உதிரத்தின்… காதலதிகாரம்! 3
உதிரத்தின்… காதலதிகாரம்! 3
உதிரத்தின்… காதலதிகாரம்!
காதலதிகாரம் 3
கௌதமைப்போல குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த சஞ்சய் என்பவனுக்கு திடீரென்று சிறுநீரகத்தின் வழியே வரத் துவங்கிய உதிரத்தை நிறுத்த, முதலுதவிகள் மதுரையில் செய்யப்பட்டு பலனளிக்காமல் போனதால், இறுதியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பணிக்கப்பட்டான்.
ஆனால் அவனுக்கு உதவிக்கு வர அவனது குடும்பத்தாற் யாரும் முன்வராததால், கௌதம் இரண்டு நாள்கள் அவனுடன் செல்ல முன்வந்திருந்தான்.
சஞ்சயிக்கு இரண்டாண்டுகளுக்கு முன் திருமணமாகியிருந்தது. பிரகதியைப்போல தானாகவே முன்வந்து அவனைக் காதலித்து மணமுடித்தவள்தான் அவனது மனைவி.
ஆரம்பத்தில் அவன்மீது இருந்த அன்பு, நேசம் அனைத்தும் அவனது உடல்நிலையை உடனிருந்து கவனித்தவளுக்கு மறைந்து போயிருந்தது. அந்த நிலை அவ்வப்போது நீடிக்கவே அவன்மீது வெறுப்பும், நம்பிக்கையின்மையும் உண்டாகத் துவங்கியிருந்தது.
நாள்கள் நகரவே சண்டை சச்சரவுகள் இருவருக்கிடையே அதிகரித்திருந்தது.
அவளின் எதிர்பார்ப்புகளை அவனால் பூர்த்தி செய்ய முடியாமல் சஞ்சய் கூனிக் குறுகும் நிலைக்குத் தள்ளப்பட, அவனது மனைவியோ அவனை வார்த்தைகளால் கூறுபோட்டு சித்தரவதை செய்யத் துவங்கியிருந்தாள்.
“உனக்கெல்லாம் லல்வு ஒரு கேடு. அது பத்தாதுன்னு வெக்கமில்லாம குழந்தை வேற? நீயெல்லாம் வாழவே லாயக்கில்ல. இதுல உனக்கு கல்யாணம் வேற! ஒரு நாளாவது எனக்குப் பிடிச்ச மாதிரி எதாவது பண்ணியிருக்கியா? சம்பாத்தியம் பண்ணத்தான் துப்பில்லனா, என்னை சந்தோசமாவாவது வச்சிக்க முடியுதா உன்னால!” இப்படியான அவளின் வார்த்தைகள் சஞ்சய்யை மேலும் குன்றச் செய்தது.
அவ்வப்போது தனது நண்பர்களிடம் தனது நிலையை மேலோட்டமாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள, அதனை அறிந்த கௌதமிற்கு சஞ்சய் மீது அதிகமான கரிசனம்.
சஞ்சய்யின் மனைவியைக் குறை எதுவும் கூறாமல், “நீ உன்னால முடிஞ்ச அளவுக்கு அந்தப் பொண்ணை நல்லா வச்சிக்க ட்ரை பண்ணு மாப்ளை. எல்லாம் போகப் போக சரியாகிரும்” ஆறுதல் கூறினாலும், அவனுக்கே இது சரியாவற்கான முகாந்திரமில்லாமல் இருக்கிறது என்பது புரிந்தேயிருந்தது.
பெற்றோர் வயோதிகம் காரணமாக சஞ்சய்யுடன் அலைந்து அவனைப் பராமரித்துத் தேற்ற முடியாமல் வீட்டிலிருக்க, அவனது மனைவியோ கைக்குழந்தையுடன் இருப்பதனைக் காரணம் காட்டி அவனோட வராமல் வீட்டிலேயே இருந்து கொண்டாள்.
