறியிருந்தான். அதைச் சொல்லித்தான் இன்னமும் பதட்டத்தில் அப்போது ஆழ்ந்திருந்தான்.

“ண்ணா… அதுக்குள்ளே அந்தளவு எக்ஸ்ட்ரீமா திங்க் பண்ணாதே… கண்டிப்பா கொஞ்சம் பேசினா டைம் வாங்க முடியும்… கவலைப் படாதே…” என்று கூறிவிட்டு இரவு படுக்கச் சென்றாள்.

அடுத்த நாள் தான் இப்படி இங்கு இருளில் தவிக்கிறாள்.

எத்தனை நேரமாக இவ்வாறு இருக்கிறோம் என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.

கதவு திறக்கப்படும் சப்தம் மெதுவாகக் கேட்டது.

சட்டென்று பார்வையை அந்தப் பக்கம் திருப்பினாள்.

மெல்லிய வெளிச்ச கீற்று… அந்நேரம் வரை இருளுக்கு மட்டுமே பழகியிருந்த கண்களைக் கூச செய்தது. கண்களைச் சுருக்கிப் பார்த்தாள். கதவுக்கு மறுபுறம் யாரோ நிற்பது தெரிந்தது.

உள்ளே வந்த அந்த உருவம், லைட்டை ஆன் செய்தது.

‘அடச்சை, சற்று முயன்று இருந்தால், இதை நாமே செய்திருக்கலாமே’ என்று தன் தலையில் தானே மானசீகமாகக் கொட்டிக் கொண்டாள்.

அவள் ஒரு பெண். அந்த இடத்தில் வேலை பார்ப்பவளை போல இருந்தாள். சற்று வெளுத்த மாநிறம். திருத்தமான முகம். வேலை பார்க்க ஏதுவாகப் புடவையை இழுத்துச் சொருகியிருந்தாள். ஆனால் புடவைக் கட்டு வித்தியாசமாக இருந்தது. கூர்க் பெண்கள் இதைப் போலத்தான் புடவை உடுத்துவார்கள். ஒரு முறை கூர்க் போனபோது பார்த்திருக்கிறாள். தலைக் காவேரி பார்க்க வேண்டும் என்று அவளன்னை பிடிவாதம் பிடித்தபோது வந்தது.

அப்படியென்றால் இவள்?

“காப்பி…” அவள் கொண்டு வந்த கோப்பையை மஹாவின் முன்னே நீட்ட,

“யார் நீ? நான் எதுக்கு இங்க இருக்கேன்?” அவளைப் பார்த்து மஹா கேள்விமேல் கேள்வி கேட்க,

“கொத்தில்லா ம்மா…” கன்னடத்தில் அவள் கூற, மஹாவுக்கு உறுதியானது, அவள் கன்னடிகாதானென்று! அதாவது கூர்க்கை ஒட்டிய பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவளாக இருக்கக்கூடும் என்று அவளது மூளை சமிஞ்சை செய்தது.

ஆனால் இது கூர்க் தான் என்று எப்படி உறுதிப்படுத்துவது?

கூர்க் என்று அவளுக்குத் தோன்றியவுடன், சில நாட்களுக்கு முன் நடந்த வேடிக்கையான விவாதம் நினைவுக்கு வந்தது, கண்களில் இப்போது கண்ணீரோடு! அப்போதும் மருத்துவக் கல்லூரி கேண்டீனில் இருவரும் ஸ்நாக்ஸ் உண்பதற்காகச் சென்றிருந்தனர், வார்டில் ஒரு ரவுண்ட்ஸ் அடித்து விட்டு.

“நம்ம ஹனிமூன் செஷல்ஸ்ல தான் மஹாகுட்டி…” கண்களில் கனவோடு, அதுபற்றிப் பேச்சு வந்தபோது பிருந்தா கூற, இவள் கிண்டலாகச் சிரித்தாள்.

