mu6

mu6

8

கண்ணீரும் கோபமும்

அக்னீஸ்வரியின் முகத்தைப் பார்த்த விஷ்ணுவர்தனின் மனம் சஞ்சலப்பட்டது. எப்போதும் பிரகாசமாய் மின்னும் அவளின் முகம் களையிழந்து உணர்வற்று கிடந்தது. அவன் என்னதான் உற்றுக் கவனித்தாலும் அவள்மனதில் குடிகொண்ட எண்ணத்தைக் கண்டறியவே முடியவில்லை.

விஷ்ணுவர்தன் அவளை நோக்கி, “அக்னீஸ்வரி” என்றழைத்தான். அவனின் அழைப்பிற்கான பதிலுரையோ அல்லது எதிர்வினையோ இல்லாமல் அவள் சிலை எனவே அமர்ந்திருந்தாள்.

மீண்டும் விஷ்ணுவர்தன் அவள் தோள்களை பற்ற வர அவள் அவசரமாய் அவனிடமிருந்து விலகிச் சென்றாள். அவன் புரியாமல் அவளை நோக்கி, “என்னவாயிற்று அக்னீஸ்வரி… உன் முகம் ஏன் வாட்டமாய் இருக்கிறது… என் மீதான கோபம் உனக்கு இன்னும் தீரவில்லையா?!” என்றான்.

இப்போது அக்னீஸ்வரி அவனை நிமிர்ந்து நோக்காமல், “கோபம் எல்லாம் எதுவும் இல்லை” என்றாள்.

பின் ஏன் இப்படி நிமிர்ந்து நோக்காமல் என்னைத் தவிக்க வைக்கிறாய்… அச்சமும் நாணமும் திடீரென்று உனக்கு எங்கிருந்து வந்தது… நான் ஒன்றும் நீ அறியாத ஆடவன் இல்லையே?!”என்றான்.

அக்னீஸ்வரியின் விழிகள் கலங்கியவாறு மீண்டும் அமைதி காக்க, “உன் கோபத்தைக் கூட எதிர்கொண்டு விடலாம்… ஆனால் உன்னுடைய மௌனம் என்னைப் பாடாய் படுத்துகிறது” என்று சொல்லியபடி அவள் கரத்தைப் பற்றி தன் கையோடு பிணைத்துக் கொள்ள அக்னீஸ்வரி எத்தனை முயன்றும் அவளின் கரத்தை மீட்க முடியவில்லை.

இப்போது அக்னீஸ்வரி அவளின் மௌனத்தைக் கலைத்து, “நான் தங்களிடம் ஒரு விஷயம் உரைக்க வேண்டும்” என்றாள்.

விஷ்ணுவர்தன் களிப்படைந்தபடி, “எப்படியோ உன் செவ்விதழ்களைத் திறந்து பேசிவிட்டாயே… என்னிடம் உனக்கு எந்தப் பய உணர்வும் வேண்டாம்… நீ என்ன சொல்ல நினைக்கிறாயோ அதை சொல்” என்று அவளின் மென்மையான கரத்தை இன்னும் அழுத்தமாய் இறுக்கிக் கொண்டான்

அக்னீஸ்வரி தவிப்போடு, “நான் சொல்கிறேன்… ஆனால் நீங்கள் முதலில் என் கரத்தை விடுங்கள்” என்றாள் தவிப்போடு!

அது சாத்தியமில்லை… நீ சொல்ல வந்ததை முதலில் சொல்” என்றான்.

அக்னீஸ்வரி சிறிது நேரம் அமைதி காத்தவள் பின் நடந்தவற்றை அவனிடம் மறைக்காமல் சொல்லிவிட வேண்டும் எனத் தீர்க்கமாய் எண்ணிக் கொண்டு நிமிர்ந்து நோக்க அவளின் கலங்கிய விழிகளை கண்டு புரியாமல் திகைத்தான்.