அப்படியே சஞ்சயை யாரும் கவனிக்காமல் விட்டால் நிச்சயம் மரணத்தைத்தான் அவன் தழுவ நேரிடும்.
சில தன்னைப்போல பாதிக்கப்பட்ட வாலண்டியர்களைக் கொண்டு சஞ்சய்யை போன்று ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காகவே அமைப்பு ஒன்றை நிறுவி அதன் வாயிலாக கடந்த ஆண்டு முதல் உதவிகள் செய்து வருகிறான் கௌதம்.
தன்னைப் போன்ற குறைபாடுடைய சிலரின் எதிர்பாரா மரணங்கள் கௌதமை இப்படி யோசிக்கத் தூண்டியிருந்தது.
வயது வித்தியாசமின்றி இவனைப்போல பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரிடும் எதிர்பாரா மரணங்கள் கௌதமை விழிப்புணர்வு கொள்ளச் செய்திருந்தது.
அடுத்தடுத்து அவனைப்போல பாதிக்கப்பட்ட திருமணமாகாத ஆண்கள் இரண்டு நாள்கள் வீதம் சஞ்சய்யுடன் சென்று தங்கியிருக்க ஒப்புக் கொண்டதால், இரண்டு நாள் கழித்து மதுரைக்கு திரும்பி வந்திருந்தான் கௌதம்.
அதிகாலையில் மதுரை வந்தவன் அசதியால் சற்றுநேரம் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
***
உமாவிற்கு வாரயிறுதி நாளாதலால் அன்று விடுமுறை.
முதலில் பிரகதி உமாவிடம் பேசிவிட்டு, தனது தந்தை மற்றும் தாய் இருவரும் அவரிடம் பேச வேண்டும் என்று கூறியதாகக் கூறிட, “என்ன விசயம்டா?” பிரகதியிடமே கேட்டிருந்தார் உமா.
உமாவிற்கு பிரகதியின் பேச்சு, செயல் அனைத்துமே தனது மகனை அவள் விரும்புவதைச் சொல்லாமல் சொன்னாலும், அதைப்பற்றி அவளிடம் காட்டிக் கொண்டதில்லை. மேலும் மகனிடம்கூட வாயைத் திறந்ததில்லை.
தனது கணிப்பு ஒரு வேளை தவறாக இருந்து… தான் கேட்டதால் பிரச்சனைகள் எதுவும் ஒரு பெண்ணது வாழ்வில் வந்துவிட வேண்டாமே! என்கிற எச்சரிக்கை உணர்வும்தான்.
மேலும், ‘கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதான ஆகணும். அதுவரை வேடிக்கை பாப்போம்’ நிதானமாகவே அவளின் செயலைப் பார்வையிட்டாலும், தெரியாததுபோல கடந்திருந்தவர் இன்று அவ்வாறு இருக்காமல் பிரகதியிடம் வினவ,
“அத்தம்மா…” சிணுங்கலாக இழுத்த பெண்ணிடம்,
“விசயம் என்னானு சொன்னா எனக்கும் அவங்கட்ட பேசறதுக்கு வசதியா இருக்கும்ல. திடுதிப்புன்னு உங்க அம்மா அப்பாகிட்டப் பேசணும்னா என்னத்தைப் பேசறது? அதனாலதான் கேட்டேன் பிரகதி.” சாந்தமாகவே பிரகதியிடம் கேட்க,
அலைபேசியில் பேசியவளின் குரலிலேயே அவள் நாணமும், பயிர்ப்புமாக தன்னிடம் பேசுவதைக் கேட்ட உமாவிற்கு அத்தனை சந்தோசம்.