“நம்ம மீன்ஸ் நீயும் நானுமா பிருந்தாகுட்டி?” என்று சிரிப்போடு கேட்க,

“சனியனே… அங்கயும் உன்னையே கூட்டிட்டு போக எனக்கென்ன பைத்தியமா?” என்று அவளது தலையில் தட்ட, “எருமை…” என்ற அடைமொழியைத் தலையைத் தடவி கொண்டே பிருந்தாவுக்குக் கொடுத்தவள், “பின்ன யாரைப் பாப்பா கூட்டிட்டு போவ?” என்று கண்ணடிக்க,

“பொறுமையா பார்ப்பேன்… முடியலைன்னா உன் அண்ணன் கழுத்துல நான் தாலியை கட்டிட்டு, இழுத்துட்டு போக வேண்டியதுதான்…” என்று கடுப்பாகக் கூறியவளை பார்த்துச் சிரித்தாள் மஹா.

“அடிப்பாவி… விட்டா செய்வடி…”

“கண்டிப்பா செய்வேன்…” வேடிக்கையாகச் சொன்னாலும் அதில் ஒரு தீவிரமிருந்தது.

“ஏய் எல்லாரும் உன்னை அமைதியின் சிகரம்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க செல்லோ…” கிண்டலாக மஹா கூற,

“பூவுக்குள் பூகம்பம்… கேள்விப்பட்டு இருக்கியா நீ? எல்லாம் உன் அண்ணனால… என்ன நினைச்சுட்டு இருக்காங்க அவங்க? லவ் பண்ற மாதிரி சிக்னல் கொடுக்கறாங்க… ஆனா பேச மாட்டேங்கறாங்க… பிடி கொடுக்க மாட்டேங்கறாங்க… இன்னும் கொஞ்ச நாள் இப்படியே மெயின்டெய்ன் பண்ணட்டும்… அப்புறம் இருக்கு உன் அண்ணனுக்கு…” என்று நீளமாகக் குமுறியவளை பார்த்துச் சிரித்தாள் மஹா.

“அடிங்க… ஒரு லவ்வை சொல்ல உனக்குத் துப்பில்லை… அவனுக்கும் துப்பில்லை… இப்படி டைலாக் பேசறதுல மட்டும் குறைச்சல் இல்ல…”

“நான் என்னடி பண்றது? அவர் முன்னாடி மட்டும் எனக்குப் பேச்சே வர மாட்டேங்குது…” பரிதாபமாகக் கூறியவளை பார்த்து மேலும் அவள் சிரிக்க, பிருந்தா முறைத்தாள்.

“எவுரு அவுரு?” கண்ணடித்துக் கேட்க, முகம் சிவந்த பிருந்தா, “ஏய் ச்சீ போ…”

“அட… வெட்கமெல்லாம் வருதுய்யா…” மஹாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“மஹா…” என்று சிணுங்கிய பிருந்தா, “நீயாவது அவங்க கிட்ட பேசேன்டி…” என்று கோரிக்கை வைக்க,

“அடிப்பாவி… நான் அவன் தங்கச்சிடி… விட்டா மாமியாக்கிடுவ போல இருக்கே…”

“ஏன்… உன் ப்ரெண்டுக்காக இதைப் பண்ண மாட்டியா மஹா குட்டி…” என்று மஹாவின் தாடையைப் பிடித்துக் கொஞ்சிய பிருந்தாவை பார்த்துக் கேலியாகச் சிரித்தவள்,

“அடியே பக்கி… இதுக்குக் கூட உனக்குத் தைரியம் இல்ல… நீ தான் கார்த்தியை இழுத்துட்டுப் போகப் போறியா…” என்று சிரித்துக் கொண்டே கேட்க,

“எனக்கு அதுக்கெல்லாம் தைரியம் இருக்குடி… இப்ப ஸ்டார்டிங் ட்ரபிள் செல்லக்குட்டி…”

“எது எதுக்கெல்லாம் ஸ்டார்டிங் ட்ரபிள்ன்னு லிஸ்ட் போட்டுக் கொடுத்துடு பிருந்தா குட்டி…” என்று கலாய்த்தவளை அடிக்கத் துரத்தினாள் அவள்.

“ஏய்… நீ அவங்க தங்கச்சிடி…”

“ஓஓஒய்… அது இப்ப தான் உனக்குத் தெரியுதா? இந்நேரம் வரைக்கும் ஃபீல் பண்ணிட்டு இருந்தப்ப தெரியலையா?”

