Sontham – 18

images (62)

Sontham – 18

அத்தியாயம் – 18

அவனோ அவளை இமைக்காமல் பார்த்தபடி, “அந்த கௌதம் நான் என்ற உண்மை புரியுதா?” என்று கேட்டபடி அவளை நெருங்கினான். அவனின் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டு அவளின் முகம் சிவக்க மெல்ல பின்னாடி நகர்ந்தாள்.

“கௌதம் பக்கத்தில் வாராதே” என்று அவள் எச்சரிக்கை செய்ய அவனோ சிரித்தபடியே அவளை நெருங்கினான். அவள் சுவற்றில் மோதி நிற்கவே, “இது ரொம்ப வசதியாக இருக்கே” என்று சொல்லி அவளின் கரங்களை அரணாக அமைத்து அவளை நகரவிடாமல் செய்தான்.

“இதுக்குதான் வீட்டுக்குப் போலான்னு கூட்டிட்டு வந்தீயா?” என்று அவள் கோபத்துடன் அவனை முறைத்தபடி கேட்டாள்.

“பின்ன போலீஸ்காரன் பார்க்கில் உட்கார்ந்து ரொமான்ஸ் பண்ணினால் நாளைக்கு நியூஸ்ல ஹெட் லைனாக வந்துவிடுமே. ஆனால் இது என் வீடு அதனால் இங்கே யாருமே வரமாட்டாங்க” என்று சொல்லி அவள் இதழ் நோக்கி குனிய அவளோ பயத்துடன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

மெல்ல அவளின் முகத்தை இரு கரங்களில் தாங்கி, “மது” என்றவுடன் அவள் பட்டென்று விழிதிறந்து பார்த்தாள். அடுத்த நொடியே அவளின் இதழில் இதழ் பொருத்தி முத்தமிட அவளின் விழிகள் படபடவென்று அடித்துக்கொண்டான்.

இருவருக்குமே இந்த இதழ் மித்தம் முதல் ஸ்பரிசம் என்பதால் படபடவென்று அடித்துக்கொண்டது இதயங்கள். அவன் ரசனையோடு முத்தமிடுவதை அவள் ரசிக்க அவளின் விழிகளை பார்த்தபடியே  அவளை மூச்சிற்கு தவிக்க வைத்துவிட்டு இதழை பிரித்தேடுத்தான்.

அவள் மயக்கத்துடன் அவனின் தோள் சாய்ந்திட, “மது அப்பா அம்மா ஊரிலிருந்து வந்துட்டு இருக்காங்க. நம்ம கல்யாணத்தை பேச சொல்லலாமா?” அவளை நெஞ்சுடன் சேர்த்து அணைத்தபடி நிறுத்தி நிதானமாக கேட்டான்.

அவனின் மார்பில் தைரியமாக முகம் புதைத்தவள், “இன்னும் ஒரு செமஸ்டர் தன் இருக்கு கௌதம். படிப்பு முடியட்டும் அப்புறம் மேரேஜ் பண்ணிக்கலாம்” என்றாள் விழிமூடியபடி.

“சரி உன் விருப்பத்திற்கு கட்டுபட்டு நானும் இந்த விஷயத்தை கொஞ்சம் தள்ளிபோடுறேன். அதுவரை இந்த மாதிரி லவ் பண்ணலாமா?” என்று கேட்டதும் பட்டென்று நிமிர்ந்தவள், “இப்படி லவ் பண்ணணுமா?” அவன் கண்களில் தெரிந்த உண்மையான நேசத்திற்கு கட்டுபட்டு சரியென்று தலையசைத்தாள்.

அதற்குள் காயத்ரி – அசோக்குடன் அங்கே வந்துவிட நால்வரும் அரட்டையடித்தபடி சாப்பிட்டு முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர். கௌதமை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு காயத்ரியுடன் வீட்டிற்கு கிளம்பிய மது, “மதியிடம் இப்போதைக்கு விஷயத்தை சொல்லாதே காயு. அவளுக்கு வீட்டில் கல்யாணம் முடியட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்றாள்.

அவளின் பேச்சில் இருந்த நியாயம் புரியவே, “சரி மது” என்றாள்.

அடுத்தடுத்த நாளில் நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறையவே யுகேந்திரன் – தனம் இருவரும் டெல்லியிலிருந்து தேனி வந்து சேர்ந்தனர். கௌதம் மதுவிடம் சொல்லி வீட்டில் அனைவருக்கும் ஒரு சப்ரைஸ் கொடுக்க ஏற்பாடு செய்ய சொல்லவே அவளும் அதன்படியே செய்தாள்.