“என்ன அத்தம்மா. ஒன்னுமே தெரியாத மாதிரியே கேக்கறீங்க? உங்களை அத்தைனு சொல்றேன். உங்க பையனை சுத்தி சுத்தி வரேன். வேற எதுக்கு அத்தம்மா… எல்லாம் மேரேஜ் விசயமா பேசத்தான்” திக்கித் திணறி சொல்லி முடித்தவள்,
“உங்க நம்பரைக் குடுத்துட்டேன். முதல்ல பெரியவங்க பேசி நல்ல முடிவுக்கு சீக்கிரமா வாங்க” என்றவள்,
“நீங்கதான் எங்கம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணி எப்டியாவது எங்களைச் சேத்து வச்சிரணும் அத்தம்மா” எனும் வேண்டுதலோடு வைத்திருந்தாள்.
கோவிலில் வைத்து முதலில் சந்திப்பது என்றும், அதன்பின் இரு குடும்பத்தாரின் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு விசயங்களைத் துவங்கலாம் என ஒருவாராக முடிவு செய்யப்பட்டு, கௌதம் ஊரில் இல்லாத நாளில் சந்திக்கவும் செய்திருந்தனர்.
கௌதம் சிறு வயது முதலே எப்பொழுதும் நோய், நொம்பலம் என்றிருந்தமையால் அவர்களைச் சுற்றியிருக்கும் நெருங்கிய சொந்தங்கள் அனைத்துமே, ‘இவ மையனுக்கு நம்ம வீட்டுப் புள்ளையக் கேட்டுறக் கூடாது ஆண்டவா!’ எனும் வேண்டுதலோடு,
உமாவை நேரில் சந்தித்தாலும் ஒன்றிரண்டு வார்த்தையோடு, “வேலை கிடக்குத்தா. உம்மவன் நல்லாயிருக்குல்ல. நல்லா பாத்துக்கோ.” என்பதோடு விடைபெறுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை, எதனால் அவ்வாறு பெரும்பாலான உறவுக்காரர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிய முடியாத அளவிற்கு உமா முட்டாளில்லையே.
ஒருமுறை, இரண்டு முறை என்றால் சரி. எப்பொழுதுமே இதையே வழக்கமாக்கிக் கொண்ட உறவுகளிடமிருந்து தனித்து இருப்பதையே உமாவும் விரும்பத் துவங்கியிருந்தார்.
‘சொத்து சுகம்னு இருந்தாலும், உடம்பு நல்லாயிருந்தா இப்படி யாரும் வெட்டிவிட நினைச்சுப் பேசுவாங்களா! எம்மயன் இந்நேரம் நல்லாயிருந்திருந்தா, எம்பொண்ணைத்தான் உம்மயனுக்கு எடுக்கணும், வேறு யாரையும் எடுத்தா நம்ம உறவு அவ்ளோதான்!’ எனும் உரிமைப் பேச்சுகள், அன்பு மிரட்டல்கள், அதிகார உருட்டல்கள் எல்லாம் இருந்திருக்கும் என்பதை உமாவும் அறிந்தேயிருந்தார்.
மகன் அப்படி இல்லாததை அறிந்து கொண்டதால்தானே வீட்டில் திருமணத்திற்குப் பெண்ணை வைத்திருக்கும் அனைவருமே தன்னையும், தன் கணவரையும் தவிர்ப்பதையும் அறிந்திருந்தார்.
சில நேரங்களில் அதை கணவரிடம் சொல்லி புலம்பியும் இருந்திருக்கிறார்.
வெளியிடங்களில் பெண் பார்க்க முனைந்தவரை, “எதுக்கும்மா வேண்டாத வேலை பாத்துட்டு இருக்கீங்க. எனக்கு இப்போ கல்யாணந்தான் ஒரு கேடா?” என்று ஆரம்பத்திலேயே கேட்டவன்,
“இத்தோட விடுங்கம்மா. மேற்கொண்டு எதுவும் பேசவோ செய்யவோ வேணாம்” கறாராகக் கூறிய மகனிடம்,
“இப்ப பாத்தாதான் இன்னும் ஒரு வருசத்துல உனக்கு கல்யாணம் பண்ணலாம்” என்றார் உமா.