“கர்மம்… போயும் போயும் நீ எனக்கு ப்ரெண்டா வாச்சியே… எல்லாம் என் ஃபேட்…”

“அதுக்கு நான் என்னடி பண்றது? எல்கேஜில ஒன்னா பெஞ்ச்ல உக்கார வச்ச அந்த மிஸ்ஸ தான் நீ சொல்லணும்…”

“அதான்டி… அப்ப இருந்து உன்னைக் கூடவே வெச்சுட்டு சுத்தறேன் பாரு… என் விதிடி…”

“அதுக்கு ஒண்ணுமே பண்ண முடியாது பிருந்தாகுட்டி…” சிரிப்போடு கூறியவள், “ஒழுங்கா ரெண்டு வார்த்தையைச் சேர்த்து வெச்சு கார்த்திண்ணா கிட்ட பேசு… அப்புறமா இப்படிக் குமுறு குமுறுன்னு குமுறுடி…” என்று சற்றுத் தீவிரமாகக் கூற,

“அதானே எனக்கு வர மாட்டேங்குது…” பாவமாக அவள் கூற,

“அப்புறம் ஒன்னும் பண்ண முடியாது… எவளாவது நடிகை கொத்திட்டுப் போகப் போறா… அப்புறம் நீ எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட வேண்டியதுதான்…”

“அப்படி ஒன்னு மட்டும் நடந்தா, உன் அண்ணனைக் கொன்னுடுவேன் பார்த்துக்க… என்னை விட்டுட்டு வேற யாரையாவது பார்ப்பாங்களா? பிச்சு போடுவேன்…” சிலிர்த்துக் கொண்டு அவள் கூற,

“அடடா… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்று மஹா சிரிக்க,

“உனக்குச் சிரிப்பா இருக்கா?” என்று அவளை முறைக்க,

“பின்ன, புள்ளைபூச்சியெல்லாம் கொலை பண்ணிடுவேன்னு சொல்லுதே…”

“கொலையும் செய்வாள் பத்தினி…” தீவிர முகபாவத்தோடு அவள் கூற,

“அது பத்தினிக்குடி… அதாவது ஒய்ப்…” என்று மஹா திருத்த,

“அம்மா நக்கீரி… காதலின்னு வெச்சுக்கயேன்…”

“அப்படீன்னாலும் இன்னமும் நீங்க ரெண்டு பேரும் டிக்ளேர் பண்ணிக்கவே இல்லையேடி…” அவள் கிண்டல் குறையாமல் கூற,

“இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை மஹா… ஒழுங்கா என்னை நீ அண்ணின்னு ஒத்துக்கப் போறியா இல்லையா?” என்று ஒற்றை விரலை நீட்டி, சிறுபிள்ளையாக மிரட்டியவளைப் பார்த்துச் சிரித்தாள் மஹா.

அவளது உயரம் என்ன?! அழகு என்ன?! படிப்பென்ன?! அறிவென்ன?! அத்தனையிலும் சிறந்தவள் அவள். கார்த்தியின் ஒற்றை வார்த்தைக்காகக் காத்திருக்கிறாள். அவனைப் பார்த்தாலும் ஏதோ ஒரு வித்தியாசம் தெரியத்தான் தெரிகிறது. ஆனால் எதையும் சொல்லி விடாத அமுக்குணி அவன்.

“சரிடி சரிடி… அழுகாத… நீ அண்ணி தான் ஒத்துக்கறேன்…” என்று அவளைச் சமாதானப்படுத்த, அவளது முகம் சடுதியில் பிரகாசமடைந்தது.

அட இவ்வளவு சந்தோஷமா அந்த ஒற்றை வார்த்தைக்கென்று நினைத்துக் கொண்டாள் மஹா. அது அவளுக்காக இல்லையென்று தெரியும். கார்த்தியின் மேல் அவள் கொண்ட காதல் அது!

இப்படி ஒருவரால் காதலிக்கப்படுவது ஒரு வரம். தனக்கது கிடைக்குமா?