அன்று காலை சீக்கிரமே எழுந்த மது உற்சாகமாக கிளம்புவதை பார்த்த மதி, “ஹப்பா ரொம்ப நாளுக்கு பின்னாடி பழைய மதுவைப் பார்க்கிற மாதிரி இருக்குடி. ஆமா நீ ஏன் கொஞ்சநாளாக டல்லாக இருந்த?” என்று படுக்கையில் சாய்ந்து அமர்ந்தபடி கேட்டாள் மதி.

“நான் எப்போதும் போலத்தான் இருக்கேன். உனக்கு மட்டும் தனியா வித்தியாசம் தெரியுதோ” என்று கேட்டு தப்பிக்க நினைத்தாள் மது.

“நீ ரொம்ப அமைதியாக இருந்துட்டு இருந்தவ. இப்போ எல்லாம் அமைதி அப்படியே இருந்தாலும் எந்த நேரமும் உற்சாகமாக இருக்கிற. இரண்டுக்குமிடையே நிறைய வித்தியாசம் இருக்கு. நீ என்னிடம் மறைச்சாலும் ஒருநாள் உண்மை வெளியே வராமல் போகுமா?” என்று குறும்புடன் கண்சிமிட்டிய மதி எழுந்து குளிக்க சென்றாள்.

அவள் சென்றதும்,“இவ்வளவு வித்தியாசம் தெரியுதா?” என்ற கேள்வியுடன் கண்ணாடியில் தன் முகத்தை ஆராய்ந்தாள். மதி சொன்னது போலவே புத்துணர்வுடன் முகமும் பளிச்சென்று மலர்ந்திருக்க, ‘எல்லாமே அவனால் வந்த வித்தியாசம். இதை இவகிட்ட எப்படி சொல்றது?’ என்று தனக்குள் கேள்வி எழுப்பிக் கொண்டாள்.

மதி குளித்துவிட்டு வருவதற்குள் கீழிறங்கி சென்ற மது, “அம்மா – அப்பா இன்னைக்கு உங்களுக்கு கல்யாண நாள் என்பதால் ஒரு ஸ்வீட் சப்ரைஸ்க்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்” என்று சொன்னபடி பாட்டியின் அருகே அமர்ந்தாள்.

பேத்தியின் கணீர் குரல்கேட்டு, “என்ன மது சத்தம் எல்லாம் ரொம்ப பலமாக இருக்கு. ஆமா அது என்ன ஸ்வீட் சப்ரைஸ். கல்யாண நாள் அவங்களுக்கு தானே? என்னிடம் உண்மையைச் சொல்லலாம் இல்ல” என்று பேத்திக்கு ஐஸ் வைத்தார் ராஜலட்சுமி.

மறுப்பாக தலையசைத்தவள், “உங்களுக்கும் இது இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பாருங்க” என்று சொல்லிவிட்டு சமையலறைக்கு சென்றவள் சிலவகை ஸ்வீட் அண்ட் காரம் செய்வதை பார்த்த தாமோதரனும், தமயந்தியும் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக் கொண்டனர். மதுவின் செயல்களில் வித்தியாசம் தெரிந்தபோது புதுத்துணி போட்டுகொண்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுவர நினைத்தனர்.

அதற்குள் தயாராகி வந்த மதி, “ஹாப்பி வெட்டிங் டே மாம் அண்ட் டேட்” என்று போக்கே கொடுத்து வாழ்த்திவிட்டு தன் கையிலிருந்த டிக்கெட்டை அவர்களிடம் கொடுத்தாள்.

“இது என்ன மதி?” என்று தாமோதரன் கேட்க, “அப்பா அம்மாவை கூட்டிட்டு சிம்லா போயிட்டு வாங்க. இதுதான் நான் இந்த இயர் உங்களுக்கு கொடுக்கும் கிபிட்” என்றாள் மது.

அவர் குறும்புடன் மனைவியைப் பார்த்து, “என்ன தமயந்தி நம்ம இருவரும் போயிட்டு வரலாமா?” என்று கேட்ட கணவனை கோபத்துடன் முறைத்த தமயந்தியை பார்த்து வாய்விட்டு சிரித்தார் ராஜலட்சுமி.

அவர் சிரிப்பிற்கான அர்த்தம் புரியாமல், “ஸ்வீட்டி ஏன் சிரிக்கிற” என்று கேட்டபடி பாட்டியின் எதிரே சென்று அமர்ந்தாள் மதி.