அவன் என்னவென்று கேட்கலாம் என்று பேச வாயெடுப்பதற்கு முன்பு அக்னீஸ்வரி தன் விழிகளை முந்தானையால் துடைத்தபடி ருத்ரதேவனை குளக்கரையில் பார்த்ததிலிருந்து நிகழ்ந்த அனைத்துச் சம்பவங்களையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தாள்.

விஷ்ணுவர்தன் அப்படியே உறைந்து போனான். கருவிழிகள் அசையாமல் ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்க நம்பமுடியாமல் மீண்டும் அக்னீஸ்வரியைப் பார்த்தான். அவளின் பார்வையில் குற்றவுணர்ச்சி வெளிப்பட்டதைக் கவனித்தான்.

சட்டென்று அவன் பிணைத்திருந்த அவளின் கரத்தை உதறிவிட்டு எழுந்து நின்று கொண்டவனின் முகத்தில் கோபம் அனலாய் தெறித்தது.

அக்னீஸ்வரி அவன் கோபத்தை உணர்ந்தவளாய், “நான் இதைப் பற்றித் தங்களிடம்” என்று அவள் பேச தொடங்கிய போதே இடையிட்டவன்,

இதுதான் உன் காதல் கதையை உரைக்கும் தக்க சமயமோ?” என்று முறைப்பாய் கேட்டான்.

இல்லை… நான்” என்று அக்னீஸ்வரி மீண்டும் பேச எத்தனிக்க,

பேசாதே… என் கோபம் எல்லையை மீறுகிறது… திருமணத்திற்கு முன்னமே சொல்லாமல்… இப்போது வந்து இவற்றை எல்லாம் உரைக்க வேண்டிய அவசியமென்ன?” என்றான்.

அவன் குரல் அதிகார தொனியில் கேட்க அக்னீஸ்வரி வேதனையோடு,  “இல்லை… நான் முன்னமே தங்களைத் தனியாக சந்தித்து இவற்றை எல்லாம் உரைக்க எண்ணினேன்… ஆனால் அத்தகைய வாய்ப்பு எனக்கு அமையவில்லை” என்றாள்.

விஷ்ணுவர்தன் எரிச்சலோடு, இந்நாட்டின் இளவரசரை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு உனக்குக் கிட்டியது… என்னைப் போன்ற சாதாரணமானவனை சந்திக்க உனக்கு வாய்ப்பு கிட்டவில்லை… அப்படித்தானே?” என்று சொல்லிவிட்டு அவன் ஏளனமாய் சிரிக்க,

புரிந்து கொள்ளுங்கள்… இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நானே நினைக்கவில்லை” என்று அவள் அவன் வார்த்தையினால் உண்டான வேதனையால் விழிகளில் நீர் வழிய உரைத்தாள்.

நீதான் நிதர்சனம் உணராமல் கனவிலேயே சஞ்சரிப்பவளாயிற்றே… உன் கோபமும் அகந்தையும் உன்னை சிந்திக்கும் திறனற்றவளாய் மாற்றிவிட்டது… ஆதலால்தான் உன் நிலையை மறந்து நீ ஆசை கொண்டிருக்கிறாய்” என்றான்.

இல்லை… அவ்விதம் நானாக ஆசை கொள்ளவில்லை… நடந்தவை எல்லாம் விதியின் வசம் நிகழ்ந்ததே… நான் என்ன செய்வது?” என்று அழுகையோடு தேம்பிக் கொண்டே உரைத்தாள்

இப்போதும் உன் தவற்றை நீ உணராமல் விதியின் மீது பழி போட்டு தப்பிக் கொள்ள பார்க்கிறாய் அக்னீஸ்வரி”

என் தவற்றை நான் உணராமல் இல்லை… எனக்கும் அது புரிந்தது” என்று கண்ணீரைத் துடைத்த போதும் அவளை மீறி அது வழிந்தபடியே இருந்தது.