இந்தக் கேள்வி எழுந்தபோது அவனது முகம் மின்னி மறைந்தது, காரணமே இல்லாமல்!

அவனது பெயரும் தெரியாது… ஊரும் தெரியாது… ஆனாலும் அன்று நிகழ்ச்சியின்போது அவனது கண்கள் அவளைச் சுழலாகச் சுழற்றி தன்னுள்ளே ஐக்கியப்படுத்திக் கொள்ளத் துடித்ததை இப்போது நினைத்தாலும் அவளுக்கு வியர்த்தது.

அதற்கு முன் அவனைச் சந்தித்த சந்திப்புகள் எல்லாம் கசப்பானவையே! அவனை அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் தனக்குள்ளாகக் கூறிக்கொண்டாள்.

ஆனால் அவன் பார்த்த பார்வைக்கென்ன அர்த்தம்? அவனைத் தவிர அவளால் வேறெதையும் பார்க்க முடியவில்லையே… அதற்கென்ன அர்த்தம்? சூறாவளியாகத் தன்னைச் சுற்றி வளைத்த அந்தப் பார்வையின் ஈர்ப்புவிசையைத் தாள முடியாமல் போனாலும், அவனை விட்டு நகர்த்த முடியவில்லையே, அந்தச் செயலுக்கென்ன அர்த்தம்?

அவளையும் அறியாமல் அவளது கன்னங்களில் வெட்கப் பூப்பூக்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தாள் பிருந்தா.

“ஹேய் செல்லோ… ஒய் ப்ளஷிங்? திங்கிங் ஆப் யுவர் ஹனிமூன்?” என்று கண்ணைச் சிமிட்டிக் கேட்ட பிருந்தாவை பார்த்து, தன்னைச் சுதாரித்துக் கொண்டு,

“அடிப்பாவி… ஒரு பச்சைபுள்ளைய கெட்ட வார்த்தை பேசிக் கெடுக்கறியே… இரு இரு… கார்த்தி அண்ணாகிட்ட சொல்லித் தாரேன்…” என்று வேடிக்கையாகக் கூற,

“அப்படியாச்சும் சொல்லித் தொலையேன்… அப்பவாச்சும் உன் அண்ணனுக்கு எதாவது பீலிங்க்ஸ் வருதான்னு பார்க்கலாம்… இல்லைன்னா அவங்க ஏதாவது சாமியார் மடத்துல போய்ச் சேர்ந்துட போறாங்க…” என்று உதட்டைச் சுளித்துக் கொண்டு அவள் கூற, ‘அடிப்பாவி’ என்ற லுக்கை விட்ட மஹா,

“ஏய்… நிஜமாவே அண்ணனை முழுசா விட்டு வைப்பியா? உன்னை நம்பி எப்படிடி கார்த்தியை செஷல்ஸ் அனுப்புவேன்? பேசாம உன் மாமியார் கூடச் சேர்ந்துகிட்டு தலைக்காவேரி போ… இப்பதான் என்னையும் இழுத்துட்டு போயிட்டு வந்தாங்க… ஊரும் அம்சமா இருக்கு… மாமியாரையும் கைக்குள்ள போட்ட மாதிரி இருக்கும்…”

“அடப்பக்கி! ஹனிமூனுக்கு எதுக்குடி மாமியாரு? அப்புறம் அது சனிமூன் ஆகிடாதா?”

“இரு… இரு… இப்பவே போட்டுத்தரேன்… அப்புறம் உனக்குத் தனிமூன் தான் கண்ணு…” என்று கிண்டலாகக் கூற,

“அடியே… வேண்டாம்டி… அண்ணனும் தங்கச்சியும் ஒரேடியா ரொம்பத்தான் பண்றீங்க…” என்று அவள் கடுப்பாக,

“யார்டி பண்றது?” கண்ணைச் சிமிட்டிய மஹா குறும்பாகக் கேட்க, இப்போது, ‘அடிப்பாவி’ என்பது போல வாயை மூடிக் கொண்டாள் பிருந்தா.

“ரொம்பக் கெட்டப் பொண்ணாயிட்டே மஹா செல்லோ…” என்று சிரித்தவளை நினைத்து மகாவுக்கு இப்போது வேதனையாக இருந்தது.