“இப்போ தாமுவை சிம்லாவுக்கு அனுப்பற. அதோட பின்விளைவை ரொம்ப மோசமாக இருக்கு மதி” என்று பாட்டி சிரிப்புடன் சொல்ல தமயந்தி அந்த வயதிலும் வெக்கத்துடன், “அத்தை” என்று செல்லமாக சிணுங்கிவிட்டு வேகமாக சமையலறைக்குள் சென்று மறைந்தார்.

அதே நேரத்தில் தாமோதரன் மனைவியின் மீதே பார்வை பதித்தபடி நின்றிருப்பதை கண்டு, “அப்பா உங்களுக்கு கல்யாண வயசில் இரண்டு பொண்ணுங்கள் இருக்கோம் அதை மறந்துடாதீங்க. சிம்லா சுத்திட்டு வரும்போது தம்பி பாப்பாவுக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் இருந்தால் இப்போவே சொல்லிடுங்க. என்ன மது நான் சொல்றது சரியாதானே?” என்றபடி மதுவையும் தன் பேச்சிற்குள் இழுத்தாள்.

“ஆமா மதி. அப்புறம் நம்ம வெளியே இருந்து கேட்கிற எல்லோருக்கும் பதில் சொல்லணும் இல்ல” என்று அவளும் சேர்ந்துகொள்ள பேத்திகள் இருவரும் சேர்ந்து மகனையும், மருமகளையும் கிண்டலடிப்பதை ரசித்து சிரித்தார் ராஜலட்சுமி.

“என்ன மது நீயும் மதியோட சேர்ந்துட்டு இப்படி பேசற” என்றபடி தமயந்தி சமையலை கவனிக்க, “சரியான வாயாடி புள்ளைகளை பெத்து வெச்சிருக்கேனே” என்று புலம்பியபடி ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தார்.

அப்போது வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், “அம்மா அவங்க எல்லோரும் வந்துட்டாங்க” என்றபடி தாயை இழுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றாள்.

“இவ இவ்வளவு பரபரப்பாக வரவேற்கும் அளவிற்கு யார் வந்திருப்பாங்க” என்ற கேள்வியுடன் ராஜலட்சுமி ஹாலிற்கு செல்ல அவரைப் பின் தொடர்ந்தாள் ஸ்ரீமதி.

அதே நேரத்தில் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்கேட்டு தாமோதரன் வாசலை நோக்கி செல்ல, “யாரு வராங்க மது” என்ற கேள்வியுடன் கணவனைப் பின்தொடர்ந்தாள் தமயந்தி.

டிரைவர் சீட்டிலிருந்து இறங்கிய கௌதம் யாருக்கும் தெரியாமல் குறும்புடன் மதுவைப் பார்த்து கண்சிமிட்ட அவளின் முகம் குப்பென்று சிவந்தது. அடுத்து யுகேந்திரனும், தனமும் காரிலிருந்து இறங்குவதை கண்டு  தாமோதரன், தமயந்தி மற்றும் ராஜலட்சுமி மூவரும் இன்ப அதிர்ச்சியில் நின்றிருந்தனர்.

“தாமு எப்படிடா இருக்கிற” என்ற கேள்வியுடன் யுகேந்திரன் அவரை நோக்கி செல்ல பல வருடங்களுக்கு பிறகு பார்த்த நண்பனை நெஞ்சோடு சேர்த்து ஆரத்தழுவி கொண்டார் தாமோதரன்.

தமயந்தியோ, “ஏன் தனம் தேனியை விட்டு போனதும் எங்களை எல்லாம் மறந்துட்ட இல்ல” என்று தன் உயிர்தோழியை  கட்டியணைத்து கொண்டாள்.

“ஸாரி தமயந்தி. இங்கே வர எங்களுக்கு நேரமே கிடைக்கல” என்று தனம் சொல்லவே, “வாங்க வீட்டுக்குள் போய் பேசலாம்” என்று அனைவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் தாமோதரன்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் ராஜலட்சுமியின் அருகே சென்ற யுகேந்திரன், “அம்மா எப்படி இருக்கீங்க?” என்று விசாரிக்க, “எனக்கு என்னப்பா? நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீதான் ராணுவத்திற்கு போகுபோது தனத்தையும் டெல்லி வர சொல்லிட்டுப் போயிட்ட இப்போ இத்தனை வருஷம் கழிச்சு வந்து நிற்கிற” என்றார் பாசத்துடன்.

தனம் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அவளைத் தூக்கி தோளோடு அணைத்து கொண்டவர், “நீயும் கணவனோட  பேச்சைக்கேட்டு டெல்லியில் இருந்துட்டா இல்ல. நாங்க எல்லாம் உன்னை தேடுவோம்னு நினைக்கவே இல்ல” என்று கோபமாக இருப்பது போல பாவனை செய்தார்.