“அப்டியா…?” என ஒரு கனம் யோசிப்பதுபோல பாவனை செய்தபடி நின்றவன்,
“நானே சொல்றேன். அப்போ பாத்துப்போம்” என அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் கௌதம்.
பிரகதியும் அடிக்கடி மருந்தகத்திற்கு வருவது, சில நேரங்களில் வீட்டிற்கு வருவது என்றிருந்தமையால், உமாவும் அவளையே தனது வருங்கால மருமகளாக எண்ணி, கடமையை அடடா என்று செய்ய எண்ணாமல் நம்பிக்கையோடு இளைப்பாறினார்.
அப்படி இருந்த சமயம் அவளாகவே விசயத்தைக் கூறிட இதுதான் தக்க சமயமென்று எண்ணியவர், குலம் கோத்திரம் என்று தோண்டித் துருவாமல், குடும்பத்தைப் பற்றிய விவரங்களை மட்டும் அவளின் பெற்றோர் வாயிலாகவே கேட்டறிந்து கொண்டவர், நம்பிக்கை வார்த்தை கூறி விடைபெற்றிருந்தார்.
மகனிடம் பேச எண்ணியவருக்கு அன்று சமயம் கிடைக்க, விசயத்தை கௌதமிடம் பேசத் துவங்கினார்.
***
தாய் கூற வந்த அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன் முடிவில், “இது சரி வராதும்மா. இத்தோட விடுங்க” என எழுந்து சென்றவனிடம், தவிர்ப்பதற்கான காரணத்தைக் கேட்டார் உமா.
“உங்களுக்கு ரீசன் நான் சொன்னாத்தான் புரியுமா? நான் படற கஷ்டத்தைப் பாத்துட்டும் எப்டிம்மா உங்களுக்கு மனசு வருது? அந்தப் பொண்ணை வேற மாப்பிள்ளை பாத்து கட்டிக் குடுக்கச் சொல்லிருவீங்கன்னு நினைச்சேன். ஆனா இப்படி வந்து எங்கிட்டக் கேக்கறீங்க?” வருத்தமாகவே கேட்டான் தாயை நோக்கி.
“எங்க காலம்வரை சரி. அதுக்கப்புறம் நீ தனியா எப்டி?” கண்களில் நீரோடு கேட்ட தாயைக் கண்டவனுக்கு எரிச்சல் வந்தது.
“இப்ப எதுக்கு கண் கலங்குறீங்க? ம்மா… எதுக்கு தெரிஞ்சே ஒரு பொண்ணு வாழ்க்கைய வீணடிக்கனும்!”
“எதுக்கு வீணாகுது?” கை வேலையைப் பார்த்தபடியே மகனுக்கு பதிலளித்தார் உமா.
“புரியாத மாதிரி பேசாதீங்கம்மா, உங்களுக்கு வேணா உங்க புள்ளை உசத்தியா இருக்கலாம். இல்லை சுயநலமா யோசிச்சு இப்டி நீங்க ஆசைப்படலாம். அவங்க நிலைமையையும் யோசிச்சுப் பாருங்க” வலித்தாலும் விசயத்தை மறைக்காமல் தாயிடம் கேட்டு வைத்தான்.
“நாங்க இன்னும் எவ்ளோ காலத்துக்கு தம்பி உங்கூடவே இருப்போம்?” மீண்டும் அதையே மாற்றிக் கேட்டார் உமா.
“அதுக்கு! காலத்துக்கும் ஒரு பொண்ணு கண்ணீர் வடிக்கணுமா?” ஆவேசமாகவே வந்தது கௌதமின் வார்த்தைகள்.