அவளின் கண்ணீரைப் பார்த்து ஏனோ விஷ்ணுவர்தனிற்கு இரக்கம் துளி கூட ஏற்படவில்லை. மாறாய் கோபமே அதிகரித்தது.

வெகு தாமதமாய் உன் தவற்றை உணர்ந்திருக்கிறாய்… ஆனால் இப்போது உணர்ந்து என்ன பயன்” என்று கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்க்க விரும்பாமல் பார்வையை ஒளிவீசிக் கொண்டிருக்கும் விளக்கை கண்டபடி உரைத்தான்.

அவனின் கோபமும் அவளின் கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்க இருவரும் சிறிது நேரம் மௌனமாகினர்.  அந்த அறைக்குள் நிசப்தம் குடிகொண்டது.

இப்போது அக்னீஸ்வரி சற்று கண்ணீரைத் துடைத்தபடி தெளிவு பெற்றவளாய், “இதற்கு மேல் நான் எந்த விளக்கமும் தர விரும்பவில்லை… என்ன காரணம் சொன்னாலும் நான் உங்களுக்குச் செய்ததை நியாயப்படுத்த இயலாது… நீங்கள் உங்கள் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அவ்வாறு செய்யுங்கள்” என்று அவள் அவனை நோக்கி உரைத்தாள்.

இப்போது அவன் அதீத கோபத்தோடு அவள் அருகில் வந்து அவளின் தாடையை அழுத்திப் பிடித்து நிமிர்த்தி, “என்ன சொன்னாய்… என் மனதிற்குத் தோன்றியதைச் செய்யவா… இந்தத் திருமண பந்தத்தை முறித்து விடலாம் என்று தோன்றுகிறது… செய்யட்டுமா… அவ்விதம் நான் செய்தால் உனக்கு வேண்டுமானால் அந்த முடிவு ஆனந்தத்தைத் தரலாம்ஆனால் அந்த முடிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீ அறிவாயா… உன் சகோதரிக்கும் என் சகோதரனுக்கும் இடையிலான மணவாழ்க்கையும் பாதிக்கப்படும்… அண்ணிக்கு குழந்தை பேறு நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நான் அவ்வாறு செய்தால் அவர்களின் மனநிலையை வேறு பாதிக்கும்.

யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் உன்னை மாதிரி சுயநலம் கொண்டவனாய் என்னால் இருக்க முடியாது… ஆதலால் இப்பிறவியில் நம் விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் நான்தான் உன் கணவன் என்று விதிக்கப்பட்டுவிட்டது… அதை நீ பெயரளவிலாவது ஏற்றுக் கொள்… வேறு வழியே இல்லை” என்று சொல்லி அவன் கைகளை அவள் மீது இருந்து விலக்கிக் கொண்டான்.

அக்னீஸ்வரி அவனின் செயலால் அதிர்ந்து போனாலும் அவன் சொன்னதைக் கேட்டு கோபத்தோடு, “நான் ஒன்றும் சுயநலமானவள் அல்ல… எனக்கும் எல்லோர் மீதும் அக்கறை இருக்கிறது” என்றாள்.

ரொம்ப அக்கறைதான்… செய்வதை எல்லாம் செய்துவிட்டு வாய் மட்டும் குறைவே இல்லை” என்றான்.

நான் மட்டும்தான் எல்லாவற்றிற்கும் காரணமா… தாங்கள் எதுவும் செய்யவே இல்லை என்பது போல் பேசுகிறீர்கள்” என்று அக்னீஸ்வரி கேட்க,

அப்படி என்ன நான் செய்தேன்?” என்று முறைப்போடு அவளைப் பார்த்தான்.

அன்று திருமண பந்தத்தில் நாட்டமே இல்லை என்று சொன்னீர்கள்… இன்று மட்டும் என்னை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள்” என்று கேள்வி எழுப்பினாள்.