இதையெல்லாம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த கௌதமின் கண்கள் மதுவை தேடியது. அதே நேரத்தில் மதியோ இவர்களை எல்லாம் பார்த்த சந்தோசத்தில் அமைதியாக நின்றிருந்தாள். அவர்கள் அனைவரும் ஹாலில் அமரவே மதுதான் எல்லோருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.

“மது இவங்களை எப்படி நீ கண்டுபிடிச்ச?” என்று மதி ஆரம்பித்து வைக்கவே மற்றவர்களின் பார்வை மதுவின் மீது நிலைத்தது.

அவள்  என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்து வைக்க, “காயத்ரி ஒரு முறை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தாள். அப்போது ஹாலில் மாட்டியிருந்த போட்டோவை பார்த்து என்னிடம் விவரம் கேட்டாங்க” என்று சொல்லி அனைவரையும் சமாளித்தான் கௌதம்.

யுகேந்திரனும், தனமும் மகனை நம்பாமல் பார்த்து வைக்கவே, ‘இவங்களே நம்மள மாட்டிவிட்டுவிடுவாங்க போலவே’ என்று நினைத்துக்கொண்டே சிரித்து வைத்தான்.

அப்போதுதான் கௌதமை கவனித்த  தாமோதரன், “கௌதம் நீங்க தேனியின் அசிஸ்டெண்ட் கமிஷனர் இல்ல” என்று கேட்க அவனும் ஒப்புதலாக தலையசைத்தான்.

“ம்ம் உன்னால் நிறைய தப்புக்கள் தடுக்கபடுவதாக பேப்பரில் படிச்சேன். நிஜமாவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று மனம் திறந்து பாராட்டினார்.

அவனை இருபது வருடங்களுக்கு பார்த்த தமயந்தி, “கௌதம் இங்கிருந்து போகும்போது ஏழு வயது. இப்போ அசிஸ்டெண்ட் கமிஷனர்ன்னு சொல்றீங்க என்னல நம்பவே முடியல” என்றார் திகைப்புடன்.

“ஏன் தனம் புருஷனை மட்டும் ராணுவத்திற்கு அனுப்பி வெச்சிட்டு இப்போ மகனை போலீஸ் ஆக்கி இருக்கிற என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அவரோ சிரித்தபடி, “சில காரணங்களால் தான் அம்மா அவனை போலீசில் சேர வைத்தேன். நேரம் வரும்போது நானே அவன்கிட்ட சொல்லணும்” என்ற தாயின் பேச்சில் வித்தியாசத்தை உணர்ந்தான் கௌதம்.

அதன்பிறகு பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, “ஹாய் கௌதம். நான் ஸ்ரீமதி” என்று சொல்லி தானே சென்று அறிமுகமானாள் மதி.

“ம்ம் ஏற்கனவே குற்றாலத்தில் பார்த்திருக்கேன்” என்றதும் மதி திரும்பி மதுவைப் பார்த்தாள். அவளோ எல்லோருக்கும் சாப்பாடு செய்ய சொல்லி வேலைக்காரர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். அதனால் மதி சிரிப்புடன் கௌதமிடம் இயல்பாக பேசினாள்.

அதன்பிறகு பெரியவர்களுக்கு வீட்டை சுற்றி காட்டுவதாக சொன்ன மதி பெண்கள் இருவரையும் அலைத்துகொண்டு அங்கிருந்து நகர்ந்துவிடவே, “நீங்க பேசிட்டு இருங்கப்பா. நான் போய் சமையல் ஆகிருச்சான்னு பார்த்துட்டு வரேன்” என்று எழுந்து சென்றார்.

யுகேந்திரன் தாமோதரனிடம் பேசிகொண்டிருக்க தனித்துவிடப்பட்டான்  கௌதம். உடனே தன் போனை எடுத்து கால் செய்தவன், “அப்பா ஒரு முக்கியமான போன் பேசிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து தோட்டத்திற்கு சென்றான்.

“ஏய் மது உன் போன அடிக்குது பாரு” என்றபடி மாடியிலிருந்து குரல்கொடுத்தார் தனம்.

அவள் வேகமாக சமையலறை விட்டு வெளியே வர, “நீ போய் போன் பேசிட்டு வா மது. நான் இங்கே கவனிச்சுகறேன்” என்ற பாட்டிக்கு சரியென்று தலையாட்டிவிட்டு வேகமாக மாடியேறினாள்.