“அப்டி ஏன் நினைக்கிறே..! நல்லாயிருக்கும்போது பிரச்சனை எதுவும் இல்லைல! எப்பவாவது முடியாமப் போனாதான கஷ்டம். அது எல்லா மனுசங்களுக்கும் வரதுதான?” உமாவும் விடவில்லை.
“ம்மா புரியாம பேசாதிங்க. இந்தக் காலத்துப் பொண்ணுங்களோட ஆசைக்கு நல்லாயிருக்கறவனாலயே ஈடுகொடுக்க முடியாம நாக்குத் தள்ளிப்போயி திரியறானுங்க.
நான் இந்த நிலைமைல இருந்துட்டு ஆசைப்பட்டா. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படற மாதிரிம்மா!” தனது தாயிக்கு புரிய வைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தான் கௌதம்.
“அதுக்காக முடவன் தேனே சாப்பிடக்கூடாதுன்னா இருக்கு! கையில காசிருந்தா வாங்கி சாப்பிட்டுக்கலாம்ல!” மகனிடம் உமா கேட்க,
“ம்மா… எதுவுமே தெரியாத மாதிரியே பேசாதீங்க. என்னோட நிலைமையை நேருல பாக்கறீங்க. நான் என்னைப் பாத்துக்கறதே பெரிய விசயம்.
இதுல என்னை நம்பி ஒருத்தி. அப்புறம் புள்ளைனு… இதெல்லாம் அளவுக்கு மீறுன சுமைம்மா! சின்னக் குருவியோட தலையில இதை அப்டியே இறக்கி வச்சா?
இன்னொன்னு எதாவது எனக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா வந்தவளோட நிலைமைய நினைச்சிப் பாருங்க. எதையுமே யோசிக்காம அவங்கட்ட தலையாட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றவனையே பார்த்திருந்த உமா,
“உன்னைவிட மோசமான நிலையில இருக்கறவங்கள்லாம் கல்யாணம் காச்சின்னு குடும்பமா சந்தோசமாத்தான இருக்காங்க! நல்லா வலுவா நோய் நொடியில்லாம இருக்கறவனுக்கும் திடீர்னு சாவு வரத்தான் செய்யுது.
முடியாம இருக்கறவன், எழுவது எம்பது வருசம்னு நோயோட அல்லாடிட்டு சாகறான். அதுக்கு யாரு என்ன செய்ய முடிவும். எல்லாம் அவுகவுக தலையெழுத்து தம்பி அது.
ஆறுலயும் சாவு, நூறுலயும் சாவுன்னு சொல்லுவாங்க. அதையெல்லாம் மனுச யோசிச்சா ஒரு பயலும் வாழவே முடியாது. அதனால பேசாம அந்தப் புள்ளையவே கல்யாணம் பண்ணிக்கிட்டா அம்மாவுக்கும் சந்தோசமா இருக்கும்” என தனது மனகிலேசத்தை மகனிடம் உரைத்தார் உமா.
“பொண்ணு வச்சிருக்கற நம்ம சொந்தக்காரவன்ல ஒரு பய நம்மகூட பேசவே பயப்படறாணுங்க. ஆனா நம்மைப்பத்தி தெரியாததால வந்து பேசறவங்களை ஏமாத்த உங்களுக்கு எப்டிம்மா மனசு வருது?” அதிருப்தியோடு வினவினான் கௌதம்.
மகன் கேட்பது சரியாக இருந்தாலும் தாங்கள் இருவருமில்லாமல் மகன் தனித்து கஷ்டப்பட்டுவிடக் கூடாதே எனும் ஆதங்கத்தில், “எனக்கும் வேற வழி தெரியலை கௌதம். நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைச்சதில்ல.
ஆனா எம்புள்ளை எங்காலத்துக்குப் பின்னயும் நல்லா இருக்கணும்னு நினைக்கறது எனக்கொன்னும் பேராசையாத் தெரியலை. இது சாதாரணமா எல்லாத்துக்கும் இருக்கற ஆசைதான். அதனால நான் சொல்றதைக் கேளு” முடிவாகச் சொன்னார் உமா.