தவறுதான்… பெரும் தவறு… செய்திருக்கக் கூடாதுதான்… எப்பிறவியில் என்ன பாவம் செய்து தொலைத்தேனோ… உன்னை மணந்து கொண்டேன்…எல்லாம் என் தலைவிதி… நான் பேசாமல் நீ சொன்னது போல் துறவு பூண்டிருக்கலாம்… இப்போது மட்டும் என்ன… என் நிலைமை அதுதான்” என்று விரக்தியாய் பேசியபடி விஷ்ணுவர்தன் படுக்கை விரிப்பில் படுத்து கொண்டான்.

தான் அவ்விதம் கேட்டிருக்கவே கூடாது என்று கால தாமதமாய் உணர்ந்த அக்னீஸ்வரி அவன் அவ்வாறு புலம்புவதைப் பார்த்து தவிப்புற்றாள்.

அவள் பார்வையை கவனித்த விஷ்ணுவர்தன், “இப்போது எதற்கு என்னை அவ்விதம் பார்க்கிறாய்… பார்வையாலேயே எரித்துவிடலாம் என்று எண்ணமோ… அத்தகைய சக்தி உன்னிடம் இல்லை என்று இப்போது நானும் வருத்தம் கொள்கிறேன் அக்னீஸ்வரி… இந்த நொடியே எரிந்து சாம்பலாகி இந்த உலகத்தை விட்டு ஒரேடியாய் சென்றுவிடலாம் பார்” என்றான்.

நான் அத்தகைய எண்ணம் கொண்டு தங்களைப் பார்க்கவில்லை… நீங்களாக ஏதேனும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள்” என்றாள்.

நானாக கற்பனை செய்கிறேனா… உண்மைதான்… எனக்கு புத்தி பேதலித்துவிட்டது… என்ன செய்வது… உன்னை போன்ற பெண்ணை திருமணம் செய்தால் வைத்தியனுக்கும் புத்தி பேதலிக்கும்” என்று சொல்ல அக்னீஸ்வரி தன்னை அறியாமல் அவன் சொன்னதைக் கேட்டு எரிச்சலடைந்தவளாய் “ஈஸ்வரா” என்றழைத்தாள்.

கடவுளர்களில் கூட உனக்கு ஈஸ்வரனைத்தான் பிடிக்குமோ?!” என்றான்.

ஏன் இப்படி பேசிப் பேசி உங்கள் வார்த்தைகளால் என்னைக் காயப்படுத்துகிறீர்கள்” என்று வேதனையோடு கேட்க,

நீதானே சொன்னாய் அக்னீஸ்வரி… என் கரம் பற்றுவதை விட காயம் படுவதே மேல் என்று”.

அக்னீஸ்வரிக்கு அன்று நடந்தவை நினைவுக்கு வர தானும் அவனை யோசிக்காமல் ரொம்பவும் காயப்படுத்திவிட்டோம் என்று குற்ற உணர்வோடு “அன்று அவ்விதம் நான் நடந்து கொண்டது தவறுதான்… என்னை மன்னித்துவிடுங்கள்” என்றாள்.

மன்னிப்பு மட்டும் என்னிடம் கேட்காதே… நிச்சயம் அது உனக்குக் கிட்டாது அக்னீஸ்வரி” என்று வேதனையோடு சொல்லிவிட்டு அவளைப் பாரா வண்ணம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

எதிர்பாராதவை எல்லாம் நடந்து அந்த நாள் அக்னீஸ்வரிக்கு பெரும் ஏமாற்றத்தோடும் வேதனையோடும் முடிவுற்றது. ஒருபுறம் விஷ்ணுவர்தன் மீது கோபம் ஏற்பட்டாலும் இன்னொரு புறம் இரக்கமும் ஏற்பட்டது. அதே நேரத்தில் ருத்ரதேவன் கோட்டைக்குத் திரும்பினால் தனக்குத் திருமணம் நடந்த செய்தி அறிந்து எத்தகைய வேதனையை அடைவானோ என்ற கவலை வேறு முழுவதுமாய் ஆட்கொண்டுவிட அவளின் இரவு உறக்கமில்லாமல் கரைந்து போனது.