மது அறைக்கு சென்று போனை எடுத்து, “இப்போ எதுக்கு போன அடிச்சிட்டே இருக்கீங்க” என்றாள் கோபத்துடன்.

“என்ன நீ என்னை நடுஹாலில் தனியாக தவிக்க விட்டுட்டு சமையலறையில் உனக்கு என்ன வேலை” என்று எரிந்து விழுந்தான் கௌதம்.

“எல்லாம் சாருக்கு பிடிச்ச உணவை எல்லாம் என் கையால் செஞ்சிட்டு இருந்தேன். அதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருதோ” என்றாள் மது காதலோடு.

“அடியே விருந்து வைக்கிறேன்னு சொல்லி என்னை ரொம்ப தவிக்க வைக்கிற. என்னடி வீட்டைக்கட்ட சொன்னால் இவ்வளவு பெருசாகக் கட்டி வைச்சிருக்காரு உங்க அப்பா” என்று மதுவை வம்பிற்கு இழுத்தான்.

அவளோ தன் அறையில் இருந்த ஜன்னலின் மீது அமர்ந்து, “கௌதம் இதுக்கே சலிச்சுகிட்ட எப்படி? எனக்கும், மதிக்கும் முதல் தளத்தின் வலது புறம் இருக்கும் பெரிய ரூம் மதிக்கும், இடது புறம் இருக்கும் பெரிய ரூம் எனக்கும் ஒதுக்கி இருக்காரு. அதுக்கு நடுவில் எங்களோட படுக்கையறை” என்று அவள் விவரித்தாள்.

அவள் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக கேட்ட கௌதம், “நமக்கு இதெல்லாம் சரிபட்டு வராது மது. நீ அன்னைக்கு வந்தது தான் நம்ம வசந்த மாளிகை. இங்கே இவ்வளவு பெரிய வீட்டில் நீ  எங்கே இருக்கன்னு கண்டுபிடிக்க ரொம்ப லேட் ஆகும். ஆனால் அங்கே அப்படி இல்லையே. அதனால் நம்ம கல்யாணத்திற்கு பிறகு நம்ம அங்கேதான் தங்கபோறோம்” என்று தன் முடிவைத் தெளிவாக கூறினான்.

அவன் அங்கு சுற்றி எங்கு சுற்றியும் இங்கேதான் வந்து நிற்பான் என்று தெரிந்துகொண்டு, “சரி நான் நம்ம வசந்த மாளிகையில் வாழ தயார். சார் எப்போ என்னை முறைப்படி கல்யாணம் பண்ணி அங்கே கூட்டிட்டுப் போவீங்க” என்று கேட்டாள்.

“நீ இப்போ ஓகே சொன்னாலும் சரி. இரண்டு வீட்டு ஆளுங்களும் உள்ளேதான் இருக்காங்க. அவங்ககிட்ட பேசிட்டு பூஜை அறையில் கல்யாணத்தை முடிச்சிட்டு அப்படியே எங்கே வீட்டுக்கு கூட்டுட்டுப் போறேன்” என்றவன் தன் பின்னோடு யாரோ வரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

“கௌதம் ஆன்ட்டி உங்களை உள்ளே வர சொன்னாங்க” என்று சொல்ல, “ம்ம் இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் மதுவை பார்த்ததும், ‘எங்கே உட்கார்ந்து இருக்கு பாரு. கொஞ்சம் கூட பயமே இல்ல’ என்று நினைத்தபடி நின்றான்.

மதி அவனை கேள்வியாக நோக்கிட, “நீங்க போங்க” என்று அவளை அனுப்பி வைத்துவிட்டு, “மது ஜன்னலின் மீது கால்போட்டு உட்காராதே ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. முதலில் கீழிறங்கி வா” என்று மிரட்டிவிட்டு உடனே போனை வைத்தான்.

அவனிடம் திட்டு வாங்கிய பிறகே செய்த செயலின் வீரியம் புரிய, “நான் ஒரு மக்கு” என்று தலையில் தட்டிக்கொண்டே மாடியிலிருந்து கீழிறங்கிச் சென்றாள் மது.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அன்றைய நாள் இனிதாக கழிந்தது. அன்று மாலை கௌதம் வீட்டினரை அனுப்பிவிட்டு மகளிடம் வந்த  தாமோதரனும் – தமயந்தியும்,“இப்படியொரு கல்யாண பரிசை எதிர்பார்க்கல” என்றனர். அங்கிருந்த அனைவரின் மனதிலும் சந்தோசம் நிரம்பி வழிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!