“இந்த விசயம் முடியாதும்மா. வேற என்னனாலும் சொல்லுங்க கேக்கறேன்” கௌதமும் பிடிவாதமாக மறுத்துக் கூற,
“அப்ப மொட்டைப் பயலாவே இருக்கப் போறீயா?” உமா வெகுண்டுபோய் வினவ,
“தலை நிறைய முடி வச்சிட்டு இருக்கறவனை மொட்டையா இருக்கப் போறீயானு கேட்டு அசிங்கப்படுத்துறீங்க!” என்று சிரித்தபடியே அங்கிருந்து அகன்ற மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்டு அசட்டு சிரிப்பை உதிர்த்தாலும், திருமணமே வேண்டாம் எனும் அவனது மன உறுதியை தகர்க்கும் வழி தெரியாமல் யோசனையோடு அகன்றார் அத்தாய்.
முன்பே கணவரிடம் விசயம் பகிர்ந்தவர், அன்று மகன் திருமணத்திற்கு மறுப்பதைப் பற்றியும் அவரிடம் அழைத்துப் பேசிவிட்டு, “நீங்க இங்க வந்துட்டுப் போங்க. எனக்கு இவனை சமாளிக்க முடியலைங்க. நீங்க சொன்னா ஒருவேளை கேப்பானா இருக்கும்” தனது பாரத்தை கணவரது தோளுக்கு மாற்றிவிட்டு, மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினார் உமா.
மருந்தகம் சென்றவன் அங்கு அவனுக்கு முன்பே வந்து அவனுக்காகவே காத்திருந்த பிரகதியைக் கண்டு, காணாததுபோலச் சென்றமர்ந்தான்.
ஆண் பணியாளரை வேறொரு பணியின் நிமித்தம் வெளியில் அனுப்பியிருந்தான் கௌதம்.
தன்னைக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற கௌதமைக் கண்டவள், ‘அத்தம்மா நல்ல முடிவாத்தான சொன்னாங்க. இப்ப ஏன் விறைப்பாத் திரியுது இந்த சீனியர்?’ புரியாமல் தனக்குள் புலம்பினாலும், வெளியில் அதனைக் காட்டிக் கொள்ளாது மருந்தகப் பணியாளர்களோடு சிரித்தபடியே வேலைகளில் பங்கு கொண்டிருந்தாள்.
அவர்கள், “நாங்களே பாத்துக்குவோம் மேடம். நீங்க உக்காருங்க” என்று கூறினாலும் அவளாகவே எதையேனும் இழுத்துப் போட்டு சில வேளைகளில் பணி செய்வாள். சில நேரங்களில் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு கிளம்பிச் சென்றுவிடுவாள்.
கௌதமை தனியே சந்திக்க எண்ணியிருந்தவளின் எண்ணம் புரியாதவனா கௌதம். அவன் அவளைத் தவிர்க்க எண்ணி வேலையில் தன்னை மூழ்கடித்தவாறும், பிரகதியோ அவனைத் தன்னை கவனிக்கச் செய்ய என்ன செய்யலாம் என்கிற தீவிர சிந்தனையிலும் இருந்தாள்.
இரண்டு நாள்கள் மருந்தகம் வராதிருந்தமையால், அந்த நாள்களில் நடந்த விற்பனை, கொள்முதல் மற்றும் இதர செலவினங்களைப் பார்வையிட்டவன், இரண்டு நாள்களில் காலியாகிருந்த மருந்துகளை ஆர்டர் போட வேண்டிய வேலையில் மும்முரமாகியிருந்தான்.
வேலையாக இருந்தவனிடம் சென்றால் வள்ளென்று பேசுவான். ஆனால் அவனிடம் பேசியே ஆகவேண்டும். என்ன செய்யலாம் என்று நீண்ட நேரம் யோசித்தவள், ஒரு முடிவுக்கு வந்தவளாக வேலை செய்யும் பாவனையில் தனக்கான சந்தர்ப்பத்தை உண்டாக்க முனைந்தாள்.