தன்னைக் காணாமல் பாட்டியும் அன்னையும் தந்தையும் தவித்துக் கொண்டிருக்கக்கூடும். கார்த்தி என்ன பாடு படுகிறானோ என்று எண்ணிப் பார்த்தவளுக்குத் துக்கமாக இருந்தது. அன்னையின் வசை மொழிகளை இனி கேட்க முடியுமா? ‘மஹாக்குட்டி’ என்ற தந்தையின் அழைப்பைத் தன்னால் கேட்க முடியுமா? எதற்கெடுத்தாலும் தன்னோடு சண்டை பிடித்துத் தனக்கே விட்டுக்கொடுக்கும் அண்ணனைக் காண முடியுமா?

நினைக்க நினைக்க இன்னமும் தலைவலி அதிகமாகும் போலத் தோன்றியது.

அந்தப் பெண் காபியை வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். பசி வயிற்றைக் கிள்ளியது. காபியின் மணம் வேறு, வாவென்று அழைத்தது. கூர்கின் காப்பி மணம் மிகவும் அலாதியானது. தனிப்பட்ட குணத்தைக் கொண்டது. சிறப்பானது!

ஒருவேளை அந்த மண்ணின் மணமோ என்னவோ!

இயற்கையின் கொடை!

காபியின் மணமே அவளது தலைவலியை சற்று குறைக்க, அதை எடுத்துக்கொண்ட மஹா, எழுந்து கதவைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தாள். ஹால் போன்ற அமைப்புத் தென்பட்டது. அதற்கு அடுத்து மாடிப்படிகள் தென்பட, சுற்றிலும் பார்த்தாள்.

காலை நேரம்… அவ்வளவு அழகான பிரதேசம். சுற்றிலும் பச்சை பசேலென்ற பகுதி. தூரத்தே தெரிந்த மலை முகுடு. பாக்கு மரங்கள் அதிகம் போல! காற்றில் அதன் வாசம்!

அதோடு மிதந்து வந்தது ஈர சில்லிப்பு! குளிர் அப்போதுதான் உறைத்தது. அந்தச் சில்லென்ற உணர்வில் கைகளைக் குறுக்கிக் கொண்டாள்.

மெதுவாகக் கீழிறங்கினாள்.

யாருமற்ற அந்த வீடும், பிரதேசமும் அவளுக்குள் ஒரு விதமான பய உணர்வை அவளுக்குக் கொடுத்தது. ஆனால் பயம் கொள்ளலாகாது பாப்பா என்று மீண்டும் மீண்டும் தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.

அந்தப் பெண் எங்குப் போனாள் என்று யோசித்துப் பார்த்தாள். தென்படவே இல்லை. அமைதியாக இருந்தது சூழ்நிலை.

ஒன்று மட்டும் மஹாவுக்குப் புரிபடவில்லை. அவளைத் தடுக்க யாருமில்லை. அதுவும் இல்லாமல் கைகள் கட்டப்படவும் இல்லை. அவள் சுயநினைவு இல்லாமல் கொண்டு வரப்பட்டு இருந்தாலும், இப்போது எந்தத் தளையுமில்லை.

ஆனால் ஏன்? எப்படி? எதற்காக?

குழப்பமாக இருக்க, கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

அந்தப் பிரதேசத்தின் அழகு அள்ளியது. கண்களை விலக்க முடியாமல் செய்தது. அது பழைய பாணியிலான பெரிய வீடு, ஆனால் நவீனமாகத் திருத்தியமைக்கப்பட்டு இருந்தது.

சூழ்நிலை அழகாக இருக்கலாம்… ஆனால் அழகு இருக்குமிடத்தில் ஆபத்து அதிகம்! என்ன தனக்குக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், அழகில் ஆழ்ந்து போன மனதைக் கடிந்து கொண்டாள்.

“வெல்கம் மிர்ச்சி… குட் மார்னிங்…” முதுகுக்குப் பின்னால் சற்று தள்ளி அமர்த்தலான குரல் கேட்க, மஹாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

error: Content is protected !!