9

அவனின் பிம்பம்

விஷ்ணுவர்தனையும் அக்னீஸ்வரியையும் அரங்கநாதன் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்ற பின்னர் பிறந்த வீட்டில் இருந்து விஜயவர்தனுடனும் வைத்தீஸ்வரியுடனும் நீலமலை குடிலுக்கு முறைப்படி அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர்.

அவ்வாறே நால்வரும் கோவிலுக்கு வரஅக்னீஸ்வரிக்கோ அரங்கநாதனை தரிசிக்கும் விருப்பமே இல்லை. எத்தனையோ வண்ணமயமான மாலைகளை அரங்கநாதனுக்காக கட்டி அணிவித்து அழகு பார்த்திருக்கிறாள். ஆனால் அந்த அரங்கநாதன் தன் வாழ்வை இரு ஆடவர் கையில் சிக்க வைத்து பொருளற்றதாக மாற்றிவிட்டார் என்று அவர் மீது அபரிமிதமான கோபத்திலிருந்தாள்.

இருப்பினும் எல்லோருக்காகவும் விருப்பமின்றி அவள் கோவிலுக்குள் நுழைந்தாள். கருவறை மண்டபத்திற்குள் நுழைந்து எல்லோரும் இறைவனை மனமுருகி வேண்டஅவள் மட்டும் தன் மனதில் நினைத்த கேள்வியை மௌன பாஷையில் கேட்டாள்.

எதற்காக இதே திருத்தலத்தில் என்னை இளவரசரை சந்திக்க வைத்தாய்… பின் இங்கேயே எனக்கு விருப்பமில்லாத திருமணத்தை முடித்தும் வைத்தாய்… இரண்டில் ஒன்றையாவது நீ தடுத்து நிறுத்தி இருக்கலாமே…ஏன் இவ்வாறு செய்தாய்?… நான் தினந்தோறும் உனக்கு மாலை கட்டி சாற்றியதற்கு இது நீ எனக்குச் செய்யும் உபகாரமா?… இப்பிறவி இல்லை… இனி எப்பிறவியிலும் உன்னை வணங்கவும் மாட்டேன்… உனக்காக மாலையும் கோர்க்க மாட்டேன்” என்று சபதமாய் உரைத்துவிட்டு தீபாராதனையை கூட தொட்டு வணங்காமல் மண்டபத்தை விட்டு அவள் வெளியே வரஅங்கே அவள் தோழி ரங்கநாயகி அவளைப் பார்த்து பிரியப் போவதை எண்ணி வருத்தம் கொண்டு புலம்பித் தீர்த்தாள்.

இனி உன்னை போல் அரங்கநாதனுக்கு யார் அழகாய் மாலை கட்டுவார்கள்” என்று ரங்கநாயகி கேட்க, “அரங்கநாதனுக்கு அழகழகாய் மாலை அணிவித்து நான் என்ன பயனைக் கண்டேன்?” என்று விரக்தியோடு உரைத்தாள் அக்னீஸ்வரி.

அக்னீஸ்வரியின் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கவனித்த ரங்கநாயகி, “ஏன் உன் முகத்தில் இவ்வளவு கலக்கம்… என்னவாயிற்று?!” என்று ரங்கநாயகி பதட்டமாய் கேட்க,

அக்னீஸ்வரி, “அதெல்லாம் ஒன்றும் இல்லை… உங்கள் எல்லாரையும் விட்டுப் பிரிந்து போகிறேன் என்ற வருத்தம்தான்” என்று சமாளிக்கும் போது விஷ்ணுவர்தன் பின்னோடு வருவதை ரங்கநாயகி கவனித்தாள்.