சற்று நேரத்தில், டம்மென்ற கண்ணாடியிலான பாட்டில் விழும் சத்தமும் அதனைத் தொடர்ந்து, “அச்சச்சோ” என்கிற பிரகதியின் அலறலும், அதனைத் தொடர்ந்து அவள் விழுந்த இடத்தை நோக்கி வேகமாக நகர்வதும் உடனே “ம்மா…” எனும் ஓலமும் தொடர்ச்சியாக் கேட்க,
மற்றவர்களைவிட அதிவேகத்தில் அங்கு விரைந்த கௌதம் காலைப் பிடித்தபடியே கீழே அமர்ந்திருந்த பிரகதியைத்தான் ஓடிச்சென்று கண்ணுற்றான்.
கண்டதும் சொல்லாமலேயே அனைத்தும் கௌதமிற்கு விளங்க, மருந்தக பணியாளர் பெண்கள் இருவரையும் அழைத்து, “பிரகதிய கைத்தாங்கலா பிடிச்சி பின்னாடி கேபின்ல உக்கார வைங்க. அப்புறம் காலுல காயம் எப்டி இருக்குனு பாத்துட்டு, ஒரு ட்டீட்டீ போடலாம்” என்றதோடு, அவளை அங்கிருந்து அகற்றும்வரைக் காத்திருந்தவன் அவசரமாக அந்த இடத்தில் சுக்கலாக விழுந்து தெரிந்திருந்த கண்ணாடிச் சில்களை பெருக்கி அதற்கான குப்பையில் போட்டவன், அதன்பின் இதுபோன்றவற்றை எடுக்க வைத்திருந்த மட்(mud களிமண் வகையைச் சார்ந்தது)டைக் கொண்டு துளிச் சில்லும் அங்கில்லாதபடி சுற்றிலும்அதனைக்கொண்டு ஒற்றி எடுத்திருந்தான்.
அதன்பின் பிரகதி இருந்த இடத்திற்கு கௌதம் செல்ல, பெண்கள் இருவரும் வந்தவர்களைக் கவனித்தனர்.
காலை ஊன்றிக் கவனித்தவன், “சின்ன காயந்தான். ஆனாலும் ஒரு ட்டீட்டி போட்டுட்டு வீட்டுல போயி ரெஸ்ட் எடு” என்றதோடு காட்டன் கொண்டு காலைச் சுத்தம் செய்துவிட்டு காலை ஊன்றிக் கவனித்தான்.
கவனித்தவன் காயம் பட்டிருந்த இடங்களை கைவிரல்களால் அழுத்தியவாறு, “இங்க வலியிருக்கா” என்று அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தபடியே கேட்டான்.
அவனது கேள்விக்கான பதிலைக் கூறாமல், “ரெண்டு நாளா எங்க போயிருந்த? என்று கேட்டாள் பிரகதி.
நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தவன், பதில் பேசாமல் அவளின் முகத்தையே ஊன்றிக் கவனித்தான். அவளின் வேதனையையும் மீறி தான் அவளின் அருகில் இருப்பதை பிரகதியின் மனம் கொண்டாடுவதையும் அந்த வதனத்தின் செம்மை பூசிய கன்னக் கதுப்புகள் காட்டிக் குடுத்தது.