ஆதலால் ரங்கநாயகி அவசரமாய் தன் தோழியிடம் விடைபெற்றுவிட்டு அகன்று விட,விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியின் அருகில் வந்து நின்று,

ஏன் இப்படி சோகமே உருவமாய் இருக்கிறாய்… நீ இப்படி இருப்பதால் எல்லோரும் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்லவே முடியவில்லை… நான்தான் உன்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என பார்ப்பவர்கள் எல்லோரும் எனக்கு அறிவுரை கூறுகிறார்கள்… யாருக்குமே என் நிலைமை புரியவில்லை… இப்போது உன் கவலைதான் என்ன அக்னீஸ்வரி… ருத்ரதேவனை மணந்து கொள்ள முடியாத ஏக்கமா?… இல்லை… என்னைப் போன்ற ஒருவனை மணந்து கொண்டோம் என்ற ஏமாற்றமா?” என்று அவன் கோபாவேசமாய் வினவவும் அவள் பதறிப் போனாள்.

போதும்… இப்படி வார்த்தைகளால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் கொல்வதற்குப் பதிலாக… உயிரை மாய்த்துவிடும் ஏதேனும் நஞ்சு நிறைந்த மூலிகைகள் இருந்தால் கொடுங்கள்… உண்டு விட்டு நிம்மதியாய் போய் சேர்ந்து விடுகிறேன்” என்றாள்.

அவள் இவ்வாறு சொன்னதைக் கேட்டு விஷ்ணுவர்தன் கோபத்தை விடுத்துச் சிரித்துவிட்டு, “அத்தகைய மூலிகைக் கிட்டியதும் முதலில் நான் உண்டு பரீட்சித்து பார்த்துவிட்டு… நிச்சயம் உனக்கும் தருகிறேன்… ஆனால் ஒன்று அக்னீஸ்வரி… மீண்டும் தப்பித்தவறி பிறவி எடுத்தால் உன்னைப் போன்ற ஒருத்தியை நான் அப்பிறவியில் சந்தித்துவிடவே கூடாது… அப்படியே சந்தித்தாலும் அவள் என் மனையாளாய் இருக்கவே கூடாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வைத்தீஸ்வரியும் விஜயவர்தனும் அங்கே வந்து நின்றனர்.

என்ன விஷ்ணுவர்தா?… ஏதோ பிறவி எடுத்தால் என்று பேசிக் கொண்டிருந்தாய்… எதை பற்றி?”என்று விஜயவர்தன் வினவ விஷ்ணுவர்தன் என்ன பதில் சொல்வதென்று யோசித்தபடி நின்றான்.

அக்னீஸ்வரி தன் வேதனையை மறைத்துக் கொண்டு முறுவலித்து, “அது ஒன்றும் இல்லை அத்தான்… மீண்டும் பிறவி எடுத்தால் நானே இவருக்கு மனையாளாய் வர வேண்டுமாம்” என்றாள்.

விஷ்ணுவர்தன் அவளை முறைத்துப் பார்க்க வைத்தீஸ்வரி தன் கணவனின் புறம் திரும்பி, “நேற்று திருமணம் ஆன தங்கள் தம்பி இவ்விதம் சொல்கிறார்… நீங்கள் என்றாவது என்னைப் பார்த்து இவ்வாறு சொல்லி இருக்கிறீரா?” என்று கேட்டு கணவனிடம் கோபித்துக் கொண்டு அவள் கோவிலை சுற்ற முன்னேறிச் செல்லவிஜய்வர்தனும் அவளைச் சமாதானம் செய்தபடி பின்னோடு சென்றான்.

அந்த நொடி விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரியை சீற்றமாய்  நோக்கி, “நான் அவ்வாறா உன்னிடம் சொன்னேன்” என்று கேட்க,

நீங்கள் சொன்னதை அப்படியே அத்தானிடம் சொல்ல சொல்கிறீரா?” என்று பதில் கேட்டாள் அவள். விஷ்ணுவர்தன் அதற்குமேல் அவளிடம் அதைப் பற்றி விவாதம் மேற்கொள்ளவில்லை. மௌனமாய் கோவிலை வலம் வந்தான்.

இருவரின் உறவிலும் கோபதாபங்களும் ஏமாற்றங்களும் நிரம்பியிருந்தாலும் நிலைமையை உணர்ந்து அவர்களின் உறவை புரிதல் இல்லாமல் பெயரளவிலாவது சுற்றியுள்ளவர்களின் நலனிற்காகப் பிணைத்து வைத்திருந்தனர்.

அவர்களின் திருமணம் முடிந்து ஒரு திங்கள்(மாதம்) முடிந்த நிலையில் அக்னீஸ்வரி அந்த நீலமலை அடிவாரத்தில் இருந்த ரம்மியமான சூழலை ரசித்தபடி மெல்ல நடந்து வந்து குளக்கரையில் தண்ணீர் எடுக்க வந்து கொண்டிருந்தாள். அங்கே வரும் போதெல்லாம் ருத்ரதேவனின் நினைவு அவளை வாட்டிக் கொண்டேதான் இருந்தது. ஆனால் சில நாட்களாக அக்னீஸ்வரி மெல்ல மெல்ல அவனின் நினைவிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு மாறியிருந்தாள்.

தண்ணீர் எடுக்க குடத்தைக் குளத்திற்குள் நுழைக்க அதில் தெரிந்த பிம்பம் அவள் நெஞ்சை உலுக்கிவிட்டது.

ருத்ரதேவன் குதிரையின் மீது அமர்ந்திருக்க இது தன் பிரமையோ என்று எண்ணி அந்தத் தண்ணீரை கைகளால் சலனப்படுத்தினாள்.

ஆனால் அந்தப் பிம்பம் மறையவில்லை. ஏனோ திரும்பி நோக்க அவள் அச்சம் கொள்ள,படபடவென அவள் இதயம் வேகமாய் துடிக்கத் தொடங்கியது.

என்னைத் திரும்பி நோக்க ஏன் இத்தனைத் தயக்கம் அக்னீஸ்வரி… காதல் உணர்வா இல்லை குற்றவுணர்வா?” என்றவன் கேட்க அவள் தேகமெல்லாம் சில்லிட்டுப் போனது.

அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் அவள் அப்படியே சிலையாய் சமைந்து விட அவன் மேலும், “அக்னீஸ்வரி… நான் வந்ததும் மாலை அணிவிப்பதாக வாக்கு கொடுத்தாயே…நினைவிருக்கிறதா இல்லை அதையும் மறந்து விட்டாயா?!” என்று ருத்ரதேவன் நிறுத்தி நிதானமாய் கேட்க,

அவனின் சொற்கள் அவள் மீது செந்தழலை வாரி இறைத்தது போல் தோன்றியது. எல்லாவற்றையும் அவன் அறிந்து கொண்டே இவ்விடம் வந்திருக்கிறான். இனி தான் சொல்ல என்ன இருக்கிறது. அப்படியே தன் நிலைமைக் குறித்து உரைத்தாலும் அது அவனை பொறுத்தமட்டில் நியாயமற்றதாகவே இருக்கும் என்று எண்ணமிட்டுக் கொண்ட அக்னீஸ்வரிஅவனைப் பார்க்க விருப்பமின்றி தண்ணீரைக் கூட குடத்தில் நிரப்பாமல் அங்கிருந்து வேகமாக அகன்று செல்ல எத்தனித்தாள்.

நில் அக்னீஸ்வரி” என்று அவன் கம்பீரமான குரலில் அடங்கா கோபத்தோடு  அதிகாரத்தொனியில் அவளை அழைத்தான்.

error: Content is protected !!