‘என்னவாம் இப்ப?’ இப்படித்தான் கௌதமின் மனம் சென்றது,
“கேட்டதுக்கு பதில் எம்முகத்திலயா இருக்கு?” என்று கேலியாகக் கேட்டவளையே பார்த்திருந்தவன், காலைப் பிடித்திருந்த கையை சட்டென எடுத்து அலட்சியமாக எழுந்தவன்,
“போற வழியில டாக்டர்கிட்ட காமிச்சிட்டு வீட்டுக்குப் போ!” என்றபடியே அங்கிருந்து நகர எத்தனிக்க, ‘அய்யோ… எங்க போகச் சொல்லுது?’ எனும் மனதின் அலறலோடு, வலியோடு எழுந்தவள் அவனைப் பின்னோடு மேலும் முன்னேறிச் செல்ல இயலாதபடி அணைத்துக் கொண்டாள்.
அனைத்தும் அவனுக்கு விளங்கத் துவங்கியது.
“நீயாதான் பாட்டிலைத் தள்ளிவிட்டியா?” நகராமல் திரும்பாமல் நின்ற நிலையிலேயே அவளிடம் வினவினான்.
அவன் முதுகோடு சாய்ந்திருந்த அவளின் முகம் அசைந்ததில் அவள் அதனை ஆமோதிப்பதை உணர்ந்தவன், “மெடிசன்குரிய காசை கல்லாவுல கட்டிட்டுக் கிளம்பு” விரட்டினான்.
அப்படியே அசையாமல் நின்றிருந்தவளின் கரங்கள் அவனது மார்போடு இறுக இணைந்திருக்க, தனது கரங்களால் அதனை விடுவித்தவன், திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“என்னை நம்பாத. நமக்கு கல்யாணமெல்லாம் ஒத்து வராதுன்னு சொன்னா புரிஞ்சிக்கோ. உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன். எங்க அம்மாவையும் சேத்துக் குழப்பாத!
வீட்டுல மாப்பிள்ளை பாக்கலைன்னா சொல்லு. உனக்கு நானே பாத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றுவிட்டு மருந்தக விற்பனை பிரிவின் பக்கம் செல்லத் திரும்ப,
சொடக்கிட்டு சென்றவனை நிறுத்தியவள், “ரொம்பப் பண்ணாத தம்மு. கரையாத எங்கப்பாவை கரைச்சு நம்ம கல்யாணத்துக்கு இப்பத்தான் சம்மதம் வாங்கியிருக்கேன்.
இந்த நேரத்தில எதாவது செஞ்சு நிறுத்த நினைச்சா, நான் என்ன செய்வேன்னு சொல்ல மாட்டேன். அப்புறம் நீ வருத்தப்படுவ.” என்றாள்.
“என்ன வேணா செய்துக்க. எனக்கு நீ வேணாம்” என மனதை இரும்பாக்கிக் கொண்டு அவளிடம் கூற,
“ஏன் எனக்கு என்ன குறை?” என்றவள் அவளைக் கூர்ந்து கீழே ஒரு கனம் பார்த்தவள், தன்னைப் பார்த்தபடியே நிற்பவனிடம்,
“எல்லாம் சரியான அளவுதான இருக்கு!” என்றவள்,
“வேண்ணா நீ வந்து செக் பண்ணிக்கோ…” என தனது மார்பகப் பகுதி, இடை, அதன் கீழ்வரை தனது கரங்களால் சுட்டிக் காட்டிவிட்டு புருவம் உயர்த்திக் கௌதமிடம் கேட்டவள்,
“நான் உன்னை மாதிரி எல்லாம் இங்க தொடாத. இப்டிப் பண்ணாதன்னு உன்னைத் தள்ளி நிறுத்த மாட்டேன்” என்று கூறிவிட்டு, “கமான்…” என கையைக் காட்டி தன்னருகே அவனை அழைத்தாள் பிரகதி.
தலையிலடித்துக் கொண்டவன், “போடீ லூசே!” என்று நகர முனைய,
அவனது கையை எட்டிப் பிடித்து நிறுத்தியவள், “மெயின்ல ஃபியூஸ் எதுவும் போயிருச்சா உனக்கு?” கேள்வியாக கௌதமிடம் வினவ,
என்ன பதில் கூறினான்?
***